ஒவ்வொரு நாளும் , நாம் குறைந்தது 50 புதிய/ பழைய தகவல்களையாவது வெவ்வேறு பக்கங்களிலிருந்து ,பெற்றுக்கொண்டே தான் இருக்கிறோம் , தகவல்கள் எனும் பெருநதியில் திளைக்கிறோம் என்றே
சொல்லவேண்டும்.
ஒரு நாளைக்கு 12000 முதல் 60000 வரை நமக்கு எண்ணங்கள் உருவாகிறது என்கிறது அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட தேசிய அறிவியல் கழகம் .
சரி அதனாலென்ன ?
Information fatigue syndrome- எனும் பதம், தகவல்களால் நாம் நிறைந்து வழியும் பொழுது உண்டாகும் சோர்வையும் நோய்க்கூறையும் குறிக்கிறது.
ஜார்ஜ் சிம்மெல்{ Georg Simmel (1858-1918) என்கிற சமூக அறிவியலாளர் தான், முதலில் இந்த வார்த்தையை 1900ல் பிரயோகம் செய்கிறார் . பின்னர் 1970ல் ஆல்வின் டாப்லர்{ Alvin Toffler} எழுதிய புகழ்பெற்ற புத்தகம் '' Future Shock'' - சமூக வலைத்தளங்கள் முதல் பக்கத்து வீட்டுக்காரர் வரை நம்மீது திணிக்கும் ''தகவல்கள் ' பற்றி பேசுகிறது .நவீன சிந்தனையாளர் யுவால் நோவா ஹராரி வரை காலங்காலமாக , இந்த வகை ''அதீத தகவல் சேகரிப்பு '' -பற்றிய ஒவ்வாமை , பயம் பேசப்படுகிறது . இந்த வகை over loaded informations உண்டாக்கும் உடல் மற்றும் மன நோய்கள் என ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது . உலக பெரும் பத்து நோய்களில், மூன்று நோய்கள் இவ்வகையை சார்ந்தது. இதில் 264 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது, { இந்த எண்ணிக்கை குறைவு என்றே தோன்றுகிறது } பற்றி உலக சுகாதார மையம் { WHO}எச்சரிக்கை செய்கிறது.
பொதுவாகவே எல்லாவற்றையும் அறிவியலாக்கி பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணம் எனக்கு உண்டு , அதே வேளையில் மேலே சொல்லப்பட்ட, தரவுகளை தாண்டியும் , தினசரி வாழ்வில் நம்மை சுற்றி இருப்பவர்களை அவதானித்து , அனுபவங்களை பெறுகையில் , இந்த புள்ளி விவரங்களை மிஞ்சும் அளவில் இதன் பாதிப்பு சமூகத்தில் உள்ளது என்பதே உண்மை.
இதுபோன்ற, மனித சிக்கல்களை நமது மரபு எப்படி அணுகுகிறது என்பதே, ஒரு முழுமையான பார்வையாக இருக்கும் என மேலும் தேடுகையில் . இரண்டு சொல்லாட்சிகள், இந்த சிக்கலை மிக நெருக்கமாக அணுகுகிறது.
ஒன்று:- பதஞ்சலியின் "சித்த வ்ருத்தி நிரோதஹா யோகாஹ் ''- சித்தப்பெருக்கை தடுக்கும் செயலே யோகம் .
அடுத்த சொல் :- ''அந்தர் மௌன'' - உள்ளார்ந்த அமைதி .
இதில் அந்தர் மௌன - என்பது ''பிரத்யாஹாரம்'' - எனும் புலன்களை உள்முகமாக திருப்பும் ஒரு பயிற்சி முறை. தொலைதூரத்தில் கேட்கும் சப்தத்தில் தொடங்கி இதய துடிப்பு முதல் ஒவ்வொரு சப்தமாக கவனித்து , எண்ணங்களை கட்டுப்படுத்தாமல் தொடர்ந்து மனத்திரையில் ஓடவிடுதல் . நாம் இங்கே பயிற்சி கற்றுக்கொள்ள போவதில்லை , மாறாக இது எப்படி செயல்படுகிறது என்பதை ஓரளவு புரிந்துகொள்ள முயலலாம் . கவனிக்கப்படும் எந்த செயலும் சமன் கொள்ளவேண்டும் என்பது உலக நியதி.
குறும்புத்தனத்தால் வீட்டையே இரண்டாக்கிக்கொண்டிருக்கும் குழந்தை முதல் , பதற்றத்தால் துடிதுடித்துக்கொண்டிருக்கும் இதயம் வரை , நம்மிடம் கோருவது '' கவனம்' ' என்பதையே . நாம் கவனிக்க தொடங்கிய சில நிமிடங்களில் இரண்டும் நிலை கொள்வதை காணமுடியும் . எனினும் அது அவ்வளவு எளிதான காரியமல்ல .
Generally we tend to allow 'good' thoughts to arise to conscious perception; we accept and enjoy pleasant thoughts. When an unpleasant, painful or 'bad' memory or thought arises, we tend to quickly push it back down into the subconscious layers of the mind. This is suppression and we all do it. Everyone has mental suppressions. Often we are conditioned to do it from childhood. But suppression is definitely not the answer.- என்கிறார் சுவாமி சத்யானந்த சரஸ்வதி .
அடுத்ததாக பதஞ்சலியின் சூத்திரம் சொல்லும் '' சித்தப்பெருக்கை தடுக்கும் செயலே யோகம்''. நமது மரபில் ஒவ்வொரு அக ,புற சிக்கல்களுக்கும் ஒருவித பயிற்சியை , ஒழுக்கத்தை , சடங்கை கோருவது அடிப்படை விதி . அதை நடைமுறை படுத்துவதும் , செயல் படுத்த முடியாததும் அவரவர் விருப்பம். சித்த பெருக்கை தடுக்க பதஞ்சலி அஷ்டாங்க யோகம் எனும் எட்டு நிலைகளாக பயிற்சி முறையை சொல்கிறார். இதில் ஏதேனும் மூன்று அல்லது நான்கு நிலைகளை , தினசரி வாழ்வியல் முறையாக கடைபிடித்தால் கூட , ''ஹேயம் துக்கம் அனாகதம் '' - வரவிருக்கும் துன்பத்தையும் தடுக்க முடியும் ''- என்கிறார்.
மரபு வெறும் நம்பிக்கையை மட்டும் கோருவதில்லை , ஒரு ஒழுக்கத்தை , ஒரு வாழ்வியல் முறையை முன்வைத்து நம்பிக்கையை கோருகிறது. உலகியல் வாழ்வு முதல் ஆன்மீக வாழ்வு வரை அனைத்திற்குமான அடிப்படை பாடம் இது .
இமயத்தில் தொடங்கி , வங்கம் வரை 1500 மைல்கல் பயணிக்கும் கங்கையின் இரு கரைகளிலும் ஆயிரக்கணக்கான படித்துறைகள் உண்டு . ஒவ்வொரு பருவத்திற்கும் தகுந்தாற்போல படித்துறை கற்களை மூழ்கிய படியும் , தொட்டுக்கொண்டும் , விலகியும் நதி ஓடிக்கொண்டே தான் இருக்கிறது, நம் சித்தத்தை போல. எனினும் "தண்" என்ற குளுமையுடன், லட்சக்கணக்கான பிரவாகங்களை கண்ட பின்பும், இங்கே பல்லாயிரம் படித்துறைகள் என நின்று கொண்டிருப்பவையே நம் மரபு .
யோகா ஒரு ''சர்வரோக நிவாரணி'' என்பதை சொல்ல இந்த கட்டுரை முயலவில்லை, மாறாக ஒவ்வொரு நவீன சிக்கலுக்கும் மரபில் தீர்வு என ஒரு வேரும், விதையும் ,விருட்சமும் , நிச்சயம் இருக்கும் . இந்த மொத்த கட்டுரையிலும் யோகா எனும் வார்த்தையை எடுத்துவிட்டு , ஆயுர்வேதம் , என்றும் தாந்த்ரீகம் என்றும் ,பக்தி என்றும் போட்டு வாசித்தாலும் ஒரே பொருளை அளிக்கும் .