Tuesday, March 10, 2020

யுவால்களும் , வைரஸ்களும் தோற்கும் இடம்

மீம் க்ரியேட்டர்கள்  என்கிற  ஒரு இனக்குழு, ஒவ்வொரு  சமூக  நிகழ்வுக்கும்  உடனடியாக  சில, பல  படங்களை  தேடி  எடுத்து  அதில்  ஒன்றிரண்டு  வார்த்தைகளுக்குள் , மொத்த  சிந்தனையையும்  சொல்லிவிட  துடிக்கும்  இனம்  அது. அதிலும்  தமிழில்  வடிவேலு மட்டும்  இல்லையெனில்  இந்த  ''மீம் க்ரியேட்டர்'' இனமே  அழிந்துவிடும்  ஆபத்தும் உள்ளது. அவர்களது இன்றைய  'களம் '' என்பது  ''கொரோனா''.  ஒரு  வைரஸ் இனம் மனித  சமுதாயத்திற்கு உலகின்  ஒரு பகுதிக்கு  அச்சுறுத்தலாகவும் , மறு பக்கத்திற்கு , மீம்  செய்தியாகவும் இருந்தாலும், உலககவனம் பெற்று விட்டது என்பதே  உண்மை .

இந்நிலையில்,   ''வைரஸ்கள்''  எனும்  இனமும்  மனித இனமும் ( விலங்கு இனத்தை  இப்போதைக்கு  விட்டுவிடலாம்) கடந்த காலங்களில்  மாறி மாறி  விளையாடிய  "கொன்று குவித்தலும்", "வென்று எழுதலும்" தொடர்ந்து  நிகழ்ந்த வண்ணம் இருந்திருக்கிறது , அது போலவே  வேறு சில  மாபெரும் கொலைக்களங்கள், போர்  என்றும், பஞ்சம்  என்றும் "உருவாக்கப்பட்ட பஞ்சங்கள்  என்றும்  நம்மை நாமே  அழித்துக்கொண்டும், இங்கு வந்து சேர்ந்திருக்கிறோம் . எனினும் வைரஸ் எனும் இனமோ நம்முடன்  ஒட்டிப்பிறந்த சகோதரன்.
வேளாண் சமூகமாக , மனித இனம்  மாறிய பின்னரே பெருவாரியாக பரவுகின்ற, அல்லது தொற்று நோய்  பற்றிய தரவுகள், ஓரளவேனும்  நமக்கு கிடைக்கிறது. அதற்கு முன் நடந்த  பெரும்சாவுகள் பற்றி, புனைவுகளை இட்டு நிரப்பிக்கொள்ளவே முடியும்.

''வாரியோலா-மைனர்''  மற்றும்  ''வாரியோலா-மேஜர்''  எனும் இரண்டு வைரஸ் சகோதரர்களால் ,  கடந்த  நூறு ஆண்டுகளில் மட்டும் கொன்று குவிக்கப்பட்ட மனித இனத்தின் எண்ணிக்கை ஐநூறு  மில்லியன்கள் . என்கிறது உலக சுகாதார அமைப்பு . மேலே சொன்ன இரண்டு வைரஸ்களும் வேறு யாருமல்ல   நமக்கு பரிச்சயமான ''பெரியம்மை' நோயை  தந்த வைரஸ்கள் தான்.இந்த வைரஸ் கிருமிகள் மனித இனத்தை வென்று, இருநூறு வருடங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலகட்டம் அது,  17ஆம்  நூற்றாண்டின் பிற்பகுதி , இங்கிலாந்திலிருந்து  ஒரு ஆராய்ச்சியாளர் , மருத்துவர், 'எட்வார்ட் ஜென்னர்',  முழுவிசையுடன்  இந்த வைரஸ்களுடன் போராட துணிகிறார் , எஞ்சிய வாழ்நாளையெல்லாம் , ''பெரியம்மை '' நோய்க்கு  மருந்து கண்டடைய செலவளிக்கிறார் , மனித இனத்தின்  காவல் தெய்வமென , ம்ருத்யுஞ்சயன் என ,தோன்றி 1798ல் , அந்த அமிர்தத்தை  {பெரியம்மை நோய் தடுப்பூசி } அடைகிறார். அந்த காலகட்டத்தில் நெப்போலியன் தன்  பிரஞ்சு படைகளுடன்  பிரிட்டன் மீது போர் தொடுத்துக்கொண்டிருந்த  நேரம் , எனினும் பெரியம்மை நோய்  பாதிக்கப்பட்ட அனைத்து  பிரஞ்சு படை வீரர்களுக்கும் தனது கண்டுபிடிப்பு கிடைக்க  ''எட்வார்ட் ஜென்னர்''  வழி செய்கிறார் ,இந்த செயலை பாராட்டி , நெப்போலியன்-1, ஜென்னருக்கு பதக்கம் அணிவித்து கௌரவம் செய்ததுடன் , ஜென்னரின் வேண்டுகோளின்படி  இரண்டு பிரிட்டன் போர் கைதிகளை விடுதலை செய்கிறார் , மேலும்  நெப்போலியன்-1  தனது  சாசனத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ''மானுடகுலத்திற்கு  மாபெரும் உயிர்க்கொடை அளித்த இந்த மாமனிதரின் எந்த கோரிக்கையையும் என்னால் நிராகரிக்க முடியவில்லை''-என.  கடந்த   200 வருடங்களில்  பெரியம்மை முற்றிலுமாக ஒழிக்கப்ட்டுள்ளது , 1980ல் உலக சுகாதார அமைப்பு இந்த நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக  அறிக்கை சமர்ப்பித்துள்ளது.


நம் உடலில், நோய்க்கூறு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் சரியான தடுப்பு மருந்துகளால், கட்டுப்படுத்தப்படாத போது  உயிர்க்கொல்லியாக மாறிவிடுகிறது என்பது அனைவரும் அறிந்தது தான் , உதாரணமாக  காசநோய் ,முதல்   நிமோனியா வரை. பல்வேறு  அறிவியலாளர்கள் , மருத்துவர்கள், 19ம்  நூற்றாண்டின்  தொடக்கத்தில் , இந்த வகை பாக்டீரியாவுடன்  போராட, 'ஆண்டி-பயாடிக்'- எனும் நோய் எதிர்ப்பு  மருந்தை கண்டுபிடிக்கும்  முயற்சியில் இருக்கின்றனர். அதில் ஒருவர்  தான் ஸ்காட்லாந்தை சேர்ந்த ''சர். .அலெக்ஸாண்டர் ப்ளெம்மிங்''.
 தொடர்ந்து ஆராய்ச்சி கூடத்தில் தன்  இரவு பகல் முழுவதையும் செலவழித்து ,சோர்ந்து , சலித்து , ஒருநாள் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க, ஊர் சுற்றிவர  கிளம்புகிறார். ஆய்வுக்கூடத்துக்கே உண்டான, ரசாயனங்களும் , புத்தகங்களும் , கண்ணாடி குடுவைகளும்  சிதறி பரவிக்கிடக்கும்  தனது மேசையை அப்படியே விட்டுவிட்டு, ஒருநாள் விடுப்பில் செல்கிறார். திரும்ப வந்தவருக்கு ஒரு ஆச்சரியமும் இல்லை , தன் மேசையை ஒதுங்க வைக்கும்போது,முதல்நாள் சாப்பிட்டு விட்டு பாதியில் வைத்துவிட்ட, ரொட்டித்துண்டில்  ஒட்டியிருக்கிறது, 'அலெக்ஸ்சாண்டர் பிளெம்மிங்'கிற்கு  ஆச்சரியமும் , மனித குலத்துக்கான உயிர்காக்கும்  மருந்தும். ''பூஞ்சை'' எனும் வடிவில்.   பூஞ்சையிலிருந்து மேலும் முன்னகர்ந்து  1928ல் ''பெனிசிலின்''  எனும் உயிர்காக்கும் சஞ்ஜீவினியை கண்டுபிடிக்கிறார் . உலகம் அதை ஏற்றுக்கொள்ள மேலும் 12ஆண்டுகள் பிளெமிங் போராட வேண்டியிருந்தது , பல்வேறு நபர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு, நிறுவப்பட்டு, பின்  1940ல் உலகம் ஏற்றுக்கொண்டது.


ஒவ்வொருமுறையும், வைரஸ்களும், வேறு சில உயிர்க்கொல்லிகளும் மேலெழுந்து, மனிதர்களை கொன்று குவிக்கும்போதெல்லாம், உலகத்தின் எங்கோ ஒரு மூலையிலிருந்து, தன் அனைத்து வல்லமையுடனும் ஒரு தன்வந்திரி, கையில் அமுத கலசமும் , அபய முத்திரையுடனும், எழுந்து வந்து  சொல்கிறார் ''அஞ்சேல்''.  சமீபத்தில்  ஆயுர்வேத வைத்தியரும், நண்பருமான சுனில் கிருஷ்ணனுடன் உரையாடுகையில் ,' மனித உயிர்குல ரட்சகர்களாக,  இந்திய மண்ணிலும்  சரகர் முதல்  மஹாத்மா காந்தி வியந்து நோக்கிய, ஆயுர்வேத கவிராஜ் கணநாத் சென் வரை ஒரு நீண்ட வரிசையை சொன்னார், அவ்வரிசையில்  வடசென்னையின் ' ''அஞ்சு ரூபாய்'' டாக்டர் எனப்படும் எஸ் .ஜெயச்சந்திரன் வரை  நீட்டிக்கொள்ளலாம்  என்று தோன்றுகிறது.


நவீன சிந்தனையாளர்கள் ,மானுடவியலாளர்கள் , ஜாரெட் டைமென்ட், யுவால் நோவா ஹராரி, போன்றோர்  மிக விரிவாக  கடந்த 50ஆயிரம் வருட பரிணாம வளர்ச்சி ,மற்றும்  சமகால தேவை ,வருங்கால  பிரச்னைகள் மற்றும் அதற்கான  தீர்வுகள், என  கவனத்துடனும் , எச்சரிக்கையுடனும்,  மானுடம் நோக்கிய  சவால்களை முன் வைக்கிறார்கள். அவர்களின் மகத்தான சிந்தனைகளையும் தாண்டி அவர்கள் சற்றும் எதிர்பாராத திசையிலிருந்து  அல்லது  பாதாள தெய்வமென  எங்கிருந்தோ  வைரஸ்களும், அதனுடன் போராட  'பிளெமிங்' குகளும் உருவாகி,   இந்த 'அழித்தல்' ,'வென்றெடுத்தல்'  எனும் அலகிலா விளையாட்டை  ஆடிய வண்ணம் உள்ளனர். அறிவாளிகளும் , வைரஸ்களும்  ஒரு நோக்கமும்,முடிவும் , எதிர்பார்ப்பும் வைத்து காத்திருக்கும் வேளையில், அதற்கு நேர் எதிர் திசையில் இயங்குகிறது, மனித உயிரில் உறையும்  'இச்சாசக்தி' எனும் இயற்கை.

''ஆதித்ய  வர்ணாம்  தமஸா பரஸ்தாத்''- ( ''இந்த தாமச, காரிருளுக்கு அப்பால் ஆதித்ய வர்ணம் என கதிரவனின் ஒளி நிரம்பியுள்ளது'') -என்கிற புருஷ சூக்தத்தின் வரிகள் தான் நினைவில் எழுகிறது. இனி கொரோனா வைரஸுக்கான மருந்துடன் உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து, ஒருவர் எழுந்து வரும்வரை, பூண்டு ரசமும், ஜாதகத்தில் களம் மாறி அமர்ந்த, சந்திர, செவ்வாய் கிரகங்களுக்கான பரிகாரங்களுடன், கொரோனாவுடன் போராடுவோம். .




  

Featured Post

Maleysia yoga retreat

 Malaysia yoga retreat https://www.jeyamohan.in/199529/