Saturday, March 28, 2020

Tuesday, March 3, 2020

பெருநதியும் படித்துறையும்

ஒவ்வொரு நாளும் ,  நாம் குறைந்தது  50 புதிய/ பழைய  தகவல்களையாவது  வெவ்வேறு  பக்கங்களிலிருந்து ,பெற்றுக்கொண்டே  தான்  இருக்கிறோம் , தகவல்கள்  எனும்  பெருநதியில்  திளைக்கிறோம்  என்றே 

சொல்லவேண்டும்.  

ஒரு நாளைக்கு  12000 முதல் 60000 வரை  நமக்கு  எண்ணங்கள்  உருவாகிறது  என்கிறது  அமெரிக்காவை  தலைமையகமாக கொண்ட   தேசிய  அறிவியல் கழகம் . 

சரி அதனாலென்ன ?

Information fatigue syndrome- எனும் பதம்,  தகவல்களால்  நாம் நிறைந்து  வழியும் பொழுது  உண்டாகும் சோர்வையும்  நோய்க்கூறையும்  குறிக்கிறது. 

ஜார்ஜ் சிம்மெல்{ Georg Simmel (1858-1918) என்கிற சமூக  அறிவியலாளர் தான், முதலில் இந்த வார்த்தையை 1900ல் பிரயோகம்  செய்கிறார் . பின்னர் 1970ல் ஆல்வின் டாப்லர்{ Alvin Toffler}   எழுதிய புகழ்பெற்ற  புத்தகம் '' Future Shock'' - சமூக  வலைத்தளங்கள்  முதல்  பக்கத்து வீட்டுக்காரர்  வரை  நம்மீது  திணிக்கும்  ''தகவல்கள் ' பற்றி  பேசுகிறது .நவீன  சிந்தனையாளர்  யுவால் நோவா  ஹராரி  வரை  காலங்காலமாக , இந்த வகை  ''அதீத  தகவல் சேகரிப்பு '' -பற்றிய  ஒவ்வாமை , பயம்   பேசப்படுகிறது .  இந்த வகை  over loaded informations  உண்டாக்கும் உடல்  மற்றும் மன  நோய்கள் என  ஒரு நீண்ட  பட்டியல் இருக்கிறது . உலக பெரும் பத்து  நோய்களில், மூன்று  நோய்கள்  இவ்வகையை  சார்ந்தது.  இதில்  264 மில்லியன்  மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளது, { இந்த  எண்ணிக்கை குறைவு  என்றே தோன்றுகிறது } பற்றி  உலக சுகாதார மையம்    { WHO}எச்சரிக்கை  செய்கிறது.

பொதுவாகவே  எல்லாவற்றையும் அறிவியலாக்கி  பார்க்க வேண்டிய  அவசியமில்லை என்ற  எண்ணம்  எனக்கு  உண்டு , அதே   வேளையில்  மேலே  சொல்லப்பட்ட, தரவுகளை  தாண்டியும் , தினசரி  வாழ்வில்  நம்மை  சுற்றி இருப்பவர்களை  அவதானித்து , அனுபவங்களை  பெறுகையில் , இந்த  புள்ளி விவரங்களை  மிஞ்சும்  அளவில்   இதன்  பாதிப்பு  சமூகத்தில்  உள்ளது  என்பதே  உண்மை. 

இதுபோன்ற, மனித  சிக்கல்களை  நமது  மரபு  எப்படி  அணுகுகிறது  என்பதே, ஒரு முழுமையான  பார்வையாக  இருக்கும்  என மேலும்  தேடுகையில் .  இரண்டு  சொல்லாட்சிகள்,  இந்த  சிக்கலை  மிக  நெருக்கமாக அணுகுகிறது.

ஒன்று:- பதஞ்சலியின்  "சித்த வ்ருத்தி  நிரோதஹா  யோகாஹ் ''- சித்தப்பெருக்கை  தடுக்கும்  செயலே  யோகம் .

அடுத்த சொல் :-   ''அந்தர்  மௌன'' - உள்ளார்ந்த  அமைதி  .

இதில்  அந்தர்  மௌன - என்பது ''பிரத்யாஹாரம்'' -  எனும்  புலன்களை  உள்முகமாக  திருப்பும்  ஒரு  பயிற்சி முறை. தொலைதூரத்தில்  கேட்கும்  சப்தத்தில்  தொடங்கி  இதய  துடிப்பு முதல்  ஒவ்வொரு  சப்தமாக  கவனித்து , எண்ணங்களை  கட்டுப்படுத்தாமல்   தொடர்ந்து  மனத்திரையில்  ஓடவிடுதல் . நாம்  இங்கே   பயிற்சி  கற்றுக்கொள்ள போவதில்லை ,  மாறாக  இது  எப்படி  செயல்படுகிறது  என்பதை  ஓரளவு  புரிந்துகொள்ள  முயலலாம் . கவனிக்கப்படும்  எந்த  செயலும்  சமன் கொள்ளவேண்டும்  என்பது  உலக நியதி.

 குறும்புத்தனத்தால்  வீட்டையே  இரண்டாக்கிக்கொண்டிருக்கும்  குழந்தை  முதல் , பதற்றத்தால்  துடிதுடித்துக்கொண்டிருக்கும்  இதயம்  வரை , நம்மிடம்  கோருவது  '' கவனம்' ' என்பதையே . நாம்  கவனிக்க  தொடங்கிய  சில  நிமிடங்களில் இரண்டும்  நிலை கொள்வதை  காணமுடியும் . எனினும்  அது  அவ்வளவு  எளிதான  காரியமல்ல .

Generally we tend to allow 'good' thoughts to arise to conscious perception; we accept and enjoy pleasant thoughts. When an unpleasant, painful or 'bad' memory or thought arises, we tend to quickly push it back down into the subconscious layers of the mind. This is suppression and we all do it. Everyone has mental suppressions. Often we are conditioned to do it from childhood. But suppression is definitely not the answer.-  என்கிறார்  சுவாமி  சத்யானந்த  சரஸ்வதி . 

அடுத்ததாக  பதஞ்சலியின்  சூத்திரம்  சொல்லும் '' சித்தப்பெருக்கை  தடுக்கும்  செயலே  யோகம்''.   நமது  மரபில்  ஒவ்வொரு  அக ,புற  சிக்கல்களுக்கும்  ஒருவித  பயிற்சியை , ஒழுக்கத்தை , சடங்கை  கோருவது  அடிப்படை விதி . அதை  நடைமுறை  படுத்துவதும் , செயல் படுத்த முடியாததும்  அவரவர்  விருப்பம்.  சித்த  பெருக்கை  தடுக்க  பதஞ்சலி  அஷ்டாங்க  யோகம்  எனும்  எட்டு  நிலைகளாக  பயிற்சி முறையை  சொல்கிறார். இதில்  ஏதேனும்  மூன்று  அல்லது  நான்கு  நிலைகளை , தினசரி  வாழ்வியல் முறையாக  கடைபிடித்தால் கூட , ''ஹேயம்  துக்கம்  அனாகதம் '' - வரவிருக்கும் துன்பத்தையும்  தடுக்க முடியும்  ''-  என்கிறார். 

 மரபு  வெறும்  நம்பிக்கையை  மட்டும்  கோருவதில்லை , ஒரு  ஒழுக்கத்தை , ஒரு வாழ்வியல்  முறையை  முன்வைத்து  நம்பிக்கையை  கோருகிறது. உலகியல்  வாழ்வு முதல்  ஆன்மீக  வாழ்வு வரை  அனைத்திற்குமான  அடிப்படை  பாடம்  இது .

இமயத்தில்  தொடங்கி , வங்கம் வரை 1500 மைல்கல்  பயணிக்கும்  கங்கையின்  இரு கரைகளிலும்  ஆயிரக்கணக்கான  படித்துறைகள்  உண்டு . ஒவ்வொரு  பருவத்திற்கும்   தகுந்தாற்போல  படித்துறை கற்களை  மூழ்கிய படியும் , தொட்டுக்கொண்டும் , விலகியும்  நதி  ஓடிக்கொண்டே  தான்  இருக்கிறது,  நம்  சித்தத்தை போல.      எனினும்  "தண்" என்ற  குளுமையுடன், லட்சக்கணக்கான  பிரவாகங்களை  கண்ட பின்பும், இங்கே  பல்லாயிரம்  படித்துறைகள் என  நின்று கொண்டிருப்பவையே   நம்  மரபு  .

யோகா  ஒரு  ''சர்வரோக  நிவாரணி''  என்பதை  சொல்ல இந்த  கட்டுரை முயலவில்லை, மாறாக  ஒவ்வொரு  நவீன  சிக்கலுக்கும் மரபில் தீர்வு  என  ஒரு  வேரும், விதையும் ,விருட்சமும் ,   நிச்சயம் இருக்கும் .  இந்த மொத்த  கட்டுரையிலும்  யோகா  எனும்  வார்த்தையை  எடுத்துவிட்டு , ஆயுர்வேதம் , என்றும் தாந்த்ரீகம்  என்றும் ,பக்தி  என்றும்  போட்டு  வாசித்தாலும் ஒரே பொருளை  அளிக்கும் .

Tuesday, March 10, 2020

யுவால்களும் , வைரஸ்களும் தோற்கும் இடம்

மீம் க்ரியேட்டர்கள்  என்கிற  ஒரு இனக்குழு, ஒவ்வொரு  சமூக  நிகழ்வுக்கும்  உடனடியாக  சில, பல  படங்களை  தேடி  எடுத்து  அதில்  ஒன்றிரண்டு  வார்த்தைகளுக்குள் , மொத்த  சிந்தனையையும்  சொல்லிவிட  துடிக்கும்  இனம்  அது. அதிலும்  தமிழில்  வடிவேலு மட்டும்  இல்லையெனில்  இந்த  ''மீம் க்ரியேட்டர்'' இனமே  அழிந்துவிடும்  ஆபத்தும் உள்ளது. அவர்களது இன்றைய  'களம் '' என்பது  ''கொரோனா''.  ஒரு  வைரஸ் இனம் மனித  சமுதாயத்திற்கு உலகின்  ஒரு பகுதிக்கு  அச்சுறுத்தலாகவும் , மறு பக்கத்திற்கு , மீம்  செய்தியாகவும் இருந்தாலும், உலககவனம் பெற்று விட்டது என்பதே  உண்மை .

இந்நிலையில்,   ''வைரஸ்கள்''  எனும்  இனமும்  மனித இனமும் ( விலங்கு இனத்தை  இப்போதைக்கு  விட்டுவிடலாம்) கடந்த காலங்களில்  மாறி மாறி  விளையாடிய  "கொன்று குவித்தலும்", "வென்று எழுதலும்" தொடர்ந்து  நிகழ்ந்த வண்ணம் இருந்திருக்கிறது , அது போலவே  வேறு சில  மாபெரும் கொலைக்களங்கள், போர்  என்றும், பஞ்சம்  என்றும் "உருவாக்கப்பட்ட பஞ்சங்கள்  என்றும்  நம்மை நாமே  அழித்துக்கொண்டும், இங்கு வந்து சேர்ந்திருக்கிறோம் . எனினும் வைரஸ் எனும் இனமோ நம்முடன்  ஒட்டிப்பிறந்த சகோதரன்.
வேளாண் சமூகமாக , மனித இனம்  மாறிய பின்னரே பெருவாரியாக பரவுகின்ற, அல்லது தொற்று நோய்  பற்றிய தரவுகள், ஓரளவேனும்  நமக்கு கிடைக்கிறது. அதற்கு முன் நடந்த  பெரும்சாவுகள் பற்றி, புனைவுகளை இட்டு நிரப்பிக்கொள்ளவே முடியும்.

''வாரியோலா-மைனர்''  மற்றும்  ''வாரியோலா-மேஜர்''  எனும் இரண்டு வைரஸ் சகோதரர்களால் ,  கடந்த  நூறு ஆண்டுகளில் மட்டும் கொன்று குவிக்கப்பட்ட மனித இனத்தின் எண்ணிக்கை ஐநூறு  மில்லியன்கள் . என்கிறது உலக சுகாதார அமைப்பு . மேலே சொன்ன இரண்டு வைரஸ்களும் வேறு யாருமல்ல   நமக்கு பரிச்சயமான ''பெரியம்மை' நோயை  தந்த வைரஸ்கள் தான்.இந்த வைரஸ் கிருமிகள் மனித இனத்தை வென்று, இருநூறு வருடங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலகட்டம் அது,  17ஆம்  நூற்றாண்டின் பிற்பகுதி , இங்கிலாந்திலிருந்து  ஒரு ஆராய்ச்சியாளர் , மருத்துவர், 'எட்வார்ட் ஜென்னர்',  முழுவிசையுடன்  இந்த வைரஸ்களுடன் போராட துணிகிறார் , எஞ்சிய வாழ்நாளையெல்லாம் , ''பெரியம்மை '' நோய்க்கு  மருந்து கண்டடைய செலவளிக்கிறார் , மனித இனத்தின்  காவல் தெய்வமென , ம்ருத்யுஞ்சயன் என ,தோன்றி 1798ல் , அந்த அமிர்தத்தை  {பெரியம்மை நோய் தடுப்பூசி } அடைகிறார். அந்த காலகட்டத்தில் நெப்போலியன் தன்  பிரஞ்சு படைகளுடன்  பிரிட்டன் மீது போர் தொடுத்துக்கொண்டிருந்த  நேரம் , எனினும் பெரியம்மை நோய்  பாதிக்கப்பட்ட அனைத்து  பிரஞ்சு படை வீரர்களுக்கும் தனது கண்டுபிடிப்பு கிடைக்க  ''எட்வார்ட் ஜென்னர்''  வழி செய்கிறார் ,இந்த செயலை பாராட்டி , நெப்போலியன்-1, ஜென்னருக்கு பதக்கம் அணிவித்து கௌரவம் செய்ததுடன் , ஜென்னரின் வேண்டுகோளின்படி  இரண்டு பிரிட்டன் போர் கைதிகளை விடுதலை செய்கிறார் , மேலும்  நெப்போலியன்-1  தனது  சாசனத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ''மானுடகுலத்திற்கு  மாபெரும் உயிர்க்கொடை அளித்த இந்த மாமனிதரின் எந்த கோரிக்கையையும் என்னால் நிராகரிக்க முடியவில்லை''-என.  கடந்த   200 வருடங்களில்  பெரியம்மை முற்றிலுமாக ஒழிக்கப்ட்டுள்ளது , 1980ல் உலக சுகாதார அமைப்பு இந்த நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக  அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

நம் உடலில், நோய்க்கூறு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் சரியான தடுப்பு மருந்துகளால், கட்டுப்படுத்தப்படாத போது  உயிர்க்கொல்லியாக மாறிவிடுகிறது என்பது அனைவரும் அறிந்தது தான் , உதாரணமாக  காசநோய் ,முதல்   நிமோனியா வரை. பல்வேறு  அறிவியலாளர்கள் , மருத்துவர்கள், 19ம்  நூற்றாண்டின்  தொடக்கத்தில் , இந்த வகை பாக்டீரியாவுடன்  போராட, 'ஆண்டி-பயாடிக்'- எனும் நோய் எதிர்ப்பு  மருந்தை கண்டுபிடிக்கும்  முயற்சியில் இருக்கின்றனர். அதில் ஒருவர்  தான் ஸ்காட்லாந்தை சேர்ந்த ''சர். .அலெக்ஸாண்டர் ப்ளெம்மிங்''.
 தொடர்ந்து ஆராய்ச்சி கூடத்தில் தன்  இரவு பகல் முழுவதையும் செலவழித்து ,சோர்ந்து , சலித்து , ஒருநாள் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க, ஊர் சுற்றிவர  கிளம்புகிறார். ஆய்வுக்கூடத்துக்கே உண்டான, ரசாயனங்களும் , புத்தகங்களும் , கண்ணாடி குடுவைகளும்  சிதறி பரவிக்கிடக்கும்  தனது மேசையை அப்படியே விட்டுவிட்டு, ஒருநாள் விடுப்பில் செல்கிறார். திரும்ப வந்தவருக்கு ஒரு ஆச்சரியமும் இல்லை , தன் மேசையை ஒதுங்க வைக்கும்போது,முதல்நாள் சாப்பிட்டு விட்டு பாதியில் வைத்துவிட்ட, ரொட்டித்துண்டில்  ஒட்டியிருக்கிறது, 'அலெக்ஸ்சாண்டர் பிளெம்மிங்'கிற்கு  ஆச்சரியமும் , மனித குலத்துக்கான உயிர்காக்கும்  மருந்தும். ''பூஞ்சை'' எனும் வடிவில்.   பூஞ்சையிலிருந்து மேலும் முன்னகர்ந்து  1928ல் ''பெனிசிலின்''  எனும் உயிர்காக்கும் சஞ்ஜீவினியை கண்டுபிடிக்கிறார் . உலகம் அதை ஏற்றுக்கொள்ள மேலும் 12ஆண்டுகள் பிளெமிங் போராட வேண்டியிருந்தது , பல்வேறு நபர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு, நிறுவப்பட்டு, பின்  1940ல் உலகம் ஏற்றுக்கொண்டது.

ஒவ்வொருமுறையும், வைரஸ்களும், வேறு சில உயிர்க்கொல்லிகளும் மேலெழுந்து, மனிதர்களை கொன்று குவிக்கும்போதெல்லாம், உலகத்தின் எங்கோ ஒரு மூலையிலிருந்து, தன் அனைத்து வல்லமையுடனும் ஒரு தன்வந்திரி, கையில் அமுத கலசமும் , அபய முத்திரையுடனும், எழுந்து வந்து  சொல்கிறார் ''அஞ்சேல்''.  சமீபத்தில்  ஆயுர்வேத வைத்தியரும், நண்பருமான சுனில் கிருஷ்ணனுடன் உரையாடுகையில் ,' மனித உயிர்குல ரட்சகர்களாக,  இந்திய மண்ணிலும்  சரகர் முதல்  மஹாத்மா காந்தி வியந்து நோக்கிய, ஆயுர்வேத கவிராஜ் கணநாத் சென் வரை ஒரு நீண்ட வரிசையை சொன்னார், அவ்வரிசையில்  வடசென்னையின் ' ''அஞ்சு ரூபாய்'' டாக்டர் எனப்படும் எஸ் .ஜெயச்சந்திரன் வரை  நீட்டிக்கொள்ளலாம்  என்று தோன்றுகிறது.

நவீன சிந்தனையாளர்கள் ,மானுடவியலாளர்கள் , ஜாரெட் டைமென்ட், யுவால் நோவா ஹராரி, போன்றோர்  மிக விரிவாக  கடந்த 50ஆயிரம் வருட பரிணாம வளர்ச்சி ,மற்றும்  சமகால தேவை ,வருங்கால  பிரச்னைகள் மற்றும் அதற்கான  தீர்வுகள், என  கவனத்துடனும் , எச்சரிக்கையுடனும்,  மானுடம் நோக்கிய  சவால்களை முன் வைக்கிறார்கள். அவர்களின் மகத்தான சிந்தனைகளையும் தாண்டி அவர்கள் சற்றும் எதிர்பாராத திசையிலிருந்து  அல்லது  பாதாள தெய்வமென  எங்கிருந்தோ  வைரஸ்களும், அதனுடன் போராட  'பிளெமிங்' குகளும் உருவாகி,   இந்த 'அழித்தல்' ,'வென்றெடுத்தல்'  எனும் அலகிலா விளையாட்டை  ஆடிய வண்ணம் உள்ளனர். அறிவாளிகளும் , வைரஸ்களும்  ஒரு நோக்கமும்,முடிவும் , எதிர்பார்ப்பும் வைத்து காத்திருக்கும் வேளையில், அதற்கு நேர் எதிர் திசையில் இயங்குகிறது, மனித உயிரில் உறையும்  'இச்சாசக்தி' எனும் இயற்கை.

''ஆதித்ய  வர்ணாம்  தமஸா பரஸ்தாத்''- ( ''இந்த தாமச, காரிருளுக்கு அப்பால் ஆதித்ய வர்ணம் என கதிரவனின் ஒளி நிரம்பியுள்ளது'') -என்கிற புருஷ சூக்தத்தின் வரிகள் தான் நினைவில் எழுகிறது. இனி கொரோனா வைரஸுக்கான மருந்துடன் உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து, ஒருவர் எழுந்து வரும்வரை, பூண்டு ரசமும், ஜாதகத்தில் களம் மாறி அமர்ந்த, சந்திர, செவ்வாய் கிரகங்களுக்கான பரிகாரங்களுடன், கொரோனாவுடன் போராடுவோம். .

Thursday, March 5, 2020

பாரபாஸ்

தேவகுமாரனுக்கு ஆட்டுக்குட்டி  அளிக்கும் மீட்பு 

பாரபாஸ் 
நோபல்  பரிசு  பெற்ற  நாவல் 
பேர்  லாகர் குவிஸ்ட் 
மூலம் - ஸ்வீடிஷ் 
தமிழில் - க.நா.சு.

சில  இலக்கிய படைப்புகள் , அதன்  வசீகரமான  பெயரால்  நம்மை  வாங்க  வைத்து, ஏமாற்றி விடுபவை, எனினும்  சில பெயர்கள்  நம்மை  ஒருபோதும்  கைவிடாதவை, ஓஷோ ,தாஸ்தோயெஸ்கி ,ஜெயகாந்தன் , ஜெயமோகன் ,என  ஒரு வரிசை உண்டு , அதேபோல  நோபல்  பரிசு  பெற்ற, சாகித்ய  விருது , போன்ற  சொற்களுக்கும்  இங்கே  ஒரு இடம்  உண்டு,  சமீபத்தில் படித்த  அப்படி  ஒரு ஆக்கம்  தான் , க.நா.சு மொழிபெயர்த்த , பாரபாஸ்  நாவல் . 

பாரபாஸ் -அம்மா இல்லாத  சொல்லப்போனால்  அப்பா  யாரென்றும்  சொல்லமுடியாத  ஒரு உற்சாகமான,  கொலை மற்றும்  கொள்ளைக்காரன்.  பாஸோவர் {பாஸ்கா } விருந்து  சமயத்தில்  யாராவது  ஒரு  கைதியை  விடுதலை  செய்வார்கள்  என்பது   எதிர்பார்க்கப்பட்ட  விசயம் தான் , எனினும்  அது  பாரபாஸாக  இருந்தான்  என்பது  அதிஷ்டம்  தான். சாத்தானின்  சார்பாக  கிடைத்த  அதிஷ்டம், அதே  சிலுவையில்  ஏற்றப்பட்ட  மெலிந்த உடலோ தேவகுமாரனுடையது.
இப்படி தொடங்கும்  கதை  பாரபாஸ்  வாயிலாக இயேசுவை அணுகும்  முயற்சி.

இங்கு ஒரு   மகத்தான  செயலின் பொருட்டு வந்து, தன்னை  அர்ப்பணித்து வாழ்ந்து, செல்பவர்களின்  மரண  தருவாயும், அவர்கள்  வாழ்க்கைக்கு  இணையான  உன்னதங்களை  கொண்டது . புராண மாந்தர்கள்  ராமன், கிருஷ்ணன் முதல் ,தன்   மெலிந்த  தேகத்தில்  தோட்டாக்களை பெற்றுக்கொண்ட தேசப்பிதா  வரை.

அது  போன்ற மரணத்திற்கு பின்னர் தான்  அவர்கள்  தெய்வமாகவோ, மஹாத்மாவாகவோ  ஆகிறார்கள் .ஒருவகையில்  அந்த  மரணமும்  அவர்களின்  மாபெரும்  செயலின்  ஒருபகுதியே.

கொல்கொதா  மலையில் , கிறிஸ்து  மரிக்கும் வேளையில் , அனைவரின் கண்களும் குருடாகும்படியான, அடர் இருள்  தோன்றி, உலகை  மறைக்க , பிரகாசமான  ஒளியோ ஒரு சில  நொடிகள் பாரபாஸ் கண்களை  ஊடுருவி அவனுக்குள்  நிறைகிறது.   இவனுக்கான  சிலுவையை  ஏற்றுக்கொண்ட  அந்த  மனிதர்.' என் கடவுளே  என் கடவுளே  என்னை  ஏன்  கைவிட்டீர்'' என  கத்தினார். பின்னர்  சில நொடிகளில்  அனைத்தும் முடிந்து  விட்டது. இயேசு  அடையும்  ஆத்ம விடுதலையை , அவர் தன்   தந்தைக்குள்  ஐக்கியமாவதை காணும்  ஒருவன், பாரபாஸ்
மீதி  நாவல் முழுவதும்  பாரபாஸின்  இறுதி காலம் வரை  அவனுள்  நடக்கும் , நாஸ்தீகத்துக்கும்,  குருட்டு நம்பிக்கைக்குமான  போராட்டம்  தான்.
இயேசு  மரித்து, அவர்  சீடர்களால்  அடக்கம்  செய்யப்பட்ட  கல்லறை  அருகே  சில நொடிகள்  நிற்கிறான், இவனுக்கு  பிரார்த்தனை செய்வது  பற்றியெல்லாம்  ஒன்றும்  தெரியாது . அங்கிருந்து  கிளம்பி  நேராக  தன்  பழைய  நண்பர்களுடன்  கூத்தும் , குடியுமாக , கொண்டாட்டமான, வாழ்க்கைக்குள்  செல்கிறான். ஆனால்  உள்ளே  ஏதோ ஒன்று   ' நகர்ந்து' விடுகிறது . என்னவென்று  அறிய முடியவில்லை , எனினும்  பழைய உற்சாகம் , கொள்ளை சம்பவங்களில்  ஆர்வம் , காம விளையாட்டுகள்  எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக, குறைகிறது. வயது கூடிச்செல்கிறது .
கிறிஸ்துதுவின் போதனைகள், அவர் செய்த அற்புதங்கள் , அவர்  சொன்ன  ''ஒருவரை  ஒருவர்  நேசிக்க வேண்டும்''  என்கிற  உபதேசங்கள்  அனைத்தும்  இவனுக்குள்  ஒவ்வாமையை , சலிப்பை , நம்பிக்கையின்மையை , தருகிறது. அதன் நேர்  எதிர் திசையில் , பாரபாஸின்  வாழ்வில்  நடக்கும்  சம்பவங்கள். அவனுள்  ஒரு  நிலைகொள்ளாமையை  உருவாக்குகிறது.   இயேசு மேல்  நம்பிக்கை  கொண்ட, அவரை  குருநாதராக  ஏற்றுக்கொண்ட , அவரால்  பயன்பெற்ற , அவர்  உயிர்ப்பித்த , அவர்  தொட்டு  நோய்  குணமான , என்று  தொடர்ந்து  நம்பிக்கையாளர்களை  தேடி சென்று  சந்திக்கிறான் .
மரண தண்டனையில் இருந்து  விடுதலை  பெற்ற  பாரபாஸ் , அடுத்தடுத்து  கொள்ளையானாக , அடிமையாக, கைதியாக , தெருவில்  சுற்றுபவனாக  என  அலைக்கழியும் போது ,ஒவ்வொரு முறையும்  இவனுக்கு  கிடைக்கும்  மரண  அல்லது  அதற்கு  நிகரான  தண்டனைகள்  அனைத்தும் , இவனுக்கு  அருகில்  இருக்கும்  வேறு ஒருவருக்கு  வழங்கப்பட்டு ,கிடைக்கும்   கடைசி நிமிட  விடுதலை,அவனுக்கு   அகக்கொந்தளிப்பை  அளிக்கிறது . ஒருவகையில்  பாரபாஸின்  ''விடுதலை''  என்பதே  அவனுக்கான  தண்டனையாக  ஆகிறது. மரணத்தின் மீது  மிகப்பெரிய  பயம் கொண்டவன், அந்த  பயத்தை  மறைக்க ,உலகியல் இன்பங்களில்  திளைப்பவன், திளைத்தபின்

மீண்டும்  தன்னிரக்கமும், வெறுப்பும் கொள்பவன்  என  அலைகிறான்.
வாலிபம் முடிந்து  முதியவனாக  தொடங்கும்  நிலையில்  ஓரிடத்தில்  அடிமையாக, சேருகிறான் . இவன் சக அடிமை  இயேசுவின்  போதனைகளால்  கவரப்பட்டு ,அனுதினமும் சுவர் நோக்கி  முழந்தாளிட்டு  பிரார்த்தனை  செய்பவன். முதல் முறையாக  இந்த  சடங்கினால்  கவரப்பட்டு, இருவரும்  பிரார்த்தனை  செய்கின்றனர். ரோமாபுரி சட்டத்தில்  இது  குற்றம்  என்பதால்,

''தனக்கு   பதிலாக சிலுவையில் இறந்து  மார்பில் மயிர் இல்லாத ,வெளுத்து மெலிந்த தேகத்தினனாகிய  அந்த  ஞானிக்காக பாரபாஸ் துயரம் அடைந்து  தண்டிக்கப்பட்டது  அது தான்  முதல் தடவை '' -
மற்றும்  இறுதி  அத்தியாயத்தில்
''என் ஆத்மாவை  உனக்கு  அளித்து  விடுகிறேன் '' என்று  கூறியவாறு உயிர்  துறக்கிறான்''.- என்கிற  நாவல்  வரிகள்.

உலகை மீட்க வந்த  தேவகுமாரன் , பாரபாஸ் போன்ற  ஒரே ஒருவனுக்கு  தரும்  ஆன்ம விடுதலை மூலம், தனக்கே  தனக்கான மீட்பையும்  அடைகிறார். ஒருவகையில் வழிதவறிய  ஆட்டுக்குட்டி அடையும் ஞானத்தால்,  மேய்ப்பனுக்கு கிடைக்கும்  மீட்பு  இது.
பைபிளின்  ஒரே  ஒரு  இடத்தில் மட்டுமே  வரும்  சிறிய, மனிதனை  வைத்து, அபாரமாக சொல்லப்பட்ட  தவறவிடக்கூடாத  நாவல்களில்  ஒன்று. சிறிய நூல் எனினும் பல்வேறு  வாசிப்பு  சாத்தியங்கள்  கொண்டது.

Tuesday, March 3, 2020

பெருநதியும் படித்துறையும்

ஒவ்வொரு நாளும் ,  நாம் குறைந்தது  50 புதிய/ பழைய  தகவல்களையாவது  வெவ்வேறு  பக்கங்களிலிருந்து ,பெற்றுக்கொண்டே  தான்  இருக்கிறோம் , தகவல்கள்  எனும்  பெருநதியில்  திளைக்கிறோம்  என்றே 

சொல்லவேண்டும்.  

ஒரு நாளைக்கு  12000 முதல் 60000 வரை  நமக்கு  எண்ணங்கள்  உருவாகிறது  என்கிறது  அமெரிக்காவை  தலைமையகமாக கொண்ட   தேசிய  அறிவியல் கழகம் . 

சரி அதனாலென்ன ?

Information fatigue syndrome- எனும் பதம்,  தகவல்களால்  நாம் நிறைந்து  வழியும் பொழுது  உண்டாகும் சோர்வையும்  நோய்க்கூறையும்  குறிக்கிறது. 

ஜார்ஜ் சிம்மெல்{ Georg Simmel (1858-1918) என்கிற சமூக  அறிவியலாளர் தான், முதலில் இந்த வார்த்தையை 1900ல் பிரயோகம்  செய்கிறார் . பின்னர் 1970ல் ஆல்வின் டாப்லர்{ Alvin Toffler}   எழுதிய புகழ்பெற்ற  புத்தகம் '' Future Shock'' - சமூக  வலைத்தளங்கள்  முதல்  பக்கத்து வீட்டுக்காரர்  வரை  நம்மீது  திணிக்கும்  ''தகவல்கள் ' பற்றி  பேசுகிறது .நவீன  சிந்தனையாளர்  யுவால் நோவா  ஹராரி  வரை  காலங்காலமாக , இந்த வகை  ''அதீத  தகவல் சேகரிப்பு '' -பற்றிய  ஒவ்வாமை , பயம்   பேசப்படுகிறது .  இந்த வகை  over loaded informations  உண்டாக்கும் உடல்  மற்றும் மன  நோய்கள் என  ஒரு நீண்ட  பட்டியல் இருக்கிறது . உலக பெரும் பத்து  நோய்களில், மூன்று  நோய்கள்  இவ்வகையை  சார்ந்தது.  இதில்  264 மில்லியன்  மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளது, { இந்த  எண்ணிக்கை குறைவு  என்றே தோன்றுகிறது } பற்றி  உலக சுகாதார மையம்    { WHO}எச்சரிக்கை  செய்கிறது.

பொதுவாகவே  எல்லாவற்றையும் அறிவியலாக்கி  பார்க்க வேண்டிய  அவசியமில்லை என்ற  எண்ணம்  எனக்கு  உண்டு , அதே   வேளையில்  மேலே  சொல்லப்பட்ட, தரவுகளை  தாண்டியும் , தினசரி  வாழ்வில்  நம்மை  சுற்றி இருப்பவர்களை  அவதானித்து , அனுபவங்களை  பெறுகையில் , இந்த  புள்ளி விவரங்களை  மிஞ்சும்  அளவில்   இதன்  பாதிப்பு  சமூகத்தில்  உள்ளது  என்பதே  உண்மை. 

இதுபோன்ற, மனித  சிக்கல்களை  நமது  மரபு  எப்படி  அணுகுகிறது  என்பதே, ஒரு முழுமையான  பார்வையாக  இருக்கும்  என மேலும்  தேடுகையில் .  இரண்டு  சொல்லாட்சிகள்,  இந்த  சிக்கலை  மிக  நெருக்கமாக அணுகுகிறது.

ஒன்று:- பதஞ்சலியின்  "சித்த வ்ருத்தி  நிரோதஹா  யோகாஹ் ''- சித்தப்பெருக்கை  தடுக்கும்  செயலே  யோகம் .

அடுத்த சொல் :-   ''அந்தர்  மௌன'' - உள்ளார்ந்த  அமைதி  .

இதில்  அந்தர்  மௌன - என்பது ''பிரத்யாஹாரம்'' -  எனும்  புலன்களை  உள்முகமாக  திருப்பும்  ஒரு  பயிற்சி முறை. தொலைதூரத்தில்  கேட்கும்  சப்தத்தில்  தொடங்கி  இதய  துடிப்பு முதல்  ஒவ்வொரு  சப்தமாக  கவனித்து , எண்ணங்களை  கட்டுப்படுத்தாமல்   தொடர்ந்து  மனத்திரையில்  ஓடவிடுதல் . நாம்  இங்கே   பயிற்சி  கற்றுக்கொள்ள போவதில்லை ,  மாறாக  இது  எப்படி  செயல்படுகிறது  என்பதை  ஓரளவு  புரிந்துகொள்ள  முயலலாம் . கவனிக்கப்படும்  எந்த  செயலும்  சமன் கொள்ளவேண்டும்  என்பது  உலக நியதி.

 குறும்புத்தனத்தால்  வீட்டையே  இரண்டாக்கிக்கொண்டிருக்கும்  குழந்தை  முதல் , பதற்றத்தால்  துடிதுடித்துக்கொண்டிருக்கும்  இதயம்  வரை , நம்மிடம்  கோருவது  '' கவனம்' ' என்பதையே . நாம்  கவனிக்க  தொடங்கிய  சில  நிமிடங்களில் இரண்டும்  நிலை கொள்வதை  காணமுடியும் . எனினும்  அது  அவ்வளவு  எளிதான  காரியமல்ல .

Generally we tend to allow 'good' thoughts to arise to conscious perception; we accept and enjoy pleasant thoughts. When an unpleasant, painful or 'bad' memory or thought arises, we tend to quickly push it back down into the subconscious layers of the mind. This is suppression and we all do it. Everyone has mental suppressions. Often we are conditioned to do it from childhood. But suppression is definitely not the answer.-  என்கிறார்  சுவாமி  சத்யானந்த  சரஸ்வதி . 

அடுத்ததாக  பதஞ்சலியின்  சூத்திரம்  சொல்லும் '' சித்தப்பெருக்கை  தடுக்கும்  செயலே  யோகம்''.   நமது  மரபில்  ஒவ்வொரு  அக ,புற  சிக்கல்களுக்கும்  ஒருவித  பயிற்சியை , ஒழுக்கத்தை , சடங்கை  கோருவது  அடிப்படை விதி . அதை  நடைமுறை  படுத்துவதும் , செயல் படுத்த முடியாததும்  அவரவர்  விருப்பம்.  சித்த  பெருக்கை  தடுக்க  பதஞ்சலி  அஷ்டாங்க  யோகம்  எனும்  எட்டு  நிலைகளாக  பயிற்சி முறையை  சொல்கிறார். இதில்  ஏதேனும்  மூன்று  அல்லது  நான்கு  நிலைகளை , தினசரி  வாழ்வியல் முறையாக  கடைபிடித்தால் கூட , ''ஹேயம்  துக்கம்  அனாகதம் '' - வரவிருக்கும் துன்பத்தையும்  தடுக்க முடியும்  ''-  என்கிறார். 

 மரபு  வெறும்  நம்பிக்கையை  மட்டும்  கோருவதில்லை , ஒரு  ஒழுக்கத்தை , ஒரு வாழ்வியல்  முறையை  முன்வைத்து  நம்பிக்கையை  கோருகிறது. உலகியல்  வாழ்வு முதல்  ஆன்மீக  வாழ்வு வரை  அனைத்திற்குமான  அடிப்படை  பாடம்  இது .

இமயத்தில்  தொடங்கி , வங்கம் வரை 1500 மைல்கல்  பயணிக்கும்  கங்கையின்  இரு கரைகளிலும்  ஆயிரக்கணக்கான  படித்துறைகள்  உண்டு . ஒவ்வொரு  பருவத்திற்கும்   தகுந்தாற்போல  படித்துறை கற்களை  மூழ்கிய படியும் , தொட்டுக்கொண்டும் , விலகியும்  நதி  ஓடிக்கொண்டே  தான்  இருக்கிறது,  நம்  சித்தத்தை போல.      எனினும்  "தண்" என்ற  குளுமையுடன், லட்சக்கணக்கான  பிரவாகங்களை  கண்ட பின்பும், இங்கே  பல்லாயிரம்  படித்துறைகள் என  நின்று கொண்டிருப்பவையே   நம்  மரபு  .

யோகா  ஒரு  ''சர்வரோக  நிவாரணி''  என்பதை  சொல்ல இந்த  கட்டுரை முயலவில்லை, மாறாக  ஒவ்வொரு  நவீன  சிக்கலுக்கும் மரபில் தீர்வு  என  ஒரு  வேரும், விதையும் ,விருட்சமும் ,   நிச்சயம் இருக்கும் .  இந்த மொத்த  கட்டுரையிலும்  யோகா  எனும்  வார்த்தையை  எடுத்துவிட்டு , ஆயுர்வேதம் , என்றும் தாந்த்ரீகம்  என்றும் ,பக்தி  என்றும்  போட்டு  வாசித்தாலும் ஒரே பொருளை  அளிக்கும் .

Monday, March 2, 2020

'ஒநாய் குலச்சின்னம்

நாவல்  உலகின்  சிறந்த  நாவல்  வரிசையில் முக்கியமான  ஒன்று. மானுடவியல், அழகியல் , வரலாறு , மனிதஉணர்வுகள் , இயற்கை மற்றும்  பல்லுயிர் வாழ்க்கை முறை  என குறைந்தது ஐந்து  அல்லது  ஆறு  வெவ்வேறு  தளங்களில்  வாசிக்கலாம் . இந்த வாசிப்பு  ஒரு முயற்சி மட்டுமே .போன வருடம்  ஜெயமோகன்.இன் .தளத்தில் வெளியான  கட்டுரை 

https://www.jeyamohan.in/119846#.XlzQf-QzbIU

Sunday, March 1, 2020

கூட்டு விழிகள் கொண்ட மனிதன் - தமிழில் யுவன் சந்திரசேகர் {தைவானிய மொழி நாவல்- வு மிங் யி }

மாய யதார்த்தவாத படைப்பான இந்த நாவலின் மையபேசுபொருள்  இயற்கை சீரழிவு / சூழலியல். நாம் ஒவ்வொருவரும் வீசி எறியும் சிறு குப்பை முதல்  ஒவ்வொரு நகரமும், ஆலைகளும் வெளியேற்றும் கழிவுகள் எங்கோ நமக்காக சேகரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவை அனைத்தும் இயற்கையால் நம்மை நோக்கி திரும்ப வீசப்படும்போது என்ன நிகழும். என்கிற ஒற்றை புள்ளியில் நாவல் சுழல்கிறது. 

மூன்று அடுக்குகளாக  நிகழும்   இந்த  நாவல்,  முதல் கதாபாத்திரம் 'அட்டி லெய்'  எனும் மாயத்தீவின் இளைஞன் . வயோ வயோ எனும் சிறிய தீவு  வயோ வயோவின் ஜனங்களுக்கு இந்த தீவு மட்டுமே ஒட்டுமொத்த உலகம் என்று நம்பி இருந்தனர்.  கடலிலும் சில குறிப்பிட்ட எல்லை தாண்டி பயணம் செய்ய தடை இருந்தது. மீறுபவர்களை கடல் தெய்வம் தண்டிக்கும் எனும் நம்பிக்கையும் இருந்ததால். பழங்குடி சடங்குகளும் சம்பிரதாயங்களும் மிக்க இந்த தீவை கடல்முனியும், நிலமுனியும் வழிநடத்தி வந்தனர். தீவு மிகசிறியது என்பதால் ஜனத்தொகை பெருகிவிடாமல் இருக்க ஒரு குடும்பத்தில் இரண்டாவதாக பிறக்கும் ஆண் குழந்தையை குறிப்பிட்ட வயதில் கடலுக்குள் அனுப்பிவிடுவார்கள். அவர்கள் ஒருபோதும்  திரும்பக்கூடாது .அப்படி  அனுப்பப்பட்ட  குழந்தை  தான்  'அட்டி லெய்' 

இரண்டாவதாக , நாவல் முழுவதும் வரும் பெண் ஆலிஸ் , ஆசிரியரும், எழுத்தாளருமான ஆலிஸ், இயற்கை சூழ் வாழ்வின்மேல் கொண்ட ஆர்வத்தால் தன், மகன், மற்றும் கணவனுடன், தைவானின் கடற்கரையை ஒட்டி ஒரு வீடுகட்டி வாழ்கிறார். மலையேற்ற சாகசங்களில் ஆர்வமும் , துடிப்பும் மிக்க  கணவன் " தாம் "  தன் மகனுடன் ஒருநாள் இவளிடம் சொல்லாமல் மலையேற சென்றுவிடுகிறான். அதன் பின் இருவரும் திரும்பவே இல்லை. இப்படி ஒரு மாபெரும் துயரத்தில் அவர்களை தேடியபடி வாழும் பெண்.

மூன்றாவதாக கதைசொல்லியின் குரலாக ஒலிக்கும், "கூட்டு விழிகள் கொண்ட மனிதன்" எனும் அத்தியாயங்கள் .

முதல் அத்தியாயம் யதார்த்த சூழலில் தொடங்கி, அடுத்த அத்யாயம் மாயாபுனைவாக மாறிவிடுகிறது, யதார்த்த சூழல் வருகையில் நாம் ஒருமுறை கண்ட சுனாமி பதட்ட சூழலும், மாயாபுனைவாக மாறும்போது, 'வயோ வயோ' எனும் தீவின் அபரிமிதமான கற்பனை காட்சிகளும் , தனித்தனி அத்தியாயங்களாக எழுதப்பட்டிருந்தாலும், அத்தனை கதா பாத்திரங்களும், கதை சூழலும் ஒரே மையம் நோக்கி நகர்ந்து ஒற்றை புள்ளியில் அனைத்தும் சந்திக்கும்போது பிரமிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இந்த   இணைப்புதான் நாவலின் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்.

கிழக்கின் படைப்புகளில், ஆகசிறந்த படைப்புகள் எல்லாமே, புராணத்திலிருந்து நவீனத்திற்கு ஒரு கோடு வரைந்து அதை கதையின் வழியாக ஒரு இடத்தில் கோலமிட்டு காண்பிப்பவை. இது மாய யதார்த்த நாவல் என்பதால் ஆசிரியருக்கு அளப்பரிய சாத்தியங்களை வாரி வழங்கியிருக்கிறது கதை களம்.   உதாரணமாக , 'வயோ வயோ', தீவின் கதை, நம் திரிசங்கு சுவர்க்கம் போன்ற ஒரு உருவகம் தான்.  பழங்குடி கதைகள், நிலமுனி, கடல்முனி எனும் கடவுளுக்கு அணுக்கமானவர்கள் நம் புராண மாந்தர்களான, தேவர்களும், சிறு தெய்வங்களும், தண்டிக்கும் தெய்வங்கள், காக்கும் தெய்வங்கள், என நம் இதிகாச கதைகளுக்கான நெருக்கத்துடன் வாசிக்க முடியும். 

அதேவேளையில்  அடுத்த அத்தியாயம் யதார்த்த சூழ்நிலை பற்றியதாக மாறும்போது, நேரடியாக நமது கடலோர கிராமங்கள், நகரத்து ஆடம்பரங்கள், தனிமனித சிக்கல்கள், அரசியல் நிலைகள், சுற்றுசூழல் பற்றிய வெறும் கூச்சல்கள், நுகர்வு வெறியினால் சூறையாடப்படும் இயற்கை உயிரினங்கள், என, புராண , சொர்க்கத்திற்கு நிகரான , தீவிலிருந்தும்  வாழ்விலிருந்தும் ,  நேரடியாக  நகரத்தின் ஒரு குப்பை தெருவுக்குள், அல்லது சுனாமி தாக்கிய ஒரு கடலோர கிராமத்துக்குள் நாம்  தூக்கி வீசப்படுவதை  மிக அழகாக செய்திருக்கிறார்.வு மிங் யி.

அத்தனை கதா பாத்திரங்களும் பதட்டமடைய செய்யும் நாவலின் , மைய பேசுபொருள் "குப்பை கடற்சுழி"   எனும், மனிதர்கள் எறிந்த கழிவுப்பொருள்களால் ஆனா மாபெரும் தீவு. கடலில் 30 வருடங்களாக மிதந்து அலையும்  தீவு, ஒரு சுனாமி நாளில் கடற்கரை நாடுகளை தாக்கி மூடி  விடுகிறது. இந்த நிலையில் மக்களின் கையறுநிலை அதிலிருந்து மீள நிகழும் காட்சிகள். 

நம் மரபில் சொல்லப்படும் 'இச்சா  சக்தி'   எனப்படும் விழைவு  . எப்படி  உயிர் வாழ்வதற்கான  வேட்கையை  வேறு  ஒரு சிறு  புற காரணியிடம்  இருந்து  பெற்றுக்கொண்டு,  அத்தனை  துயரத்தையும்  தாண்டி  மேலெழுகிறது . என்பதற்கு உதாரணமாக , ஆலிஸ்.  தனது  கணவன் , மகன் இருவரும்  அவள்  வாழ்விலிருந்து  மறைந்த பின் , இவளும்  வாழ்வை  முடித்துக்கொள்ள  விழைகிறாள் , ஆனால்  ஒரு தனித்த , பூனை, இவளிடம்  சரணடைகிறது , தன்  முடிவை  சற்று  தள்ளிப்போடும்  ஆலிஸ் , மறுபடியும்  அதனை  துயரங்களுடனும்  எப்படியும்  வாழ்ந்தே  தீரவேண்டும்  எனும்  முடிவை  அடைகிறாள் .

நாவலின்  உச்ச கட்ட  தருணங்கள்  சில ' கூட்டு விழிகள் கொண்ட  மனிதன் '' எனும்  அத்தியாயத்தில்  வரும் , ஆலிஸின்  கணவன்  தாமுக்கும் , 'அந்த  மனிதனுக்கும்'  நடக்கும்  சம்பாஷணைகள் . 
தாமும்  அவன்  மகன்  டோட்டோவும்  ஒருநாள்  தொலைத்தூர  மலை உச்சிக்கு  செல்கிறார்கள் , அவர்கள்  கணித்ததை விட  மிக  மோசமான  வானிலையால் , சிகரத்தில்  மாட்டிக்கொள்கிறார்கள் , தன்  மகனுக்கு  ஒரு  சாகசக்கார  அப்பாவாக  தன்னை  காட்ட முயலும்  'தாம்' , நள்ளிரவில்  உச்சியிலிருந்து  கால் தவறி  உயிர்  இழக்கிறான் , உச்சியிலிருந்து  கீழே , கீழே  கீழே  என  விழுந்தபடியே உயிர்  பிரிந்து கொண்டிருக்கிறது .  அந்த  தருணத்தில்  " அந்த  மனிதன்" அவனுக்கு  அணுக்கமாக  இருந்து  எந்த  சலனமும்  இல்லாமல்  'வேடிக்கை " பார்த்துக்கொண்டு  இருக்கிறான் .
மேலும்  இருவரும்  உரையாடுகிறார்கள் , அதில்  தாம்  இறந்து விட்டதாக , அல்லது  இறந்து கொண்டிருப்பதாகவும்  தன்னை  காக்கும்படியும்  அல்லது  தன்  மகன் மேலே  சிகரத்தில்  இருக்கிறான்  அவனையாவது  காக்கும்படியும்  அந்த  'மனிதனிடம் ' கேட்கிறான்  தாம் .  'அந்த  மனிதானோ'' தனக்கு  எதை பற்றியும்  அக்கறை  இல்லை  எனவும், எவ்விதத்திலும்  உதவ  முடியாது  எனவும் . ''வெறுமனே  வேடிக்கை''  பார்ப்பவன்  என்றும்  சொல்லும்  காட்சிகள் , நமக்கு  நெருக்கமான  ஒரு  கிளையில்  இரண்டு  கிளிகள்  அமர்ந்து  ஒன்று  பழம்  தின்கிறது , மற்றொன்று  பார்த்திருக்கிறது , என்கிற  'ஆத்மா' விற்கான  விளக்கம் இந்த  இடத்திற்கு  பொருந்தி  வருகிறது .

நாவலின்  மற்றுமொரு  சிறப்பு ,காட்சிப்படுத்தி இருக்கும்  விதம் , மாபெரும்  குப்பை கடற்சுழி ,  குறைத்த மக்கள் தொகை கொண்ட  ஒரு  அழகிய  தீவு , அதன்  மக்கள் , ஒரு  கடற்கரை  நகரம், மலையேற்றம் செய்ய  உயர்  சிகரங்கள் . ஒரு  குகை , இது  அத்தனையும்  ஒரு சுனாமி  போன்ற  நிகழ்வால்  முற்றிலும்  உருமாறி  சிதைந்து , அடுத்தடுத்த  அத்தியாயங்களில்  மீண்டும்  வாழ்வை  புதுப்பித்துக்கொள்ள  மக்கள்  அடையும்  தீவிரம்  என  ஒரு  மாபெரும்  சித்திரம்  கண் முன்  நிகழ்கிறது . 

வு மிங் யி-  தைவானிய நாவலாசிரியரான இவர், சூழலியல் சார்ந்த எழுத்துக்களின் மூலம் சீன, தைவானிய இலக்கிய சூழலில் பரவலாக அறியப்படடவர், இவருடைய The Stolen bicycle {2015}  என்கிற வரலாற்று நாவல் 2018ம் ஆண்டு புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 

காலச்சுவடு  வெளியீட்டில்  மிக சிறப்பாக   வடிவமைக்கப்பட்டு வெளிவந்திருக்கும்  நாவல் . காலச்சுவடின்  ஆகச்சிறந்த நேர்மறை  அம்சமே , "'நூல்  தயாரிப்பில்  கடும்  குறைபாடுகள்  இருந்தால்  மாற்று  பிரதி  உங்களுக்கு  கிடைக்க  ஏற்பாடு  செய்யப்படும்''  என்கிற   உத்திரவாதம்,  ஒரு வாசகருக்கான நம்பிக்கையை  உறுதி  செய்கிறது . 

இறுதியாக  யுவன்  சந்திரசேகரின்  மொழிபெயர்ப்பு , மிக  நேர்த்தியாக அவருக்கே  உரிய  நடையுடன் ,கச்சிதமாக  செய்திருக்கிறார் ,  " இந்த  நாவல்  குறித்தான  தனது  அவதானிப்பும் , மொழிபெயர்ப்பு  சவால்கள்,   சாத்தியங்கள்  குறித்தும் நாவலின்   முடிவில்  " கலையும்  கவலையும் ' என்கிற  பெயரில்  ஒரு  சிறந்த  கட்டுரையும்  எழுதியிருக்கிறார் .

சூழலியல் சார்ந்த , உலக  நாவல்களில் , 'ஓநாய் குல  சின்னத்துக்கு''  மிக  அருகில்  வைக்கப்பட வேண்டிய  முக்கியமான ஒரு  படைப்பு . கூட்டு விழிகள்  கொண்ட  மனிதன்.
 
Featured Post

Maleysia yoga retreat

 Malaysia yoga retreat https://www.jeyamohan.in/199529/