Thursday, April 29, 2021

                                            சம்ஸ்காரா - யு .ஆர் .அனந்தமூர்த்தி

ஒரு நாவல் நம்  ஆழ்மன, புராண காலத்து பைராகியையும் , நவீன கால  ஷோர்பாவையும் { https://en.wikipedia.org/wiki/Zorba_the_Greek }. ஒரே  நேரத்தில்  உயிர்தெழச் செய்யுமெனில், அது நாவலின் வெற்றி மட்டுமல்ல  நமது வெற்றியும் தான். ஒரு வாசகராக .

ஏற்கனவே இந்த  நாவல் குறித்து கணிசமாக உரையாடப்பட்டும், சர்ச்சைகளில் மூழ்கியும் , இணையத்தில் வாசிப்பனுபவங்களும் ,பல கட்டுரைகளும், இருந்தாலும் ,    மேலும்  பல்வேறு  தளங்களில் வைத்து  வாசிக்கவும் , உரையாடவும்  சாத்தியங்களை உள்ளடக்கிய  நாவல்  இது.  

தென்னகத்து  வைணவ தளங்களை ஒட்டியிருக்கும் அக்ரஹாரத்து, கூட்டு வாழ்வியலில் தொடங்குகிறது. அழகிய ஊரின் பின்னணயில் தொடங்கினாலும், கதை முழுவதும் பிணங்களும் , அழகின்மையும் , பேரழிவும் , மனித அவலங்களும் , மேலும் சில தத்துவங்களையும் , விடுதலைகளையும் வைத்து கவனமாக நெய்யப்பட்டிருக்கிறது.

சம்ஸ்காரா என்கிற சொல்லோடு ''வாசனா '' என்கிற சொல்லாட்சிக்கும் ஒரு இணைப்பு உண்டு.      மரபணு தொடர்ச்சி , மரபு தொடர்ச்சி  என்கிற இரு கூறுகளாலும், நற்பண்புகளை வளர்த்தெடுத்தலை , அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதலை  ''சம்ஸ்காரா''  என்றும் ,  அதே போல தொடர்ந்துவரும் இயற்கையான , காம , குரோத , மோக , மத , மாச்சர்யங்களை , ''வாசனா '' என்றும்  வகை பிரிகிறது இந்திய  அறிதல்முறை .

பிராணேஸ்வரர் தமது கல்வி, ஞானம் , வேள்வி , நியம நிஷ்டைகளால், துர்வாசபுரம்  எனும் இந்த அழகிய கிராமத்தின், மதிப்பிற்கும் , வணக்கத்திற்கும் உரிய, அன்பான மாத்வர். 

நாரணப்பன் அதே அச்சாரத்தில் பிறந்த அனாச்சார பிராமணன், மாமிசம் , குடி , கூத்தியாள்,  என எதிர் துருவம். 

முதல் அத்யாயத்திலேயே, நாரணப்பனின் மரணத்தில் தான் கதை தொடங்குகிறது. அனாச்சார வாதியான நாரணப்பனுக்கு ஆச்சார முறைப்படி இறுதி சடங்குகள் நடத்துவதா? இல்லையா? என்பதே வழக்கு. 

பிராணேஸ்வராச்சாரியார்க்கு முடிவெடுக்கும் பொறுப்பு வந்து சேர்க்கிறது. அத்தனை பெரிய கல்விமான் , ஞானி , வேதங்களிலும் , தன் கல்வியிலும் விடைதேடி சலிக்கிறார். 
நாட்கள் கடந்து சென்று, பிணம் நாறுகிறதே தவிர எந்த முடிவும் எட்டப்படவில்லை. 
இது தனக்கு தெய்வம் தந்த பரீட்சை என சமாதானம் கொண்டு துங்கபத்ரையின் கரையில் இருக்கும் ஹனுமனை சரணடைகிறார். ஹனுமனும் இரண்டுநாட்கள் எந்த ஒப்புதலும் தராத நிலையில்,  தனது காமம் எனும் இயற்கையின் முன்னால் தோற்று நிற்கிறார் . 
கழிவிரக்கம் , சுய பட்சதாபம்  என அனைத்தும் சேர்த்து, யாரிடமும் சொல்லாமல் ஊரை விட்டு ஓடி ஒரு மாபெரும் விடுதலையை பெற்று திரும்புகிறார்.

தொன்மையை , மரபை, ஆச்சாரங்களை ,  இந்த வாழ்வில் எவ்வளவு தூரம் பற்றிக்கொள்ளலாம் , அந்த கயிறை எவ்வளவு தூரம் தளர்த்திக்கொள்ளலாம்,எங்கே எல்லாம் முழுவதுமாக விட்டுவிடலாம்  என நாவல் முழுவதும் வந்து செல்லும் பல்வேறு கதாபாத்திரங்கள் வந்து விளையாட்டிக்காட்டி விட்டு செல்கிறது.
 
நாரணப்பனின் துணைவியாக வரும் சந்திரி தாசிகுலத்து பெண்ணானாலும் , பிராமண சாபங்களும் சடங்குகளுக்கும் ஒருசேர அஞ்சுபவள். நாரணப்பனை மட்டுமே நம்பி வாழ்ந்தவள். ஒருவகையில் பத்தினி.  ஆச்சாரவாதி. 
நிலைமை கைமீறி போகும் வேளையில் தன் ஆச்சாரத்தை , தொன்மையின் மீதான பயத்தை, உதறிவிட்டு மேலெழுந்து செல்லக்கூடியவள்.

இதற்கு நேர் எதிராக, ஆச்சார்யமும் , அனுஷ்டானங்களும் நிறைந்த அக்ராஹாரத்து ஆண்களுக்கு சந்திரியின் மேல் காமமும் , பெண்களுக்கு, சந்த்ரியின் அனாமதேய நகைகளின் மேல் மோகமும் என , நியம நிஷ்டைகளை மீற முடியாமல் புழுங்குபவர்கள் .

நாவலில் நடுவில்  பிணவாடையும் , பெரும்தொற்று  பிளேக் நோயின்  ஆட்டமும், அழகாக அறிமுகமான  அக்ராஹாரத்தை , அவலட்சணங்கள் மிக்க, செத்த எலிகளையும், பிணங்களையும்  கொத்தி தின்ன காத்திருக்கும்  கழுகுகளால்  நிறைந்த மயானபூமியென மாற்றுகிறது



.இரண்டு  பைராகிகள் 



இவர்கள் அத்தனை பேருக்கும் மேல்  நாவலின் 'ஆன்மா'  என வந்து செல்பவன்  ''புட்டா '' எனும் வழிப்போக்கன்.

ஆதி சங்கரர் ''மனீஷா பஞ்சகம் '' எழுதுவதற்கு தூண்டுதலாக இருந்த சம்பவம்.

 ஒரு புலையன், அல்லது  பைராகி , குளித்துவிட்டு கோயிலுக்குள்
செல்லும் , சங்கரரை வழிமறிக்க , அவனை  ''விலகிப்போ '' என துரத்துகிறார் சங்கரர்.   
பைராகி கேட்கும் இரண்டு கேள்விகளுக்கு, பதிலாக அமைந்தது தான்  ஆத்ம ஞானம் நிரம்பி வழியும்  ''மனீஷா பஞ்சகம்'' எனும் நூல் என  சொல்வதுண்டு . 

இரண்டாவது.
  
நவீன  பைராகி.  ''ஷோர்பா''  { Zorba the Greek} எனும்  நாவலிலும் , சினிமாவிலும் வரும்  மனிதன்.   

ஷோர்பா  யார்?    
அவன் வழிப்போக்கன்,  
ஊர் என ஒன்றை அடையாதவன், 
சிறுகுழந்தையின் துறுதுறு கண்களுடன் அனைத்திலும் உள்ள அதிசயத்தை காண்பவன். 
காதலன் .
காமமும் பொருட்டானவன்,  
சரியும் பல்லக்கில் திடீர் என வந்து  தாங்கும்  ''பாதம் தாங்கி'',  
படிக்காதவன்.  
அனைத்தும் அறிந்தவன்  ஆகவே ஆணவமற்றவன். 
தனது திட்டங்களின் தோல்வி ஓட்டைகளில் சிரிப்பை வைத்து அடைப்பவன்.
சரிந்து விழுந்த  தன்  வாழ்க்கை கப்பலின் மீது ஏறி நின்று நடனமாடுபவன் ,  
ஆடிகளைத்த பின் ''பசிக்குது  சாப்பிடலாம் வாங்க '' என  நகர்ந்து விடுபவன் , 
பித்தன் 
பிறைசூடி , 
பெருமாள், 
அருளாளன் . 
சங்கரரை வழிமறித்தவனின் நவீன வடிவம், 
''ஷோர்பா''  எனில்  ஷோர்பாவின்  தமிழ் உச்சரிப்பு  அல்லது கன்னட உச்சரிப்பு  தான்  ''புட்டா'' .


காமுற்று  திளைத்து,   பின் திக்கற்று  திகைத்து , தலைமறைவாகும், பிராணேஷ்வருக்கு, ''புட்டா''  காட்டில் ஒரு  வழிப்போக்கனாக வந்து இணைத்துக்கொண்டு  அனைத்து கட்டுகளிலிருந்தும்  விடுதலை பெற்று தந்துவிட்டு செல்கிறான். நாவலுக்கும் .


துர்வாசபுரம் , பிரானேஷ்வராச்சார்யர் , புட்டா , இந்த முக்கோணத்தை மீண்டும் மீண்டும் , கலைத்து அடுக்கி விளையாட  குறைந்தது  இன்னும் நூறு  சாத்தியங்களையாவது இந்நூல் தன்னகத்தே கொண்டது. அது  நிகழ்க.















 




Featured Post

The Master Christian - A NOVEL by Marie Corelli

 - குயவன் கையில் களிமண்ணாய்...... தமிழில் சுபஸ்ரீ  ---------------------------------------------------- மெய்யியல், தத்துவம் ஆன்மீகம், மற்றும...