Monday, July 19, 2021

 ஆயுர்வேதம் அறிய ஒரு  ராஜபாட்டை

திரிதோஷ மெய்ஞான  தத்துவ விளக்கம் - டாக்டர் இல .மகாதேவன்  

******************************


துறைசார் நூல்களில் கணிசமானவை, அறிவார்ந்த, தகவல்களால் கட்டமைக்கப்பட்ட , தர்க்க ஒழுங்குடன் , அதே நேரத்தில் தேவையான போது மாற்றங்கள் செய்துகொள்ள வசதியாக, அந்தந்த துறையின் வல்லுநர்களால் எழுதப்படுபவை. 

அவற்றுள் சில நூல்கள்  தகவல்கள் , ஆய்வுகள் ,ஒப்பீடுகள் , போன்ற கட்டுமானங்களையும்  தாண்டி,  அதை  எழுதியவரின்  அனுபவம் ,அர்ப்பணிப்பு , மற்றும்  உள்ளுணர்வால் மற்ற நூல்களை விட  ஒரு படி மேலே சென்று என்றென்றைக்கும் என  நிற்பவை.  அப்படி ஒரு நூல்  தான்  சமீபத்தில்  வாசித்த,  மருத்துவர். எல்.மகாதேவன் அவர்கள் எழுதிய  .''திரிதோஷ மெய்ஞான  தத்துவ விளக்கம்''  எனும் ஆயுர்வேத  நூல்.  

நிச்சயமாக இது ஆயுர்வேதம் சார்ந்த  மாணவர்கள் , மற்றும் அத்துறையில் நாட்டம் இருப்பவர்களுக்காக எழுதப்பட்ட நூலாயினும். சற்று  தீவிரமாக படிக்கும் யாவரும் படித்து   புரிந்து கொள்ள வசதியாக, தெளிவாக தொகுக்கப்பட்ட அறிவுத்தொகை  எனலாம்.

நண்பரும் ,மருத்துவருமான ,சுனில் கிருஷ்ணன் இந்நூலை  சில வருடங்களுக்கு முன்னர் , பரிந்துரைத்து இருந்தார் , அப்போது  அச்சில் இல்லை,   எனினும் டாக்டர். மகாதேவன் அவர்களை  நேரில் சென்று சந்தித்து , அறிமுகம் செய்து கொண்டேன்.
 அப்போது எனது முகவரியை பெற்றுக்கொண்டு,  நினைவில் வைத்திருந்து , புத்தகம் அச்சில் வந்தவுடன்  அன்பளிப்பாக  அனுப்பி வைத்தார், மருத்துவரின் வலதுகரமென திகழும்  நண்பர்  ஸஜூ.

இந்நூலின் முதல் முப்பது நாற்பது பக்கங்கள் இறை வாழ்த்து, குருநாதர்களுக்கான  சமர்ப்பணங்கள், பிரார்த்தனைகள், என துவங்குகிறது, அதில் முக்கியமாக   ''சுர நாதர் '' எனும் ஜ்வர தேவதையான, வீரபத்திர மூர்த்தியின்  படத்துடன் ,  கொடுக்கப்பட்டுள்ள  செய்தி.  ஆயுர்வேதம் என்பதே  'தெய்வ வியபாச்ரய  சிகிச்சை '' { இறை சார் மருத்துவம்} என்று தான்  தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது.

மகாதேவன் அவர்களுக்கு  மரபிலக்கியத்தில் பயிற்சியும்,ஞானமும் இருப்பதால், மேற்கோள்களும் , விளக்கங்களும் மிகச்சரளமாக, சுட்டிக்காட்டப்பட்டு, தெளிவை  தருகிறது . எனினும், ஆயுர்வேதம் சார்த்த மூல நூல்களான , சரஹ சம்ஹிதை , சுஸ்ருத சம்ஹிதை , அஷ்டாங்க ஹிருதயம் , அஷ்டாங்க சங்கிரகம், வங்கசேன சம்ஹிதை, காஸ்யப சம்ஹிதை , போன்ற  நூல்களே பெரும்பாலும் ஆய்வுக்கும் , அடிப்படைக்கும் , சுட்டப்படுகிறது .

 மகாதேவன் அவர்கள் தன் வாழ்க்கை முழுவதையும், ஆயுர்வேதம் சார்ந்து அமைத்துக்கொள்ளவும் , அதில் தனக்கென ஒரு மெய் தரிசனத்தை அடையவும், வழிகாட்டியாக இருந்த  தனது ஆசான்  ஸ்ரீ .பி.வைத்யநாதன் அவர்களை பற்றி பல்வேறு இடங்களில் , அனுபவங்களுடன் குறிப்பிடுகிறார்.  

ஆயுர்வேதத்தை பொருத்தவரை இந்த ஒட்டுமொத்த வாழ்வும் ''த்ரிதோஷம்'' எனப்படும் முக்குற்றங்களால் ஆனது , அதாவது வாதம், பித்தம், கபம்.
 
இதில் ஏற்படும் சமன்குலைவு,  'நோய்' என, 'வாழ்க்கை சிக்கல்'. என உருவெடுக்கிறது. ஆயுர்வேதம், அதற்கான சிகிச்சைகளை முன்வைக்கிறது.   இந்த அடிப்படை அறிவை  மகாதேவன் அவர்களின் ஆசிரியர்,  " திரிதோஷ அனுஸந்தானம் செய் '' என்று. ஒரு உபதேச வாக்கியம் போல் ,'தியான  மந்திரம்' போல் சொல்லிச் செல்கிறார்.  அவர் சென்ற பின், தன்  வாழ்நாள் முழுவதும்,  காணும் ஒவ்வொரு காட்சியிலும், மஹாதேவன் சார் உற்று நோக்குவது  இந்த 'முக்குற்ற சமன்குலைவைத் தான்.  இந்த த்ரிதோஷம் பற்றிய முழுமை கைகூடியதால், இதை 'முக்குற்ற காதல்' என்றே  சொல்லிக்கொள்கிறார்.

அதர்வண வேதத்தின் உப வேதமாக கருதப்படும், ஆயுர்வேதம்,   பிரம்மாவிட மிருந்து , தக்ஷ பிரஜாபதி, அவரிடமிருந்து அஷ்வினி குமாரர்கள், அவர்களிடமிருந்து  இந்திரன் , பின் பரத்வாஜர் , என ஒரு  நீண்ட ரிஷி பரம்பரை வழியாக வந்துள்ளது  என  தொடங்கி  அதற்கான புராண நூல்களையும் , இதிகாச மேற்கோள்களையும்  காட்டி, அங்கிருந்து அக்னிவேசர்  பரம்பரையில் வந்த ரிஷி எழுதிய  கி.மு 7ம் நூற்றாண்டு நூலான ''அக்னிவேச தந்த்ரம்''  எனும்  நூலை சு ட்டிக்காட்டி ,  இதை ஒட்டுமொத்தமாக  தொகுத்தவர் 'சரகர்'  என்பதால்.   கி பி 2ம்  நூற்றாண்டில்  எழுதப்பட்ட ''சரக சம்ஹிதை 'ஆயுர்வேதத்தின் முக்கிய மருத்துவ நூலாக கருதப்படுகிறது.   அதே போல  அறுவை சிகிச்சையை பிரதானமாக கொண்ட  ''சுஸ்ருத சம்ஹிதை'' எனும் நூல் ,   தன்வந்திரியின் மாணவரான சுஸ்ருதர் என்பவரால்  எழுதப்படுகிறது. பின்னர்  கி பி எட்டாம் நூற்றாண்டில் ,  நோய்க்கூறுகளை கண்டுபிடிக்கும் ''மாதவ நிதானம் ' எனும் நூலும் , பதிமூன்றாம் நூற்றாண்டில்  மருந்துகளின் செயல்முறை விளக்க நூலான , ''சாரங்கதார  சம்ஹிதை'' எனும்  நூலும்  எழுதப்படுகிறது.  இப்படி புராணத்தில்   தொடங்கி , வரலாற்று சான்றுகள் வழியாக , நவீன மருத்துவத்துடன் ஆயுர்வேதத்தை இணைத்தும் , இரண்டு மருத்துவ முறைகளின் சாதக , பாதக அம்சங்களையும் , ஆயுர்வேதத்தின் சிறப்புகள், போதாமைகள்,  போன்று பல்வேறு அம்சங்களையும் எந்தவித புனிதப்படுத்தலும் , புறக்கணிப்பும் இன்றி சிறப்பாக தொகுத்திருக்கிறார்.

சங்க இலக்கியம் ,  பக்தி இலக்கியம் , சித்தர் மரபு , தத்துவ மரபு , என சில நேரங்களில் இந்நூல்  பேசுபொருளுக்கு வெளியே சென்று, ஆயுர்வேதத்திற்கான  சான்றுகள் ஏதேனும் இருக்கிறதா? என ஆராய்கிறது.  ஒருசில குறிப்புகள் கிடைக்கிறது, அவ்வளவு தான். அதற்காக இவ்வளவு தேடல் தேவையா? என்கிற  கேள்வியும் உருவாகிறது .

இன்று, யூடியுப் விஞ்ஞானிகள் எனும் மாபெரும் அறிஞர் கூட்டம், 
how  to  heal others ? என்பதை  499 ரூபாய் மட்டுமே  என்கிற  online   Course ஸாக நிறுவி இருக்கிறார்கள்.   அதுபோல  ஆயுர்வேதத்திற்குள் இருக்கும்  சந்தேகத்திற்கு இடமான நாடி பிடித்து சொல்லுதல் , போலி மருத்துவர்களை பற்றிய  குறிப்புகள்,   இன்றைய ஆயுர்வேத மருத்துவ மாணவனால் அடைய முடியாத  சாத்தியங்கள் , ஆகவே நவீன மருத்துவத்தையும் சேர்ந்தே கற்க வேண்டிய முக்கியத்துவம்  என துல்லியமாக வரையறை செய்கிறார் . 
இந்த பார்வை , ஒற்றை நோக்கு கொண்ட , நவீன மருத்துவருக்கும், மரபில் மட்டுமே எல்லாம் உள்ளது என்கிற உறுதிப்பாடு கொண்ட  பாரம்பரிய வைத்தியருக்கும், ஒருவித திகைப்பையும் ,  எரிச்சலையும் , வரவழைக்கலாம். எனினும், நவீன மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவம் என்கிற இரண்டு அறிவு தொகையையும்,  முழுவதுமாக கற்றுணர்ந்து , கற்றதை பயிற்சி செய்து , ஐந்து லட்சம் மனிதர்களுக்கு சிகிச்சை அளித்த ஒரு  ஆசான் என்கிற இடத்திலிருக்கும் ஒருவரின் குரல் இந்த புத்தகம்.

ஆயுர்வேதம்.  முழுவதுமாக, இந்திய தத்துவ மரபான , சாங்கியம், நியாயம் ,வைசேஷிகம் என்கிற  தரிசனங்களிலிருந்து, பெற்றுக்கொள்ளப்படட 24 அல்லது 25 தத்துவங்களை வைத்து கட்டமைக்கப்பட்டுள்ளது என்கிற  குறிப்பை  ஆசிரியர்  தனித்தனி அத்தியாயங்களாக  விஸ்தாரமாக  விளக்குகிறார்.

 மருத்துவ நூல் என படிக்கத்தொடங்கும் ஒருவருக்கு இந்நூல்,  முற்றிலும் வெளியே சென்றுவிட்டது என்கிற எண்ணத்தை தரலாம் , ஆனாலும்  சூத்திரங்களை சுட்டிக்காட்டி,  தத்துவங்களுக்கும், மருத்துவத்திற்கும் ஒரு கோடு வரைந்து,  இணைக்க முயற்சிக்கிறார் .அவை பெரும்பாலும் பொருந்தி வருகிறது. 
வாயு {காற்று } அம்சம் உடையது  ''வாதபிரக்ருதி'',  அக்னி அம்சம் உடையது  ''பித்த பிரக்ருதி'',  நீர் அம்சம் உடையது  ''கப பிரக்ருதி'',என்றும்   இந்த வாழ்கை முழுவதையும்  ஆயுர்வேதம்  திரிதோஷம் என  பிரிக்கிறது, 
 
இது  பஞ்சபூதம் ,பஞ்சகோசம் ,த்ரிகுணம் எனப்படும் முக்குணம் என்கிற புற மற்றும் அகவயமான  காரணிகளிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது.   அதை சார்ந்தே மொத்த மருத்துவமும்  இங்கே மேற்கொள்ளப்படுகிறது.  
இந்த த்ரிதோஷம் , தவிர ஆயுர்வேதத்தின் முக்கியமான அம்சம்  சப்த தாதுக்கள்  எனப்படும். நம் உடலின் கட்டுமானத்திற்கு சாரமான  7 பொருட்கள். 
அல்லது  திசுக்கள்  என்று கொள்ளலாம். இந்த சப்த தாதுக்கள் பற்றி விலாவாரியாக பேசப்படுகிறது, அதற்கு ஆதாரமாக திருமூலர் முதல்  நவீன மருத்துவ குறிப்புகள் வரை பல்வேறு  தரவுகள் கொடுக்கப்படுகிறது. இது ஒரு முக்கியமான பகுதி.

இந்நூல் முக்கியமாக, நவீன மருத்துவத்தின் அனைத்து கூறுகளையும், உள்ளடக்கி, ஆயுர்வேதத்தின் சிகிச்சை முறையுடன் ஒப்பிட்டு, அதற்கு இணையான நவீன  மருத்துவ சொல் மற்றும் செயல்பாடுகளை பட்டியலிட்டுக்கொண்டே இருக்கிறது. 

ஆயுர்வேதத்தின் அடிப்படையான  வாதம் ,பித்தம் கபம்  என்கிற 
 தன்மைகளை,  அதற்கு இணையான நவீன மருத்துவ பகுப்பாய்வு முறையில், முறையே  எக்ட்டோமார்பின் { ECTOMORPH } மீசோமார்பின் {Mesomorph } எண்டோமார்ப் {Endomorph } என்று வகை பிரித்து மூன்று வகையான உடல் மற்றும் மன அமைப்புகள் பற்றி பேசப்படும் 'பிரக்ருதி ' எனும் பகுதி இந்நூலின்  மற்றுமொரு முக்கியமான பகுதி.

  
அதுபோக , வர்மம் , சீனமருத்துவம் , யோகம் ,ஜோதிடம் , கால்நடை மருத்துவம், சித்த மருத்துவம், தாவர மருத்துவம் என மற்ற மரபுகளை பற்றிய அடிப்படைகளையும் இந்நூல் பேசுகிறது. 

திரிதோஷத்தை,  ராகங்கள் , ஐவகை நிலங்கள் , நிறங்கள், என அனைத்திலும் பொருத்திப் பார்க்கிறது ஆயுர்வேதம். 

உதாரணமாக  ''சக்ரவாகம்'' எனும் ராகம் பற்றி பேசுகையில் ' பிரிந்த துணையை  தன்பால் வரவைப்பதற்கு, மேல் ஸ்தாயியில் பாடப்படும் இந்த ராகம், இன்றும்  இறைவனை படித்தொழும் காலைப்பொழுதில் பாடப்படுகிறது, இது சோக நிலையிலுள்ள வாத,கபத்தை வெளிக்கொண்டு வரும். இது anxiety , Mania, போன்ற நோய்களுக்கு சிறந்தது '' என அறிமுகப்படுத்துவதுடன். 30க்கும் மேற்பட்ட ராகங்களை அதன் தன்மைகள் , ஆயுர்வேதம் அதை எப்படி பார்க்கிறது என்கிற பார்வை  முன்வைக்கப்படுகிறது.
 
'பொதுவாக ராகங்கள் மனோமய கோஷத்தில் செயல்புரிகின்றன. சங்கீத ஞானம் உள்ளவர்களுக்கு இந்த அத்யாயம் பலனை தரும் என்கிறார் { ஒரு பேட்டியில், ராகங்களை சிகிச்சைக்கு பயன் படுத்தலாம் ,ஆனால் நோயாளிக்கு  அதற்கான காதுகள் அமைந்து இருக்கவேண்டும்'' என்று கூறுகிறார்.}

மேலும் , நிறங்கள் , ஐவகை நிலங்கள்,செல்லப்பிராணிகள்  மற்றும்  திரிதோஷத்திற்கும் உள்ள தொடர்பு.   கால்நடை மருத்துவம் , விருட்ச்சாயுர்வேதம்,எனும் தாவர மருத்துவ தொடர்பு என பல பகுதிகளை அறிமுகம் செய்து வைக்கிறார் .

இறுதியாக 
மருந்துகளும் , சிகிச்சைகளும்.
இந்த நூலை படித்துவிட்டு  வீட்டிலேயே அனைத்து நோய்களுக்கும் மருந்து தயாரித்துக் கொள்ளலாம் என்றோ, 'எனக்கு ஆயுர்வேதத்தில் எல்லாம் தெரியும், என பக்கத்துக்கு வீட்டிற்கு மருத்துவ பரிந்துரை செய்வதோ, மாபெரும் பக்கவிளைவுகளை உண்டாகலாம்.  ஆகவே, படித்துத் தெரிந்து கொள்வதோடு நிறுத்திக்கொண்டதால். அனைவருக்கும் நன்மை பயக்கும்.  
''பிரதிமாதம் லாட்ஜில் ரூம்'' போட்டு மருத்துவம் பார்க்கும் நபர்கள் கைகளில் இந்நூல் கிடைக்காமல்  இருந்தால்  நல்லது என்றே தோன்றுகிறது. ஏனெனில் மிகப்பெரிய உழைப்பில் உருவான நூல் இது.  ஆகவே தேடிக் கண்டடைவதே சிறப்பாக இருக்கும்.
 
மருத்துவர்  மகாதேவன் அவர்கள் 50க்கும் மேற்பட்ட ஆயுர்வேதம் , மற்றும் அதை ஒட்டிய துறைசார் நூல்கள் எழுதியிருக்கிறார். தொடர்ச்சியாக மாணவர்களுடன்  உரையாடலில் இருப்பவர். மிகப்பெரிய தொகுப்பு நூலான இது,
  அவரது உழைப்பும், அனுபவமும் இணைந்து உள்ளுணர்வால் உருவானது  எனலாம்.
நான் என்னுடைய துறைசார் {யோகம் }நூல்களுக்கு துணையாக நவீன மருத்துவ நூல்களையும் ,பாரம்பரிய மருத்துவ நூல்களையும் தொடர்ந்து வாசித்து வருபவன், உதாரணமாக  மேயோ கிளினிக்கின்  ' உடல் நலக்கையேடு ''நூல்  ஆங்கில மருத்துவத்தில் அடிப்படைகளை அறிய   எந்த அளவு முக்கியமோ, அதற்கு இணையாக திரிதோஷ மெய்ஞ்ஞான  தத்துவ விளக்கம் நூலை, ஆயுர்வேத அடிப்படைகளை அறிய முக்கியமானது என  குறிப்பிடலாம். 
ஆர்வமிருக்கும் ஒருவர் , இந்நூலில் கொடுக்கப்பட்டிருக்கும்  ஆய்வு நூல்கள் , மற்றும்  சம்ஹிதைகளை  தேடிப்பிடித்து படிக்க தொடங்கினாலே,  அடுத்த சில வருடங்கள் படிப்பதற்கான  பட்டியல்ஒன்று  அமையும்.
எனினும் இது எல்லோருக்குமான பொது நூலாக இருப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. ஒருவேளை இந்த நூலின் தன்மையே  அது தானோ என்னவோ " தனக்கானவர்களை அது கண்டு கொள்ளும் "


Featured Post

The Master Christian - A NOVEL by Marie Corelli

 - குயவன் கையில் களிமண்ணாய்...... தமிழில் சுபஸ்ரீ  ---------------------------------------------------- மெய்யியல், தத்துவம் ஆன்மீகம், மற்றும...