Thursday, March 5, 2020

பாரபாஸ்

தேவகுமாரனுக்கு ஆட்டுக்குட்டி  அளிக்கும் மீட்பு 

பாரபாஸ் 
நோபல்  பரிசு  பெற்ற  நாவல் 
பேர்  லாகர் குவிஸ்ட் 
மூலம் - ஸ்வீடிஷ் 
தமிழில் - க.நா.சு.

சில  இலக்கிய படைப்புகள் , அதன்  வசீகரமான  பெயரால்  நம்மை  வாங்க  வைத்து, ஏமாற்றி விடுபவை, எனினும்  சில பெயர்கள்  நம்மை  ஒருபோதும்  கைவிடாதவை, ஓஷோ ,தாஸ்தோயெஸ்கி ,ஜெயகாந்தன் , ஜெயமோகன் ,என  ஒரு வரிசை உண்டு , அதேபோல  நோபல்  பரிசு  பெற்ற, சாகித்ய  விருது , போன்ற  சொற்களுக்கும்  இங்கே  ஒரு இடம்  உண்டு,  சமீபத்தில் படித்த  அப்படி  ஒரு ஆக்கம்  தான் , க.நா.சு மொழிபெயர்த்த , பாரபாஸ்  நாவல் . 

பாரபாஸ் -அம்மா இல்லாத  சொல்லப்போனால்  அப்பா  யாரென்றும்  சொல்லமுடியாத  ஒரு உற்சாகமான,  கொலை மற்றும்  கொள்ளைக்காரன்.  பாஸோவர் {பாஸ்கா } விருந்து  சமயத்தில்  யாராவது  ஒரு  கைதியை  விடுதலை  செய்வார்கள்  என்பது   எதிர்பார்க்கப்பட்ட  விசயம் தான் , எனினும்  அது  பாரபாஸாக  இருந்தான்  என்பது  அதிஷ்டம்  தான். சாத்தானின்  சார்பாக  கிடைத்த  அதிஷ்டம், அதே  சிலுவையில்  ஏற்றப்பட்ட  மெலிந்த உடலோ தேவகுமாரனுடையது.
இப்படி தொடங்கும்  கதை  பாரபாஸ்  வாயிலாக இயேசுவை அணுகும்  முயற்சி.

இங்கு ஒரு   மகத்தான  செயலின் பொருட்டு வந்து, தன்னை  அர்ப்பணித்து வாழ்ந்து, செல்பவர்களின்  மரண  தருவாயும், அவர்கள்  வாழ்க்கைக்கு  இணையான  உன்னதங்களை  கொண்டது . புராண மாந்தர்கள்  ராமன், கிருஷ்ணன் முதல் ,தன்   மெலிந்த  தேகத்தில்  தோட்டாக்களை பெற்றுக்கொண்ட தேசப்பிதா  வரை.

அது  போன்ற மரணத்திற்கு பின்னர் தான்  அவர்கள்  தெய்வமாகவோ, மஹாத்மாவாகவோ  ஆகிறார்கள் .ஒருவகையில்  அந்த  மரணமும்  அவர்களின்  மாபெரும்  செயலின்  ஒருபகுதியே.

கொல்கொதா  மலையில் , கிறிஸ்து  மரிக்கும் வேளையில் , அனைவரின் கண்களும் குருடாகும்படியான, அடர் இருள்  தோன்றி, உலகை  மறைக்க , பிரகாசமான  ஒளியோ ஒரு சில  நொடிகள் பாரபாஸ் கண்களை  ஊடுருவி அவனுக்குள்  நிறைகிறது.   இவனுக்கான  சிலுவையை  ஏற்றுக்கொண்ட  அந்த  மனிதர்.' என் கடவுளே  என் கடவுளே  என்னை  ஏன்  கைவிட்டீர்'' என  கத்தினார். பின்னர்  சில நொடிகளில்  அனைத்தும் முடிந்து  விட்டது. இயேசு  அடையும்  ஆத்ம விடுதலையை , அவர் தன்   தந்தைக்குள்  ஐக்கியமாவதை காணும்  ஒருவன், பாரபாஸ்
மீதி  நாவல் முழுவதும்  பாரபாஸின்  இறுதி காலம் வரை  அவனுள்  நடக்கும் , நாஸ்தீகத்துக்கும்,  குருட்டு நம்பிக்கைக்குமான  போராட்டம்  தான்.
இயேசு  மரித்து, அவர்  சீடர்களால்  அடக்கம்  செய்யப்பட்ட  கல்லறை  அருகே  சில நொடிகள்  நிற்கிறான், இவனுக்கு  பிரார்த்தனை செய்வது  பற்றியெல்லாம்  ஒன்றும்  தெரியாது . அங்கிருந்து  கிளம்பி  நேராக  தன்  பழைய  நண்பர்களுடன்  கூத்தும் , குடியுமாக , கொண்டாட்டமான, வாழ்க்கைக்குள்  செல்கிறான். ஆனால்  உள்ளே  ஏதோ ஒன்று   ' நகர்ந்து' விடுகிறது . என்னவென்று  அறிய முடியவில்லை , எனினும்  பழைய உற்சாகம் , கொள்ளை சம்பவங்களில்  ஆர்வம் , காம விளையாட்டுகள்  எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக, குறைகிறது. வயது கூடிச்செல்கிறது .
கிறிஸ்துதுவின் போதனைகள், அவர் செய்த அற்புதங்கள் , அவர்  சொன்ன  ''ஒருவரை  ஒருவர்  நேசிக்க வேண்டும்''  என்கிற  உபதேசங்கள்  அனைத்தும்  இவனுக்குள்  ஒவ்வாமையை , சலிப்பை , நம்பிக்கையின்மையை , தருகிறது. அதன் நேர்  எதிர் திசையில் , பாரபாஸின்  வாழ்வில்  நடக்கும்  சம்பவங்கள். அவனுள்  ஒரு  நிலைகொள்ளாமையை  உருவாக்குகிறது.   இயேசு மேல்  நம்பிக்கை  கொண்ட, அவரை  குருநாதராக  ஏற்றுக்கொண்ட , அவரால்  பயன்பெற்ற , அவர்  உயிர்ப்பித்த , அவர்  தொட்டு  நோய்  குணமான , என்று  தொடர்ந்து  நம்பிக்கையாளர்களை  தேடி சென்று  சந்திக்கிறான் .
மரண தண்டனையில் இருந்து  விடுதலை  பெற்ற  பாரபாஸ் , அடுத்தடுத்து  கொள்ளையானாக , அடிமையாக, கைதியாக , தெருவில்  சுற்றுபவனாக  என  அலைக்கழியும் போது ,ஒவ்வொரு முறையும்  இவனுக்கு  கிடைக்கும்  மரண  அல்லது  அதற்கு  நிகரான  தண்டனைகள்  அனைத்தும் , இவனுக்கு  அருகில்  இருக்கும்  வேறு ஒருவருக்கு  வழங்கப்பட்டு ,கிடைக்கும்   கடைசி நிமிட  விடுதலை,அவனுக்கு   அகக்கொந்தளிப்பை  அளிக்கிறது . ஒருவகையில்  பாரபாஸின்  ''விடுதலை''  என்பதே  அவனுக்கான  தண்டனையாக  ஆகிறது. மரணத்தின் மீது  மிகப்பெரிய  பயம் கொண்டவன், அந்த  பயத்தை  மறைக்க ,உலகியல் இன்பங்களில்  திளைப்பவன், திளைத்தபின்

மீண்டும்  தன்னிரக்கமும், வெறுப்பும் கொள்பவன்  என  அலைகிறான்.
வாலிபம் முடிந்து  முதியவனாக  தொடங்கும்  நிலையில்  ஓரிடத்தில்  அடிமையாக, சேருகிறான் . இவன் சக அடிமை  இயேசுவின்  போதனைகளால்  கவரப்பட்டு ,அனுதினமும் சுவர் நோக்கி  முழந்தாளிட்டு  பிரார்த்தனை  செய்பவன். முதல் முறையாக  இந்த  சடங்கினால்  கவரப்பட்டு, இருவரும்  பிரார்த்தனை  செய்கின்றனர். ரோமாபுரி சட்டத்தில்  இது  குற்றம்  என்பதால்,

''தனக்கு   பதிலாக சிலுவையில் இறந்து  மார்பில் மயிர் இல்லாத ,வெளுத்து மெலிந்த தேகத்தினனாகிய  அந்த  ஞானிக்காக பாரபாஸ் துயரம் அடைந்து  தண்டிக்கப்பட்டது  அது தான்  முதல் தடவை '' -
மற்றும்  இறுதி  அத்தியாயத்தில்
''என் ஆத்மாவை  உனக்கு  அளித்து  விடுகிறேன் '' என்று  கூறியவாறு உயிர்  துறக்கிறான்''.- என்கிற  நாவல்  வரிகள்.

உலகை மீட்க வந்த  தேவகுமாரன் , பாரபாஸ் போன்ற  ஒரே ஒருவனுக்கு  தரும்  ஆன்ம விடுதலை மூலம், தனக்கே  தனக்கான மீட்பையும்  அடைகிறார். ஒருவகையில் வழிதவறிய  ஆட்டுக்குட்டி அடையும் ஞானத்தால்,  மேய்ப்பனுக்கு கிடைக்கும்  மீட்பு  இது.
பைபிளின்  ஒரே  ஒரு  இடத்தில் மட்டுமே  வரும்  சிறிய, மனிதனை  வைத்து, அபாரமாக சொல்லப்பட்ட  தவறவிடக்கூடாத  நாவல்களில்  ஒன்று. சிறிய நூல் எனினும் பல்வேறு  வாசிப்பு  சாத்தியங்கள்  கொண்டது.



               


  


Featured Post

Maleysia yoga retreat

 Malaysia yoga retreat https://www.jeyamohan.in/199529/