சுவாமி சத்யானந்த சரஸ்வதியை பற்றி, சொல்லும் பொழுது, ''நான்கு காவி உடைகள் அடங்கிய இரண்டு மூன்று பெட்டிகள் அவருடைய அறையில் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். ஒரு நாட்டில் இருந்து இந்தியா வந்த அடுத்த சில மணி நேரத்தில் அடுத்த நாடு நோக்கி பறக்கத்தொடங்கி விடுவார், துணிகளை துவைத்து காயப்போடக்கூட நேரமிருக்காது, அந்த அளவுக்கு அவருடைய ஞானமும் , அதன் தேவையும், உலகிற்கு இருந்தது.'' என சொல்வதுண்டு.
யோகமரபை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த முதன்மை குருமார்கள் 1930 தொடங்கி 2000 வரை உலகின் ஒவ்வொரு மூலையிலும் பறந்தவண்ணம் இருந்தனர். பின்னர் யோகம் அனைவருக்குமான, உடற்பயிற்சி, மற்றும் , தியானம் எனும் பாடத்திட்டமாக மாறியது, உலகில் ஆங்காங்கே யோகமையங்கள் முளைத்தன. நவீன மனிதனின் ,உடல் உள்ளம் போன்றவற்றை மையமாக வைத்து புதிய புதிய ஆசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது, அது நல்ல வரவேற்பையும் பெற்றது, நல்ல வேலைவாய்புள்ள துறையாகவும் மாறியது. இந்த நிலையில் தான் கடந்த இருபது , முப்பது ஆண்டுகளில் யோகத்தின் பலன்கள் பெரிதாக பேசப்பட்டு அதன் அடிப்படை தத்துவமோ , பக்க விளைவுகளோ வெளிச்சத்திற்கு வராமல் ஆனது. ஆக , பிணி நீக்கும் மேலும் ஒரு ' மாற்று மருத்துவம் ' என பரப்பப்பட்டது.
வெற்றியும் கண்டது. உலகம் முழுவதும் , யோகம் என்பது 'மாற்று மருத்துவம்' என சென்று சேரத்தொடங்கியதால். மரபார்ந்த, முழுமையான யோகத்தை கொண்டிருந்த குருகுலங்கள் தங்கள் 'செயல்பாடுகளை ' சற்று குறைத்துக்கொண்டன. நவீன 'கார்பொரேட் யோகத்துடன் ' ''போட்டியிட'' அவை விரும்பவில்லை. ஆகவே, மரபார்ந்த யோகம் விளம்பரம் , வர்த்தகம்,மாபெரும் நிறுவனம் போன்ற எண்ணங்களை கைவிட்டுவிட்டு, அடுத்த நூறு, இருநூறு ஆண்டுகளுக்கான யோகத்தை வடிவமைக்கும் பெரும்பணியில் தங்களை இணைத்துக்கொண்டு, கடந்த இருபது வருடங்களாக படிப்படியாக, பெரும் ஆரவாரம் ஏதுமின்றி அவற்றை செயல் படுத்தி வருகின்றன.
அப்படியான மரபின் தொடர்ச்சி என , முன்வைத்தே நாம் நமது 'வெள்ளிமலை' வகுப்புகளை தொடங்கினோம். கடந்த 15 முகாம்களில் ஒவ்வொரு முறையும் நாம் சொல்வது , ' இங்கு வரும் உங்களை யோக சாதகர்களாக மாற்றுவது தவிர இந்த முகாமிற்கு வேறு நோக்கமில்லை ' என்பதைத்தான்.
நீங்கள் சொல்வது போல, இது குருமார்களின் சொல் ஆகவே இது வளர்ந்தே செல்லும், அப்படி அவர்களின் கருவியாக இருந்து, அவர்களின் சொற்களை மீண்டும் சொல்ல, மலேசியாவில் ஒரு வாய்ப்பு அமைந்தது.
இம்முறை சுவாமி ப்ரம்மானந்தர் அவர்களின் முன்னிலையில், வகுப்புகள் நடைபெற்றன , மூன்று நாளும் சுவாமியின் வேதாந்த உரையுடன் வகுப்புகள் நிறைவடைந்தன.
சுவாமியின் ப்ரம்ம வித்யாரண்யம் எனும் இந்த ஆஸ்ரமமும் அதன் வேதாந்த கல்வியும் , தனது முதன்மை குருநாதரான ' சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்களை முன்வைப்பதால், எனக்கு இது மிகவும் ஆத்மார்த்தமான , கிட்டத்தட்ட நமது வீட்டிலிருக்கும் உறவினர்களுக்கு வகுப்பெடுப்பது போல. சுவாமியின் உரைகள் அனைத்துமே , பத்து நிமிடத்திற்கு ஒருமுறை அரங்கம் அதிர சிரிப்பு அலைகளை உண்டாக்கி அமைபவை.
சுவாமிக்கு இலக்கியப்பரிச்சயம் இருப்பதால் , இரண்டாம் நாள் வேதாந்த உரையில் , புதுமைப்பித்தனும் , ஜி. நாகராஜனும் மையமாக அமைந்தனர் , ' மனிதன், மகத்தானவன்+ சல்லிப்பயல் . என இரண்டு குணங்களையும் கதைகளில் இருந்து எடுத்து கையாண்டார்.
வேறு ஒரு குருகுலத்தில் வந்து வகுப்பு நடத்துகிறோம் என்கிற உணர்வே இன்றி, மிக அணுக்கமாக உணரமுடிந்தது. வகுப்புகளும் கேள்விபதில்கள் , அரட்டைகள் , பயிற்சிகள் , என திட்டமிட்டபடி அமைந்தது.
கடாரம் மாநில , கூலிம் ஆஸ்ரமத்தில் நடந்த 3 நாள் முகாம் போக , லூனாஸ் , பினாங் போன்ற இடங்களிலும், யோகம் சார்ந்த சில உரைகள் ஆற்றினேன்.
நமது வெள்ளிமலை போன்ற அதே பாடத்திட்டத்தை தான் மலேசியாவிலும் அறிமுகம் செய்தோம். ஆகவே பலமுறை கூர்தீட்டி அமைந்தது. என்பதால் வந்திருந்த 130 பேருக்கும் பலனுள்ளதாக அமைந்தது. யோகத்தத்துவம் போன்ற விஷயங்களும் , அதன் அறிவியல் பார்வை மற்றும் , சாதக பாதகங்கள் பேசப்பட்டது அனைவருக்கும் ஒரு புதிய திறப்பாக அமைந்தது. அதை பெரும்பாலானவர்கள் பதிவு செய்தனர். நண்பர் , எழுத்தாளர் அர்வின் குமார் எழுதிய இந்த பதிவு முகாம் பற்றிய ஒரு நல்ல அனுபவப்பகிர்வு.
இந்த முகாமில் மலேசியாவின் இலக்கிய மையம் எனும் ம.நவீன் மற்றும் இலக்கிய வாசக நண்பர்கள் கலந்து கொண்டது மேலும் ஆழமாக சில விஷயங்களை பேசுவதற்கு எதுவாக இருந்தது, நவீன் , அரவின் குமார் , சிங்கப்பூர் லதா , கணேஷ் பாபு , லங்கேஷ் போன்ற நண்பர்களும் கலந்து கொண்டு நுட்பமான சில கேள்விகளையும் அவதானிப்புகளையும் முன் வைத்தனர். ஆகவே வகுப்புகள் பெரும்பாலும் உரையாடல்கள் வழியாகவே நிகழ்ந்தது. எது யோகம் என்பதை விட எதெல்லாம் யோகமல்ல , என்பதை சற்று ஓங்கி உரைக்க வேண்டியிருந்தது.
உதாரணமாக சூரிய நமஸ்காரம், சிரசாசனம் போன்ற பயிற்சிகளின் மீதான 'யோகமோஹம் '. ஒருமணி நேரம் இதன் பக்க விளைவுகளும் அதன் தரவுகளையும் சொல்லவேண்டி இருந்தது. இப்படி பல.
மலேசியாவை விட்டு திரும்ப முடியுமா? இல்ல இங்கியே அடிதடியில் ஈடுபட வேண்டிவருமா எனும் மெல்லிய ....நம்புங்க ....மெல்லிய { மட்டுமே }அச்சம் இருந்தது. ஒருவழியாக தப்பித்து வந்து சேர்ந்தோம் . ஒரே நம்பிக்கை, நவீன் தான். நவீன் பார்க்காத அடிதடிகளா ? என்று.
சுவாமி சிவானந்தரின் சீடரான ' சாந்தானந்த சரஸ்வதி ' அவர்களில் குருநிலைக்கு சென்றிருந்தோம், அவர் அணிந்திருந்த அங்கவஸ்திரம் எனக்கு ஆசியாக அன்புப்பரிசாக வழங்கப்பட்டது. ' தோளில் அந்த துண்டு உங்களுக்கு நல்லாயிருக்கு ' என்று ஆசிர்வதித்து, குருநிரையின் வாழ்த்தென பெற்றுக்கொண்டேன்.
முகாம் முடிந்து இரண்டு நாட்கள் வடக்கு மாநிலங்களுக்கு ஒரு பயணம் சென்று வந்தோம்.
நான் மேலே சொன்னது போல , யோக பயிற்சிகளை பரப்புவதற்கான தேவையும், ஆசனங்களை செய்து காட்டுவதற்கான அவசியமும் முடிந்து விட்டது, இனி 'முழுமையான யோகத்தை வழங்குதல்' மட்டுமே நிகழவேண்டியுள்ளது. அதன் மூலம் சாதகர்களை உருவாக்க முடிந்தால், ஒரு சுற்று முழுமையடையும் என தோன்றுகிறது. அந்த வகையில் இலங்கை பயணமும் , இந்த மலேசியப்பயணமும் தொடக்கம் என கொள்வேன்.
நாம் அந்த முழுமைக்கு நம்மை தயார் செய்து வைத்துக்கொள்வது மட்டுமே முக்கியம் என கடந்த 20 வருடங்களில் அதற்கான சாதனாவில் மட்டுமே இருந்தேன், ஆகவே ஜெயமோகன் போன்ற மாபெரும் ஆசிரியர்கள் விரல் தொட்டு ஆசிர்வதிக்கும் நிலைக்கு தகுதியானேன், இனி அவர்களின் சொற்களை செயலாக்கும் பணி தொடங்குகிறது.அதை செவ்வனே செய்வோம். யோக பயிற்சிகளை செய்து காட்டும் காலம் முடிந்து, யோகவகுப்புகள் இனி யோகதரிசனம் என முன்வைக்கப்படும். 'முழுமையான ஒருங்கிணைந்தநோக்கு '
விருந்தோம்பல் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும், நம்மை விட பல படிகள் மேலான விருந்தோம்பல் கலாச்சாரம் கொண்டவர்கள் தமிழகத்திற்கு வெளியே வாழும் நம்மவர்கள். இலங்கையிலும் இதை கண்டிருக்கிறேன். நவீன் , லதா ,அரவின் குமார் எல்லாம் நண்பர்கள் எனும் கணக்கில் வருவதால், உரிமையுடன் பெற்றுக்கொள்ளலாம், எனினும் குமாரசாமி -ஜெயந்தி தம்பதியினர் , பிரம்மச்சாரி செல்வம் , ஆசிரமத்தில் இருந்த பெண் துறவியரும் , நண்பர்களும் , ஒவ்வொரு நாளையும் துல்லியமாக வடிவமைத்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர், நண்பர் கிருஷ்ணா அந்த ஆஸ்ரமத்தில் ஒரு தேனீ போல சுழன்று வேலைகளை செய்தார். ஒரு குருகுலம் இயங்குவதை அதன் நேர்த்தியை 22 வருடங்களாக கண்டு வருகிறேன், அதன் தொடர்ச்சியை அயலக மண்ணிலும் காண்கையில் சிவானந்தரின் தீர்க்க தரிசனத்தை நினைத்து அவர் பாதங்களை எண்ணி சரணடைந்தேன்.
இவை அனைத்தையும் தன் இனிய புன்னைகையாலும் , சொல்லாலும் செய்துவிட்டு, அமைதியாக விலகி நின்று வழிநடத்தும் சுவாமி ப்ரம்மானந்தர், பல்லாயிர வருட மரபின் தொடரென ,ஆசிரியரென அங்கிருந்தார் . அவர் பாதம் பணிந்து இந்த பயணம் இனி வாழ்நாளெல்லாம் தொடருமெனும் சொல்லை அவர் முன் சமர்ப்பித்து திரும்பினோம்.
முதல் பத்தியில் சொன்னது போல சத்யானந்தரின் சொல்லுடன் , இனி யோக வஸ்திரமும் , யோக சாஸ்திரமும் இனி பெட்டியில் தயார் நிலையில் இருக்கட்டும் , ' Spread YOGIC WISDOM door to door, Shore to shore-' என்று அவரின் சொல்லை எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் .
இந்த முகாமிற்கு யோக வேதாந்த தரிசனம் என்றே பெயரிட்டோம்.
இனி யோகப்பயிற்சிகள் அல்ல யோகதரிசனம் தொடரும்.
சௌந்தர்.G