Tuesday, January 11, 2022

கதீட்ரல்- எனும் ஆடல் சபை

 INCEPTION- படம். கனவு சார்ந்த,  அறிவியல் , தொழில்நுட்பம் , கற்பனை  என மூன்று கோணங்களில் எடுக்கப்பட்ட சரியான கதை கட்டுமானமுள்ள ஒரு  படம்  இதில்  அடுத்தவர் கனவுக்குள் ஊடுருவுதல் , அவர் கனவில் சில நிகழ்வுகளை விதைத்தல் , அதை  உலகியல் சார்ந்த பயனுக்கு, உபயோகித்துக் கொள்ளுதல்.  என  வலுவாக பின்னப்பட்ட திரைக்கதை .  


அப்படி,  அடுத்தவர் கனவில் ஊடுருவுவதும், அதிலிருந்து வெளிவருவதும், என  தொழில்நுட்பமாக பேசப்பட்டாலும்,  கனவில் இருப்பவர், மயக்கத்தில் இருக்கிறாரா ? நிஜஉலகில் வாழ்கிறாரா? என கண்டறிய. முக்கியமான கருவியாக ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய குறியீட்டு ரீதியான ''ஒரு  பொருள்'' வழங்கப்படுகிறது.   உதாரணமாக.  கதாநாயகனுக்கு  சுண்டுவிரல் அளவிலுள்ள சிறிய 'பம்பரம் '  இந்த பம்பரம் சுழலும் போதெல்லாம் நாயகன் நிஜ உலகில் இருக்கிறான்  என காட்டப்படுகிறது .

இப்படி குறியீட்டு ரீதியான பொருள் நாம் அனைவருக்கும் எதோ ஒன்று தேவையாகிறது அது நம்மை கனவிலிருந்தும் , வேதனையிலிருந்தும்  மீட்டுவந்து நிஜத்தில் அமரச்செய்கிறது.

'கதீட்ரலில்' தூயன் செய்திருக்கும் மாயமும் அதுதான்.  தனது தனித்துவமான கற்பனை மூலம்  தேர்ந்த குறியீட்டு சொற்களை,  கச்சிதமாக அடுக்கி ஒரு  தேவாலயத்தை போல கட்டி  எழுப்பி மனித அறிவு சேகரம் எனும் அகங்காரத்தை கோபுரத்தின் உச்சியில் வைக்கிறார்,  பின்னர் இயற்கையின் ஆடலுக்கு அந்த கட்டுமானத்தை ஒப்புவித்து,  புயல் கொண்டு சிதறியடிக்க செய்து, மண்மேடு என மனித அறிவை பிசுபிசுத்து போகச்செய்கிறார். 

அதற்கு துணையென வரலாற்றை, மனித அகந்தையை , உளப்பகுப்பாய்வை, காலத்தை , என தொடர்ந்து பல்வேறு பகடைகளை உருட்டி, உருட்டி நம்மை திகைக்க செய்கிறார் 
முக்கியமாக இந்த நாவலின் மொழி. 

 பொதுவாக யுவன் , போன்றோர் தங்களது புனைவுகளில்  பல்வேறு சாத்தியங்களை நிகழ்த்தி காட்டியிருப்பார்கள். அந்த வரிசையில்   நீண்ட இடைவெளிக்கு பின்னர், தூயன் இதை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்.

மேலே சொன்னது போல வரலாறுக்குள் நாம் செல்கையில் ஒருவித கனவுத்தன்மையில் தான்.  சென்று தொட்டு துழாவி சிலவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.  அதற்கான கூர்மையான மொழியும் ,குறியீடும் இல்லையெனில், தட்டையான கதை கேட்கும் சலிப்பு வந்துவிடும். அது  இங்கே நிகழவில்லை .

கதைக்களம்.  ஒரு பழமையான தேவாலயம்.  காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பஞ்சம் ஆடிமுடித்து , மிஞ்சிய மனிதர்கள், அனைத்தையும் செய்து, கிடைத்ததை உண்டு , உயிரை தக்கவைத்துக் கொண்டிருந்த காலம்.   தேவாலயத்தின் தலைமை  பாதிரி, நோய் கண்டறிபவன் , உளப்பகுப்பாய்வு ஆராய்ச்சியாளன் என பன்முக தன்மை கொண்ட   நீட்ஷன்,  கதையின் மையம்.
  எனினும் அவந்திகையும் ,ஆப்ரஹாமும் தான் நாவலின் முதுகெலும்பு. 

பங்காவாலாவாக வரும் ஆப்ரஹாம் சைகைகள் மூலம் மட்டுமே உரையாடக்கூடியவன்,  அவந்திகையோ ஒரு யட்சியென ,அறிவார்ந்தவள் என ஒற்றை இலக்குடன் கதீட்ரலுக்குள் நுழைந்தவள். என பிரமிக்க வைக்கும் ஒரு ஆளுமை.

 நாவலின் மற்ற அனைத்து பாத்திரங்களும் இவர்கள் மூவருடனும் வந்து இணைந்து நாவலை உச்சி நோக்கி கொண்டு செல்வது தான் நாவலின் மாயம் . 

ஒரு மறைப்பிரதிக்கான  உள்ளடக்கத்துடன் , இரண்டு படிப்பினையை நாவல் பேசுகிறது முதல் படிப்பினை, மனித அகந்தையால், பிறர் ரத்தம் பெற்றேனும்  கட்டி எழுப்பப்படும், அனைத்து வெற்றி பதாகைகளும் ,மாடங்களும் அதனடியில்  ரத்தக்கறை படிந்த சாபம் ஒன்றை துளி நெருப்பென ஆழத்தில் வைத்திருப்பவை.

இரண்டாவது படிப்பினை என 'தன்முனைப்பு ' எனும் ஆதி இச்சையை சொல்லலாம் .

கிழக்கிந்திய கம்பெனி,  உலகம் முழுவதிலும்  திரட்டப்பட்ட அடிமைகளின் பிணக்குவியல்களுக்கு மேல் தான் நமது தேயிலை தோட்டங்களும்,  ரப்பர் தோட்டங்களும் கட்டி எழுப்பப்பட்டது.  அதன் சாபம் உலகப்போர் , செயற்கைப்பஞ்சம் , காலனியாக்க முடிவு , சில கோடி உயிர்பலி என  நிறைவடைந்தது .  
இந்நாவலில் வரும் சித்திரம்  அதன் சுருக்கப்பட்ட வடிவம் என்ற கொள்ளலாம்.

இரண்டாவது படிப்பினை 'தன்முனைப்பு' என அகந்தையுடன் முன்வைக்கப்படும். மனித அறிவு சேகரம் மதம் என்றும் மதத்திற்கு எதிரான புரட்சி என்றும் , அறிவியல் என்றும் அறிவியலுக்கு எதிரான அறியாமை அல்லது மூட நம்பிக்கை என்றும்,  கருத்து என்றும் கருத்துக்கு எதிரான வன்முறை என்றும்,  கடந்த முந்நூறு வருடங்களில் கொன்று குவித்த உயிர்கள் இன்னும் முந்நூறு ஆண்டுகளுக்கு எண்ணிக்கொண்டே இருக்குமளவு அதிகமானது.

நாவலில் வரும் தேவாலயம் கட்டப்படும் சித்திரம் குரூரமானது. மலையின் உச்சியில் எளிதில் மனிதர்கள் சென்று சேர்ந்து விட முடியாத இடத்தில் லாட வடிவில் ஏன் ஒரு தேவாலயம் கட்டப்பட வேண்டும் ?  
அங்கே இறை தாண்டி வேறு எதோ குடி கொள்ளப்போகிறது. என்கிற ஐயம் நமக்கு எழும் தருணத்தில். விடையென நம்முள் ஒன்று திரள்கிறது.
 
பரம்பரை கட்டிட வல்லுநர்களை , கூலிக்கு அழைத்து வந்து வேலை முடிந்ததும்,  பாதி பேரை அனுப்பி விட்டு மீதி நபர்களை தக்க வைப்பதில் இருக்கும் மெல்லிய சந்தேகம்  அடுத்த அத்தியாயத்தில் துலங்கி வருகிறது . 

தங்களது ஞானம் , ரத்தம்,  உயிர்,  என அனைத்தயும் செலுத்தி கதீட்ரலை கட்டி முடித்து கொடுத்தாதவர்களுக்கு, சன்மானமென கிடைப்பது  வேறொன்று.  அவர்களது அப்பாவி தன்மையையும் மீறி அவர்கள் கைகளால் கட்டிடத்திற்கு அதன் அழிவுக்கான மைய அச்சு, ஒரு 'பொறி' என வைக்கப்படுகிறது,  அந்த சாபம் எனும் அச்சு தலைமுறைகள் தாண்டி, இயற்கை சீற்றம் எனும் புயல் வடிவில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

 நீட்ஷன்- உளப்பகுப்பாய்வு ஆராய்ச்சி எனும்  துறையில் தனக்கான ஒரு உயரத்தை, இடத்தை அடைய, பல்வேறு சிகிழ்ச்சைகளையும் , பரிசோதனைகளையும், அதற்கேயுரிய ரகசியங்களுடன் செய்து, அதற்கான நூல் ஒன்றை உருவாக்க முயல.  மேலோட்டமாக நோக்குகையில் இது  மனித இனத்திற்கான தொண்டு என்றும், கருணையும் அறிவும் கொண்ட செயல்பாடு என தோன்றினாலும் அடியில் இருப்பது வேறு ஒன்று என்கிற நெருடல், அவருடைய அத்தியாயம் தோறும் வருகிறது .  

பங்காவாலாவாக வரும் ஆப்ரஹாமின் சித்திரம் நமது மனதுக்கு நெருக்கமான ஒரு குழந்தையின் அறியாமையுடனும் , அனைத்தியும் அறிந்துவிட துடிக்கும் துடிப்புடனும் , தூயன்  இழைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

வாய் பேச இயலாத காது கேளாத என்கிற ''பங்கா வாலா''க்களின் அடிப்படை தகுதியுடன் தான் ஆப்ரஹாம் கதீட்ரல் வந்து சேருகிறான்.  எனினும் சைகைகளால் ஒரு நாவல் முழுவதையும் வாசகருக்கு கடத்திவிடும். மொழியின் லாவகம் அற்புதமான ஒரு அனுபவம். 

ஆப்ரஹாம் உரையாடுவது நம்மிடமல்ல  அவந்திகை எனும் பெண்ணுடன். அவள் இவனை கருவியென தன் லட்சிய இலக்கை நோக்கி ஒரு பூனைக்குட்டியை போல இட்டுச்செல்கிறாள்.  இவனோ முலையுண்ணும் மகவென பின் செல்கிறான், காமம் என்றோ , காதல் என்றோ , கருணை, பாசம்,நட்பு என்றோ எந்த இடத்திலும் பொருத்திவிட்டு முடியாத ஒரு உறவு இங்கே சொல்லப்படுகிறது. அது இயற்கை எய்த இரு அம்புகள் அருகருகே பயணித்து ஒரு இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் சிலநாள் பயணம் .

முற்றாக உன்னை கொடு நான் பிறிதொன்றாக உனக்கு திருப்பியளிக்கிறேன்-  என்கிற கோரிக்கையை முன் வைப்பவை கடைசி அத்தியாயங்கள் . 
 
சுந்தர ராமசாமி அவர்களின்  'புளியமரத்தின் கதை'  சொல்லும் மொழி ஒரு உச்சத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கும் அங்கிருந்து மேலெழுந்து வேறொரு தளத்தில் மொழியின் அன்றைய அனைத்து சாத்தியங்களையும் பரிட்சித்து பார்க்க 'ஜே ஜே சில குறிப்புகள் ' வேறு வகையில் நிகழ்ந்திருக்கும். 

அதேபோல் ''வென்று தணிந்தது காடு'' என உரக்க சொன்ன பாரதியின் மொழி அவருடைய கட்டுரை தொகுப்பில் நம்மை ''என்னுடன் விளையாட வா'' என அழைப்பது போன்ற சிநேகித பாவத்தில் அமைந்திருக்கும் .  
யுவன் , நாஞ்சில் நாடன்  , ஜெயமோகன் ,  என  தனது  முன்னோடிகளின்,  முகடுகளிலிருந்து, முகடுகளுக்கு மொழியால் தாவும்  தந்திர வித்தையை தூயனும் முயற்சித்து வென்று இருக்கிறார்.

நாவலின் போதாமை என ஒன்றை சுட்டி காட்ட வேண்டுமெனில்,  இன்னது தான் கதை என சொல்லிவிட முடியாத அளவிற்கு. கோட்டோவியம் போல செல்லும் கதை.  
அது சரி இதெப்படி குறை என்று ஆகும் ?

Featured Post

Maleysia yoga retreat

 Malaysia yoga retreat https://www.jeyamohan.in/199529/