Sunday, March 1, 2020

கூட்டு விழிகள் கொண்ட மனிதன் - தமிழில் யுவன் சந்திரசேகர் {தைவானிய மொழி நாவல்- வு மிங் யி }

மாய யதார்த்தவாத படைப்பான இந்த நாவலின் மையபேசுபொருள்  இயற்கை சீரழிவு / சூழலியல். நாம் ஒவ்வொருவரும் வீசி எறியும் சிறு குப்பை முதல்  ஒவ்வொரு நகரமும், ஆலைகளும் வெளியேற்றும் கழிவுகள் எங்கோ நமக்காக சேகரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவை அனைத்தும் இயற்கையால் நம்மை நோக்கி திரும்ப வீசப்படும்போது என்ன நிகழும். என்கிற ஒற்றை புள்ளியில் நாவல் சுழல்கிறது. 

மூன்று அடுக்குகளாக  நிகழும்   இந்த  நாவல்,  முதல் கதாபாத்திரம் 'அட்டி லெய்'  எனும் மாயத்தீவின் இளைஞன் . வயோ வயோ எனும் சிறிய தீவு  வயோ வயோவின் ஜனங்களுக்கு இந்த தீவு மட்டுமே ஒட்டுமொத்த உலகம் என்று நம்பி இருந்தனர்.  கடலிலும் சில குறிப்பிட்ட எல்லை தாண்டி பயணம் செய்ய தடை இருந்தது. மீறுபவர்களை கடல் தெய்வம் தண்டிக்கும் எனும் நம்பிக்கையும் இருந்ததால். பழங்குடி சடங்குகளும் சம்பிரதாயங்களும் மிக்க இந்த தீவை கடல்முனியும், நிலமுனியும் வழிநடத்தி வந்தனர். தீவு மிகசிறியது என்பதால் ஜனத்தொகை பெருகிவிடாமல் இருக்க ஒரு குடும்பத்தில் இரண்டாவதாக பிறக்கும் ஆண் குழந்தையை குறிப்பிட்ட வயதில் கடலுக்குள் அனுப்பிவிடுவார்கள். அவர்கள் ஒருபோதும்  திரும்பக்கூடாது .அப்படி  அனுப்பப்பட்ட  குழந்தை  தான்  'அட்டி லெய்' 

இரண்டாவதாக , நாவல் முழுவதும் வரும் பெண் ஆலிஸ் , ஆசிரியரும், எழுத்தாளருமான ஆலிஸ், இயற்கை சூழ் வாழ்வின்மேல் கொண்ட ஆர்வத்தால் தன், மகன், மற்றும் கணவனுடன், தைவானின் கடற்கரையை ஒட்டி ஒரு வீடுகட்டி வாழ்கிறார். மலையேற்ற சாகசங்களில் ஆர்வமும் , துடிப்பும் மிக்க  கணவன் " தாம் "  தன் மகனுடன் ஒருநாள் இவளிடம் சொல்லாமல் மலையேற சென்றுவிடுகிறான். அதன் பின் இருவரும் திரும்பவே இல்லை. இப்படி ஒரு மாபெரும் துயரத்தில் அவர்களை தேடியபடி வாழும் பெண்.

மூன்றாவதாக கதைசொல்லியின் குரலாக ஒலிக்கும், "கூட்டு விழிகள் கொண்ட மனிதன்" எனும் அத்தியாயங்கள் .

முதல் அத்தியாயம் யதார்த்த சூழலில் தொடங்கி, அடுத்த அத்யாயம் மாயாபுனைவாக மாறிவிடுகிறது, யதார்த்த சூழல் வருகையில் நாம் ஒருமுறை கண்ட சுனாமி பதட்ட சூழலும், மாயாபுனைவாக மாறும்போது, 'வயோ வயோ' எனும் தீவின் அபரிமிதமான கற்பனை காட்சிகளும் , தனித்தனி அத்தியாயங்களாக எழுதப்பட்டிருந்தாலும், அத்தனை கதா பாத்திரங்களும், கதை சூழலும் ஒரே மையம் நோக்கி நகர்ந்து ஒற்றை புள்ளியில் அனைத்தும் சந்திக்கும்போது பிரமிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இந்த   இணைப்புதான் நாவலின் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்.

கிழக்கின் படைப்புகளில், ஆகசிறந்த படைப்புகள் எல்லாமே, புராணத்திலிருந்து நவீனத்திற்கு ஒரு கோடு வரைந்து அதை கதையின் வழியாக ஒரு இடத்தில் கோலமிட்டு காண்பிப்பவை. இது மாய யதார்த்த நாவல் என்பதால் ஆசிரியருக்கு அளப்பரிய சாத்தியங்களை வாரி வழங்கியிருக்கிறது கதை களம்.   உதாரணமாக , 'வயோ வயோ', தீவின் கதை, நம் திரிசங்கு சுவர்க்கம் போன்ற ஒரு உருவகம் தான்.  பழங்குடி கதைகள், நிலமுனி, கடல்முனி எனும் கடவுளுக்கு அணுக்கமானவர்கள் நம் புராண மாந்தர்களான, தேவர்களும், சிறு தெய்வங்களும், தண்டிக்கும் தெய்வங்கள், காக்கும் தெய்வங்கள், என நம் இதிகாச கதைகளுக்கான நெருக்கத்துடன் வாசிக்க முடியும். 

அதேவேளையில்  அடுத்த அத்தியாயம் யதார்த்த சூழ்நிலை பற்றியதாக மாறும்போது, நேரடியாக நமது கடலோர கிராமங்கள், நகரத்து ஆடம்பரங்கள், தனிமனித சிக்கல்கள், அரசியல் நிலைகள், சுற்றுசூழல் பற்றிய வெறும் கூச்சல்கள், நுகர்வு வெறியினால் சூறையாடப்படும் இயற்கை உயிரினங்கள், என, புராண , சொர்க்கத்திற்கு நிகரான , தீவிலிருந்தும்  வாழ்விலிருந்தும் ,  நேரடியாக  நகரத்தின் ஒரு குப்பை தெருவுக்குள், அல்லது சுனாமி தாக்கிய ஒரு கடலோர கிராமத்துக்குள் நாம்  தூக்கி வீசப்படுவதை  மிக அழகாக செய்திருக்கிறார்.வு மிங் யி.

அத்தனை கதா பாத்திரங்களும் பதட்டமடைய செய்யும் நாவலின் , மைய பேசுபொருள் "குப்பை கடற்சுழி"   எனும், மனிதர்கள் எறிந்த கழிவுப்பொருள்களால் ஆனா மாபெரும் தீவு. கடலில் 30 வருடங்களாக மிதந்து அலையும்  தீவு, ஒரு சுனாமி நாளில் கடற்கரை நாடுகளை தாக்கி மூடி  விடுகிறது. இந்த நிலையில் மக்களின் கையறுநிலை அதிலிருந்து மீள நிகழும் காட்சிகள். 

நம் மரபில் சொல்லப்படும் 'இச்சா  சக்தி'   எனப்படும் விழைவு  . எப்படி  உயிர் வாழ்வதற்கான  வேட்கையை  வேறு  ஒரு சிறு  புற காரணியிடம்  இருந்து  பெற்றுக்கொண்டு,  அத்தனை  துயரத்தையும்  தாண்டி  மேலெழுகிறது . என்பதற்கு உதாரணமாக , ஆலிஸ்.  தனது  கணவன் , மகன் இருவரும்  அவள்  வாழ்விலிருந்து  மறைந்த பின் , இவளும்  வாழ்வை  முடித்துக்கொள்ள  விழைகிறாள் , ஆனால்  ஒரு தனித்த , பூனை, இவளிடம்  சரணடைகிறது , தன்  முடிவை  சற்று  தள்ளிப்போடும்  ஆலிஸ் , மறுபடியும்  அதனை  துயரங்களுடனும்  எப்படியும்  வாழ்ந்தே  தீரவேண்டும்  எனும்  முடிவை  அடைகிறாள் .

நாவலின்  உச்ச கட்ட  தருணங்கள்  சில ' கூட்டு விழிகள் கொண்ட  மனிதன் '' எனும்  அத்தியாயத்தில்  வரும் , ஆலிஸின்  கணவன்  தாமுக்கும் , 'அந்த  மனிதனுக்கும்'  நடக்கும்  சம்பாஷணைகள் . 
தாமும்  அவன்  மகன்  டோட்டோவும்  ஒருநாள்  தொலைத்தூர  மலை உச்சிக்கு  செல்கிறார்கள் , அவர்கள்  கணித்ததை விட  மிக  மோசமான  வானிலையால் , சிகரத்தில்  மாட்டிக்கொள்கிறார்கள் , தன்  மகனுக்கு  ஒரு  சாகசக்கார  அப்பாவாக  தன்னை  காட்ட முயலும்  'தாம்' , நள்ளிரவில்  உச்சியிலிருந்து  கால் தவறி  உயிர்  இழக்கிறான் , உச்சியிலிருந்து  கீழே , கீழே  கீழே  என  விழுந்தபடியே உயிர்  பிரிந்து கொண்டிருக்கிறது .  அந்த  தருணத்தில்  " அந்த  மனிதன்" அவனுக்கு  அணுக்கமாக  இருந்து  எந்த  சலனமும்  இல்லாமல்  'வேடிக்கை " பார்த்துக்கொண்டு  இருக்கிறான் .
மேலும்  இருவரும்  உரையாடுகிறார்கள் , அதில்  தாம்  இறந்து விட்டதாக , அல்லது  இறந்து கொண்டிருப்பதாகவும்  தன்னை  காக்கும்படியும்  அல்லது  தன்  மகன் மேலே  சிகரத்தில்  இருக்கிறான்  அவனையாவது  காக்கும்படியும்  அந்த  'மனிதனிடம் ' கேட்கிறான்  தாம் .  'அந்த  மனிதானோ'' தனக்கு  எதை பற்றியும்  அக்கறை  இல்லை  எனவும், எவ்விதத்திலும்  உதவ  முடியாது  எனவும் . ''வெறுமனே  வேடிக்கை''  பார்ப்பவன்  என்றும்  சொல்லும்  காட்சிகள் , நமக்கு  நெருக்கமான  ஒரு  கிளையில்  இரண்டு  கிளிகள்  அமர்ந்து  ஒன்று  பழம்  தின்கிறது , மற்றொன்று  பார்த்திருக்கிறது , என்கிற  'ஆத்மா' விற்கான  விளக்கம் இந்த  இடத்திற்கு  பொருந்தி  வருகிறது .

நாவலின்  மற்றுமொரு  சிறப்பு ,காட்சிப்படுத்தி இருக்கும்  விதம் , மாபெரும்  குப்பை கடற்சுழி ,  குறைத்த மக்கள் தொகை கொண்ட  ஒரு  அழகிய  தீவு , அதன்  மக்கள் , ஒரு  கடற்கரை  நகரம், மலையேற்றம் செய்ய  உயர்  சிகரங்கள் . ஒரு  குகை , இது  அத்தனையும்  ஒரு சுனாமி  போன்ற  நிகழ்வால்  முற்றிலும்  உருமாறி  சிதைந்து , அடுத்தடுத்த  அத்தியாயங்களில்  மீண்டும்  வாழ்வை  புதுப்பித்துக்கொள்ள  மக்கள்  அடையும்  தீவிரம்  என  ஒரு  மாபெரும்  சித்திரம்  கண் முன்  நிகழ்கிறது . 


வு மிங் யி-  தைவானிய நாவலாசிரியரான இவர், சூழலியல் சார்ந்த எழுத்துக்களின் மூலம் சீன, தைவானிய இலக்கிய சூழலில் பரவலாக அறியப்படடவர், இவருடைய The Stolen bicycle {2015}  என்கிற வரலாற்று நாவல் 2018ம் ஆண்டு புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 

காலச்சுவடு  வெளியீட்டில்  மிக சிறப்பாக   வடிவமைக்கப்பட்டு வெளிவந்திருக்கும்  நாவல் . காலச்சுவடின்  ஆகச்சிறந்த நேர்மறை  அம்சமே , "'நூல்  தயாரிப்பில்  கடும்  குறைபாடுகள்  இருந்தால்  மாற்று  பிரதி  உங்களுக்கு  கிடைக்க  ஏற்பாடு  செய்யப்படும்''  என்கிற   உத்திரவாதம்,  ஒரு வாசகருக்கான நம்பிக்கையை  உறுதி  செய்கிறது . 


இறுதியாக  யுவன்  சந்திரசேகரின்  மொழிபெயர்ப்பு , மிக  நேர்த்தியாக அவருக்கே  உரிய  நடையுடன் ,கச்சிதமாக  செய்திருக்கிறார் ,  " இந்த  நாவல்  குறித்தான  தனது  அவதானிப்பும் , மொழிபெயர்ப்பு  சவால்கள்,   சாத்தியங்கள்  குறித்தும் நாவலின்   முடிவில்  " கலையும்  கவலையும் ' என்கிற  பெயரில்  ஒரு  சிறந்த  கட்டுரையும்  எழுதியிருக்கிறார் .

சூழலியல் சார்ந்த , உலக  நாவல்களில் , 'ஓநாய் குல  சின்னத்துக்கு''  மிக  அருகில்  வைக்கப்பட வேண்டிய  முக்கியமான ஒரு  படைப்பு . கூட்டு விழிகள்  கொண்ட  மனிதன்.
 



Featured Post

The Master Christian - A NOVEL by Marie Corelli

 - குயவன் கையில் களிமண்ணாய்...... தமிழில் சுபஸ்ரீ  ---------------------------------------------------- மெய்யியல், தத்துவம் ஆன்மீகம், மற்றும...