Monday, April 6, 2020

பதற்றத்திலிருந்து  பயமின்மைக்கு....


இந்த தற்காப்பு  நாட்களில், உலக சினிமாவும், கொரோனா இல்லாத செய்திகளுக்கும் , மட்டுமே முன்னுரிமை கொடுப்பது என்கிற தீர்மானத்துடன்,  தொடர்ந்து  உலக சினிமா பார்த்தல்  எனும்  மாரத்தான் ஒன்றை, எனக்கு நானே  என வகுத்துக்கொன்டேன். மாரத்தான்  முடித்தபின் வரப்போகும் சுதந்திர  அல்லது  வெளியே  செல்ல அனுமதிக்கப்படும் , நாட்கள் பற்றி யோசிக்கையில்  சில தகவல்கள் , சில சொற்களுடன்  தானாகவே வந்து இணைந்து கொண்டது .

''விட்டதை பிடித்தல்''- எனும்  இழந்ததை அடைதல் 

ஹூண்டாய்  நிறுவனம்  ஒரு நாளைக்கு  சராசரியாக  இரண்டாயிரம்  கார்களை  தயாரிக்கிறது. முழு அடைப்பு காலம் முடிந்து   மீண்டும்  திறக்கையில்  கடந்த ஒரு மாத கால  தயாரிப்பின்மையை எவ்வகையிலேனும் ஈடு கட்டி ஆகவேண்டும். இருக்கவே இருக்கிறது  டார்கெட் { இலக்கு }  ,இன்செண்டிவ் {ஊக்கத்தொகை} எனும் ஆயுதங்கள் , ஆக இயல்பாகவே , தொழிலாளர்கள்   அனைவரும் இந்த இரண்டு ஆயுதங்களுக்கு  தங்களை  முற்றாக ஒப்புக்கொடுத்து ஆகவேண்டும். ஏனெனில்  அவர்களும், ''அதற்கான தேவை இருக்கிறது''- என்பதை வீடடில் இருந்த இருபது நாட்களில்  தங்களுக்கு தாங்களே  சொல்லி சொல்லி நிறுவி இருப்பார்கள், இந்த  ' ''விட்டதை பிடிக்கும் ' மனநிலை , மேலே சொன்ன  ஒரு நிறுவனத்திற்கு மட்டுமல்ல , உலக மனநிலையாக  மாற நாம் இன்னும் பத்து நாட்கள்  காத்திருந்தால் போதும். பதற்றத்திலுருந்தும்,  தனக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயத்திலிருந்தும்  உருவாகும்  மனநிலை  அது.
படித்த, படிக்காத ,எனும் அனைத்து மனமும்  இணையும் இடம்
.
ஹூண்டாய் ஒரு  நிறுவனமே  இப்படி என்றால், எத்தனை நிறுவனங்கள் , எத்தனை துறைகள்,  உலகெங்கும் .

மினிமலிசம் எனும் ஆவணப்படத்தில்  ஒரு  காட்சி ' ஒரு பெரிய  ஷாப்பிங்- மால்  திறப்பதற்காக மக்கள்  பெரும் திரளென , கண்ணாடி கதவை நெருக்கி தள்ளிக்கொண்டு நிற்கிறார்கள், அன்றைய தினம் மாபெரும்  தள்ளுபடி விலையில் அனைத்து பொருள்களும்  கிடைக்கும் என்கிற  விளம்பரம் மின்னுகிறது. கடை ஊழியர்கள்  கண்ணாடி கதவை திறக்கிறார்கள் , ஒரே நிமிடத்தில் ஆயிரக்கணக்கான, மனிதர்கள்  கடைக்குள்  பாய்ந்து  கையில் கிடைத்த அனைத்தையும்  அள்ளி  அள்ளி , தங்கள் கூடைகள் மற்றும்  தள்ளு வண்டியை நிரப்புகிறார்கள் ,  ஒரு மூதாட்டி, தன்  5வயது பேத்தியுடன் ,தட்டு தடுமாறி   உள்ளே வந்து, அந்த குழந்தை , ஒரு பொருளை எடுத்து கையில் வைத்திருக்க , ஒரு யுவதி  பாய்ந்து வந்து  அந்த குழந்தையின் கையில் உள்ள  அந்த பெட்டியை  வலுகடடாயமாக பறிக்கிறாள் ,  இப்போது பாட்டி  அலற, குழந்தை  கதறி அழ , வந்த யுவதி  இவர்கள் இருவரையும் உதைத்து கீழே தள்ளிவிட்டு விட்டு , அந்த  அட்டை பெட்டியை கொண்டு செல்கிறார்,  இது போன்று  விடிய,விடிய  காத்திருந்து , ஐ-போன்கள் வாங்குவது , புத்தகங்கள் வாங்குவது  என படம் முழுவதும் 'நுகர்வு வெறி ' காட்சிகள்  ஏராளம். இதிலிருந்து முற்றிலும்  மாறுபட்ட  ஒரு குழுவாக இருக்கும் "'மினிமலிஷட்"' என்கிற  குறைந்த பொருட்களுடன் வாழும் மக்கள் பற்றிய  படம் அது

இந்த படம் முடிகையில் இயல்பாக மனதில் தோன்றிய சொல், ''நுகர்வு வெறி'' அதை தொடர்ந்து. நம் மரபில் உள்ள நேர்மறை சொல்.

'' மிதம் புக்த்வா ''
எனும் சொல்லாட்சி ,அதாவது   மிதமாக உண்ணுதல். இதை உணவு என்கிற அர்த்தத்தில் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை . மிதமாக நுகர்தல் என்றே கருதலாம்.  உணவு , பேச்சு ,மனம் ,உணர்ச்சி  என அடுக்கிகொண்டே   செல்லலாம்.  


இதோ  நடை திறக்க இருக்கிறது , நாம் பதட்டமாக  பாய்ந்து சென்று , ஒருமாத  காலமாக  அழுத்தி வைத்திருந்த  'நுகர்வு  வெறியை ' நிரப்பிக்கொள்ள  போகிறோமா, அல்லது  நம்முள்  எங்கேனும்  சற்று  சமநிலை இருக்கிறதா, ' பதற்றப்பட ஒன்றுமில்லை  என்று  நமக்கு நாமே  சொல்லி வைத்திருக்கிறோமா ? என்பதை இன்னும் அடுத்த பத்து நாட்களில் சுய பரிசோதனை செய்து கொள்ளலாம் .


நிச்சயமாக , நம் மரபில், குல வழக்கத்தில், ஊர் கட்டுபாட்டில், ஆசிரியர் சொல்லில் , ஞான நூல்களில், பயிற்சி முறைகளில்   என  எங்காவது ஒரு பாதை நமக்கென திறந்திருக்கும் . அதை அடைவது மட்டுமே , பதட்டத்தில் இருந்து பயமின்மைக்கு சென்று சேர வழி.

நமது  இன்றைய தேவை ,

அஸத்தோமா ஸத்  கமய 
{ பொய்மையில் இருந்து மெய்மை நோக்கி }

தமசோமா ஜோதிர் கமய 
{ இருளிலிருந்து ஒளியை நோக்கி } 

ம்ருத்யுர்மா  அம்ரிதம் கமய 
{ மரணத்திலிருந்து  மரணமின்மைக்கு } 


அல்ல, 

பதற்றத்திலிருந்து  பயமின்மைக்கு  செல்லும்  பயணம் மட்டுமே.அது  ஒரு கல்வி என,   ஞானம் என, நம் வேரில் இருக்கிறது  அதை அடைக .  





Featured Post

The Master Christian - A NOVEL by Marie Corelli

 - குயவன் கையில் களிமண்ணாய்...... தமிழில் சுபஸ்ரீ  ---------------------------------------------------- மெய்யியல், தத்துவம் ஆன்மீகம், மற்றும...