Friday, February 18, 2022

நிமித்திகனின் தேர்ந்த சொற்கள் - யுவால் ஹராரியை முன்வைத்து

 



எந்த ஒரு திருவிழாவிலும், அதன் உற்சாகத்திற்கு மத்தியில் சிலரை நாம் நிச்சயம் காணவேண்டியிருக்கும், ஒரு குழந்தைக்கு பஞ்சுமிட்டாய்காரனும் ,  பலூன்காரனும் போல. பெரியவர்களை குறிவைத்து திருவிழா தோறும் செல்பவர்கள்,  நிமித்திகர்கள். கிளிஜோசியம் , கைரேகை , எலிஜோசியம், சோளி உருட்டி ஜாதகம் கணிப்பவர், குடுகுடுப்பைக்காரர்.  என, அது ஒரு முக்கியமான  குழு. 

 தம் வாழ்க்கை பற்றி ஏற்கனவே தெரிந்தவற்றையோ,  அல்லது உண்மை என நம்பாவிட்டாலும் வருங்காலத்தை பற்றியோ ,  அல்லது நடப்பு சிக்கலுக்கான பரிகாரம் என, எதோ வடிவில் மனிதர்களுக்கு நிமித்திகர்கள்  சொல்லால் கேட்பதில் அலாதி விருப்பம் இருக்கவே செய்கிறது.

அப்படியான நிமித்திகர்களில், வரலாறு ,அறிவியல் ,
அரசியல், தொன்
மம் , மானுடவியல். என அனைத்தையும் அறிந்த ஒரு அறிஞர், இந்த மானுடகுலம் முழுவதையும்,கணித்து,  தன் சொற்களால் கோர்த்து சொல்ல முடிந்தால் எப்படி இருக்கும்? என்பதற்கு பதில் தான்  யுவால் நோவா ஹராரி. 

அவர் குறிக்களம் வரைந்து,  மிக நேர்த்தியாக சோளிகளை உருட்டி,  முக்காலத்தையும் தன் சொற்களால் திரட்டி அளித்தது தான்  அவருடைய மூன்று நூல்கள். 'யுவால் ட்ரியாலஜி'  எனலாம். 

சேப்பியன்ஸ் எனும் அவருடைய முதல் நூல்  மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு என. கடந்த எண்பதாயிரம் ஆண்டுகால பரிணாம வளர்ச்சியை , மற்ற மிருகங்களைவிட வலிமை குன்றிய ஒரு குரங்கினம் எப்படி தன்,  ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்ற சக்தியால்,  வல்லமை மிக்க மிருகங்கள், முதல் பூகோளம் முழுவதையும், தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.  என்கிற மாயத்தை ஊகங்களும் ,தரவுகளும், வரலாற்று படிமங்களையும், வைத்து பின்னி எழுதப்பட்டு,  உலகம் முழுவதும் கவனம்பெற்ற நூலானது .

இவருடைய இரண்டாவது புத்தகமான  ''ஹோமோ டியஸ்''  மனித வாழ்வின் வருங்காலத்தை ஆய்வு செய்கிறது. ஹோமோ சேப்பியன்ஸ் எனும் இந்த இனம்  இறுதியில் எப்படி கடவுளராக ஆவர். அறிவு மற்றும் அகவிழிப்புணர்வின் உச்சக்கட்டம் என்னவாக இருக்கும் ? தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிர்தொழில் நுட்பத்தின் சங்கமம் அதன் சாத்தியக்கூறுகள் போன்றவற்றை விரிவாக அலசியிருப்பார் .

முந்தைய இரண்டு புத்தகங்களும் பெரும்கவனத்தையும், வெற்றியையும் பெற்றுவிட்டதால் , இந்த கட்டுரையில் நாம் அவருடைய மூன்றாவது வெற்றிப்படைப்பான '' 21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் '' என்கிற புத்தகத்தை அறிந்துகொள்ள முயற்சிக்கலாம் .

பெயர்தான் அப்படி இருக்கிறதே தவிர , இதில் எந்தவித கறார் பாடத்திட்டமோ , மேடை முழக்கங்களோ அன்றி, மிக இயல்பாக உள்ளது உள்ளபடி என்கிற ஒரு காலக்கண்ணாடியென நிகழ்காலம் குறித்து விளக்குகிறார் .   நிகழ்காலம் என யுவால் உத்தேசிப்பது  2018 முதல் இன்னும் ஒரு முப்பது , நாற்பது வருடங்கள் என தோராயமாக நாம் கணக்கு வைத்துக்கொள்ளலாம் . அப்படியான உலக சம்பவங்களையும், மனிதர்களையும் தான்  முன்வைக்கிறார்  என்பதால் .

யுவால் இந்த நூலின் வழியாக நம்மிடம் பேசுகையில் மூன்று குரல்கள்  ஒலிக்கிறது. ''உலக அரசியல் , சமகால வரலாறு, தொழில்நுட்ப அசுரவளர்ச்சி, வர்த்தகப்போர்கள்,  என நம்மால் கற்பனை செய்து பார்ப்பதற்கோ, அந்த மாபெரும் நிகழ்வின் மீது ஒரு துளி கூட கட்டுப்பாடு கொள்வதற்கோ, எந்த சாத்தியமும் இல்லாத, வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்கிற கையறுநிலை கொண்டவர்கள் நாம் அனைவரும்''- என சொல்லும் முதல் குரல்.

இரண்டாவது குரல் இன்னும் சற்று ரகசியமாக ஒளிக்கக்கூடிய, தாராளவாதமும் , கட்டற்ற நுகர்வு வெறியும், டிஜிட்டல் சர்வாதிகாரமும், மும்முனை தாக்குதலை நமக்கு தெரிந்தோ தெரியாமலோ, நம் ஒவ்வொரு அசைவிலும் ஊடுருவி நடத்திக்கொண்டு இருக்கும் பொழுது, இதிலிருந்து தப்பிக்க இயலாவிட்டாலும், சமநிலை தவறாத, சற்றேனும் அறிவார்ந்த, பாதிக்கப்படாத மனிதனாக இருப்பதற்கான சில வழிமுறைகளை சொல்லும் குரல்.

மூன்றாவது குரல், நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய சாத்தியங்கள் உள்ள , மனம் உணர்வுகள் ,நம்பிக்கைகள் , சார்ந்த நேர்நிலை வாழ்விற்கு மரபின் தொடர்ச்சியிலோ, அறிவியலின்  துணை கொண்டோ அவற்றை அடைவதற்கான வழி .

உலக தாராளவாதமும் , செயற்கை நுண்ணறியும், இயந்திர கற்றல் எனும் ஆட்டொமேஷன், எல்லாம்  இணைந்து, நூறு பேர்   செய்யக்கூடிய வேலையை ஒரு இயந்திரம் செய்துவிடும் என்கிற பட்சத்தில்,  2050ல்  வேலைவாய்ப்பு சந்தை எப்படி இருக்கும் என்கிற கேள்வியை எழுப்பிவிட்டு, ஒற்றை பதிலை முன்வைக்காமல் ,  வரலாற்று நிகழ்விலிருந்து சில மேற்கோள்களை காட்டுவதன் மூலம், ஒரு தெளிவை உண்டாக்குகிறார். 

19ம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆலைத்தொழிலாளர்களின் ஒரு ரகசிய அமைப்பு,  ஆலைகளில் இயந்திரங்களை பயன்படுத்துவதை எதிர்த்து போராடிய ஒரு புரட்சி குழுவினர் .  அவர்கள் தங்களுடைய வேலையை இயந்திரம் எடுத்துக்கொண்டால், தங்கள் தொழிலை கற்பதற்கு தாங்கள் செலவிட்ட நேரம் வீணாகும் என பயந்தனர் .   இங்கிலாந்து நாட்டிங்காம் நகரில் தொடங்கி நாடு முழுவதும் பரவி  1811 முதல் 1816 நீடித்தது.  இறுதியில் சட்டத்தைக்கொண்டும் , இராணுவத்தைக்கொண்டும்  அந்த புரட்சி அடக்கப்பட்டது.  எனினும் ஆலை இயந்திரங்கள் அடுத்த 10 ஆண்டுகளில்,  சராசரி வாழ்க்கை தரம் உயருமளவுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியபடி இருந்தது. இதுவே  உலகம் முழுவதும் நிகழ்ந்தது. 

எனில் 2050ல் நடக்கப்போகும் மாற்றமும் இப்படித்தான் அமையுமா எனில், 
மனித அறிவையும் , உணர்வுபூர்வமான, நரம்பியல் மற்றும் நடத்தை சார் விதிகளையும் இணைத்து பார்க்கவேண்டும் என்றும் ,  மொத்த மனித தொகையும்  இரண்டாக பகுக்கப்படும்.  ஒருசாரார் காலத்திற்கு பொருத்தமான மனிதர் என்றும் பெரும்பான்மையானோர் 'உதவாக்கரை ' என்றும்  பிரிக்கப்படும். 

ஒருபக்கம் செயற்கை நுண்ணறிவு அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்க ,  வேலைவாய்ப்பு சந்தையிலிருந்து, லட்சக்கணக்கில் மனிதர்கள் வெளியே தள்ளப்பட்டு ''உதவாக்கரை '' எனும் நிலைக்கு வந்து சேர்வர்.  எனினும் இந்த உதவாக்கரை சமூகம் உருவாவதற்கு  போதிய கல்வியறிவோ , வேலை பற்றாக்குறையோ காரணமாக இருக்காது, மாறாக தனிமனிதரின்  'போதிய மனத்திண்மை ' இல்லாததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

பெருந்தரவுகளும்,  படிமுறை தீர்வுகளும்,  எப்படி நம்மை உற்று நோக்கிக்கொண்டு இருக்கின்றன , சாதாரண மனிதர்களாகிய நம்மை உற்று நோக்குவதால், அவை எதிர்காலத்தில் அடையக்கூடிய பலன்கள், லாபங்கள் என்ன என்கிற பட்டியல். சற்று சுவாரஷ்யமும், திகைப்பும், கொடுக்கக்கூடியது.
 
இப்படி நம்மை உற்று நோக்கும் அறிவியல், நமக்கான சுய தேர்வு என்பதை நாளடைவில் இல்லாமல் செய்துவிடும் , ''என் இஷ்டம் போல் வாழ்கிறேன்'' என நாம் வெளியே சொல்லிக்கொண்டாலும்  நம் 'இஷ்டம் ' என்பது எப்படி உலகின் ஒருசில கைகளால் தீர்மானிக்கப்படுகிறது. என்பதற்கு பல்வேறு தரவுகளையும் , நம்முடைய அன்றாட உதாரணங்களையும் முன்வைக்கிறது. சுதந்திரம் எனும் அத்யாயம்.  

இந்த கட்டுரை வலையேற்றப்படும் நாளில், படிப்பவருக்கும், பகிர்பவருக்குமான மாபெரும் வலைப்பின்னல் எங்கோ, வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும்.  அந்த பின்னல்,  யுவாலின் 5வது புத்தகம் வெளியாகும்போது,  உங்களுக்கு பிரத்யேக சலுகை விலையில் கிடைக்க வழிவகை செய்யும்.  அல்லது  500ரூபாய் பாதிப்புள்ள உண்மையான பதிப்பு உங்களுக்கு வெறும் 100 ரூபாய்க்கு போலியான புத்தகம் அச்சிடப்பட்டு வீடு வந்து சேரும்.  அந்த போலி  புத்தகத்தில் யுவாலின் ஒரு சொல் கூட மாறியிருக்காது .  எனினும் யுவால் எப்படியோ சுரண்டப்பட்டிருப்பார்.  ஏனெனில் சந்தையை தீர்மானிப்பவர் நீங்களும், நானும், தான்.  அப்படியிருக்க நாம் எதற்காக யுவாலை பற்றி கவலை கொள்ளவேண்டும் ?  இந்த மனநிலை தான் நுகர்வுவெறி கலாச்சாரத்தின் அடிப்படை சாரமாக அமையும்.  அதை உலகம் முழுமையும்  ஏற்றுக்கொள்ளும் கொண்டாடும்.
என்பதையும் தத்துவவியலாளர்களுக்கு  சில புதிய வேலை வாய்ப்புகள் உருவாகக்கூடும் . என்றும் ஏற்கனவே வேலைவாய்ப்பு சந்தையில் மதிப்பிழந்து போயுள்ள அவர்களுடைய திறமைக்கு பெரும் கிராக்கி உருவாகும்.  என்றும், 
எதிர்காலத்தில் ஒரு நல்ல வேலைக்கான உத்திரவாதத்தை கொடுக்கக்கூடிய ஏதோ ஒரு படிப்பை  நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பினால், ''தத்துவம் ஒரு நல்ல யோசனையாக இருக்கும்'' என்றும்  , தெளிவாக கூறுகிறார் . 

இதே யுவால் தான்,  தன்னுடைய நூற்றுக்கணக்கான காணொளிகளில், இப்போது பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருக்கும் குழந்தைக்கு,  எந்த படிப்பு நல்ல வேலைவாய்ப்பை உருவாக்கும்? என்று கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு இதுவரை தனக்கு எந்த தெளிவும் இல்லை.  என்று சொல்லிவந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது . 

அதே வேளையில்,  படிமுறைத்தீர்வும்( Algorithm }  இதுவரை பல்வேறு தவறுகளை செய்துள்ளதையும், அந்த தவறுகளால், சம்பந்தமே இல்லாத ஏதேனும் ஒரு அப்பாவி பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார்.

உதாரணமாக, 2017ல்   பாலஸ்தீன தொழிலாளி ஒருவர் தனது பணியிடத்தில்,  ஒரு பீரங்கி ஊர்திக்கு அருகில் நின்று,  புகைப்படம் எடுத்து முகநூலில்  "காலை வணக்கம்" என்று அரபுமொழியில் { சபாச்சம் }எழுதி  பதிகிறார்.  அதை  படிமுறைத்தீர்வு  " அவர்களை கொல்லுங்கள்"{ டபாச்சம் }  என்று மொழிபெயர்க்கிறது.  அன்று மதியமே  அவர் கைது செய்யப்பட்டு , விசாரணையில்  கணினியின் தவறு. என  தெரிந்து, விடுதலை செய்யப்படுகிறார்.  இது ஒரு  சிறிய  உதாரணம்  தான்,  நமக்கே கூட அடிக்கடி நிகழக்கூடிய,   பணவரிவர்தனையின் போது 160ரூபாய் கொடுக்கவேண்டிய இடத்தில், நீட்டிய போனுடன் நின்றுகொண்டு இருப்போம், வங்கியின் வலைத்தளமோ சுற்றிக்கொண்டே இருக்கும்.  வேறு வழியில்லாமல் நாம் கையிலிருந்து பணத்தை கொடுத்துவிட்டு நகர,  அரைமணி நேரம் கழித்து உங்கள் கணக்கில்  160 ரூபாய் செலவு செய்யப்பட்டதாக குறுந்செய்தி வரும்.

செயற்கை நுண்ணறிவு பற்றி பேசுகையில், 
செயற்கை அமைப்பு முறைகளில்,  பிரக்ஞயை உருவாக்குவது ஒருபோதும்  அல்லது அடுத்த 10,20 ஆண்டுகளுக்காவது சாத்தியமனதில்லை, ஏனெனில் பிரக்ஞை,  உயிர் வேதியல், உயர் அறிவுத்தளம்  எனும் பல இயற்கை சார்புகளுடன்  பிணைக்கப்பட்டுள்ளது. என்று கூறிவிட்டு  அதை மெய்ப்பிக்க, காணும் கனவாகத்தான் ஹாலிவுட் திரைப்படங்களில், ரோபாட்டுக்கு பிரக்ஞை  உருவாவதும், கதாநாயகன் அந்த ரோபாட் மீது காதல் வயப்படுவதும் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தி பார்க்கின்றன  என்கிறார் .  இந்த செயற்கை நுண்ணறிவு  2100ல்  உயிர்ப்பொறியியல் துறையுடன் இணைந்து படைப்பாற்றல், ஆரோக்யம் ,அழகு நிறைந்த மனிதர்களை உருவாக்கும் வல்லமை பெற்ற தொழில்நுட்பமாக வளரும் பட்சத்தில் , உலகின் 1சதவிகித பெரும் பணக்காரர்கள், இவற்றை அனுபவிப்பார்கள், சைபீரிய கிராமவாசியின் ஒரு குழந்தையை விட சிலிக்கான் பள்ளத்தாக்கு தொழிலதிபரின் பேரக்குழந்தைகள் மேம்பட்ட ஒரு மனிதஇனமாக உருவாகும் சாத்தியமும் இருப்பதை  சுட்டிக்காட்டுகிறார்.

இணையவழி தொடர்புகளில் மகிழ்ந்து, லைக் போட்டுக்கொண்டிருக்கும், இந்த சராசரி ஹோமோ சேப்பியன்ஸ் இனம் , 150 மனிதர்களுக்கு மேல்  அறிந்து கொள்வதற்கான திறன் இல்லாதது, ஆகவே நமது 'நண்பர்கள் 'லிஸ்ட்டில் இருக்கும் 10 சதவிகித நபர்கள் பற்றி கூட நமக்கு அக்கறையோ,  அறிதலோ ,புரிதலோ எதுவும் இருப்பதில்லை.  மின்னணு இயந்திரங்களுக்கும் , இயற்கையான உடல்களுக்கும், இடையேயான எல்லையை அழித்து,  நம்முடைய தோலுக்கு அடியில் நுழைவதை, இலக்காக கொண்டுள்ள, தொழிநுட்ப ஜாம்பவான்கள், நம் உடல்களை புரிந்துகொண்டு,   நம்மை கையாள கற்றுக்கொண்டவுடன்,  நம்முடைய கைகளையும் , கண்களையும், கடனட்டைகளையும், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இணையவழி தொடர்பும் , தொடர்பின்மையும்  தனித்தனியாக இருந்த பொற்காலம் வராதா?  என நாம் ஏங்கவும் கூடும்.

இவற்றை முன்வைக்கும் யுவால்  தீர்மானமாக ஒற்றை முடிவை எங்குமே சொல்வதில்லை அதுகுறித்து தனக்கு எந்த தெளிவும் இல்லை  என்பதை  பல இடங்களில் ஒத்துக்கொண்டு  மேலே செல்கிறார் .

இந்த நூற்றாண்டில் தான்,  நோயாளிகளை குணப்படுத்தும் வேலை,  பூசாரிகளின் கைகளிலிருந்து, அறுவைசிகிச்சை  மற்றும் உளவியலாளர்கள் கைகளுக்கு வந்துள்ளது.  கடந்த நூற்றாண்டு வரை ,  நீங்கள் எத்தியோப்பியாவில் வாழ்ந்தாலும்,  ஐரோப்பியாவில் வாழ்ந்தாலும் , ஒரு நோய் வந்தால்  ஒரு  மதகுருமாரையோ , மாந்த்ரீகனையோ சார்ந்து இருந்திருப்பீர்கள். மதகுருமார்களின் கடைசி கோட்டையாக திகழ்ந்த,  மனநோய்கள் கூட,  அறிவியலாளரின் கைகளுக்கு படிப்படியாக இடமாறியிருக்கின்றன. பேயியலின் இடத்தை நரம்பியலும் , பேயோட்டுதலின் இடத்தை ''புரோசாக் '' மாத்திரைகளும் எடுத்துக்கொண்டன.  
பாரம்பரிய மதங்களான இந்துமதம் , கிறிஸ்தவம் ,இஸ்லாம் யூத , ஜென் மதங்கள் அனைத்தும் தமது ஆடுகளத்தின் பெரும்பகுதியை இழந்துவிட்டன.  அறிவியல் மதங்களின் , தெய்வங்களின் இடத்தை இட்டு நிரப்பிக்கொண்டு இருக்கின்றன . என்கிற யுவாலின் பார்வை ஒரு மரபின் மீதான வெறுப்பு அல்ல.  மாறாக நம்முடைய சவால்கள் வேறு மாதிரியானவையாக இருக்கின்றன.  என்கிற அறிவுறுத்தலை முன் வைக்கிறது. 

தன்னுடைய சொந்த மதமான யூத மதத்தை,  தொடர்ந்து எல்லா அத்தியாயங்களிலும்,  விமர்சிக்கும் யுவால்.  அதற்கு இணையாகவே, இஸ்லாம் , இந்து ,கிறிஸ்தவ மதங்களின் போதாமைகளை, சமகாலத்தில் அவற்றுக்கான   முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகள் குறித்து,  தெளிவாகவே  தன் தரப்பை முன்வைக்கிறார்.  எனினும் புத்தமதம் மீதும், அதன் அடிப்படைகளிலும்,  ஒருவித சார்பு இருப்பதை,  ஆங்காங்கே காணமுடிகிறது.

தீவிரவாதம் குறித்து,  நமக்கு அடிப்படையில் ஒவ்வாமையும் அச்சமும் இருந்தாலும், யுவால் அதை நேர்த்தியாக நமக்கு சொல்லிக்கொடுக்கும் விதம். ''பீதியடைய தேவையில்லை'' எனும் அத்யாயம் 21ஆம் நூற்றாண்டின் 21பாடங்களில் முக்கியமான ஒன்று.

மற்றவர்களுடைய மனங்களை கட்டுப்படுத்துவதில்,  தீவிரவாதிகள் வல்லவர்கள். வெகுசில மக்களை கொல்வதன் மூலம்,  பலகோடிக்கணக்கான மக்களை அச்சுறுத்துவதிலும்,  ஐரோப்பிய ,அமெரிக்கா , போன்ற மாபெரும் அரசியல் கட்டமைப்புகளை, உலுக்குவதிலும் அவர்கள் வெற்றி பெறுகின்றனர்.
 
2001ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் { ஈராக் , ஆப்கானிஸ்தான் ,சிரியா ,பாகிஸ்தான் உட்பட} சுமார் 25000 மக்களை கொன்றுள்ளனர், எனினும்  போக்குவரத்து விபத்துகள் , காற்று மாசுபாடு, சர்க்கரை நோய் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 15லட்சம் மக்கள் வரை கொல்லப்படுகின்றனர்.  ஆகவே தீவிரவாதிகளை பற்றி பீதியடைய தேவையில்லை- மாறாக எல்லாவகையிலும் அவர்களை புறக்கணிக்க, சாத்தியமான வாய்ப்புகளை பட்டியலிடுகிறார். 

ஒரு தற்கொலை படை தாக்குதலை நிகழ்த்தி, நூறு பேரை கொள்வதன் மூலம்,  பத்து கோடி மக்களின் மனதில் , ஒவ்வொரு மரத்திற்கு பின்னாலும் ஒரு தீவிரவாதி இருக்கிறான்.  என்கிற கற்பனை பயத்தை விதைக்கின்றனர்.  நேர்நிலை சமூகமாக நாம் செய்யவேண்டியது, அந்த கற்பனை பயத்தை நீக்குவதும் , அதை முழங்கும் ஊடகங்களை புறக்கணிப்பதும் தான். ஒரே வழி.
 
எனினும் மனித முட்டாள்தனத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள் என  அந்த அத்தியாயத்தை முடிக்கிறார்.

ஜாதி, மதம் , இனம்,  உணவுப்பழக்கம், என சுயதம்பட்டங்கள்  , தற்பெருமைகள் , பெருமிதங்கள், இல்லாத ஒரு மனிதகுலம் கூட இந்த பூமியில் இல்லை எனலாம் , அதை பற்றிய அத்தியாயத்தை கையாளும் யுவால் ' உலகம் உங்களை சுற்றி இயங்கிக்கொண்டிருக்கவில்லை ' ஆகவே பணிவு தேவை.   என தொடங்கி, 
ஒவ்வொரு இனத்தையும், சான்றுகளுடன் சொல்லி சொல்லி நிராகரிக்கிறார்.

 முகமது நபிகளின் காலகட்டத்திற்கு முந்தைய அனைத்து வரலாறும் பொருத்தமற்றவை.  என்றும் மனித குலத்தின் அனைத்து நல் அம்சங்களுக்கும், மூலாதாரமாக  குரான் விளங்குகிறது. என அடிப்படை வாத இஸ்லாமியர்கள் கருதுவது போல.  அறிவியல் கண்டுபிடிப்புகளான  வானவூர்தி, ஏவுகணைகளை முறையே  மாமுனிவர் பரத்வாஜரும் , விசுவாமித்ரரும்,  கண்டுபிடித்ததாக, அடிப்படைவாத இந்து கருதுகிறார்.   இப்படி ஒவ்வொரு தரப்பையும் சொல்லிக்கொண்டே வரும் யுவால்,   தனது யூத மதம் குறித்து பேசுகையில், எண்ணற்ற தரவுகளும் ,மேற்கோள்களையும் காட்டி அடிப்படைவாத யூத மனநிலையை நிராகரிக்கிறார் . 

ஒருமுறை, இஸ்ரேலில்  ''யோகா'' கற்றுக்கொள்ள சென்ற யுவாலிடம்,  அந்த யோக ஆசிரியர்,  யோகத்தை கண்டுபிடித்தவர், 'ஆப்ரகாம்'  தான். என்று கூறி  ''திரிகோணாசனம்''-  அலெஃப்  என்கிற ஹீப்ரு எழுத்து வடிவத்தை ஒத்து இருக்கிறது, ஆகவே , ஆபிரகாம் தான் யோகக்கலையை, தன் மகனுக்கு கற்றுக்கொடுத்து , அவர் அதை இந்தியவில் பரப்பினார்.  என்று  ஆதியாகமம் 25.6 ஐ,  மேற்கோள் காட்டுகிறார். இந்த சம்பவத்திற்கு பின்னர் யுவால் அங்கு செல்வதை கைவிடுகிறார் .


மதத்திலிருந்து கடவுள் கொள்கைக்கு செல்லும் யுவால், பலதெய்வ வழிபட்டுக்கொள்கையை விட,  ஓரிறை கொள்கை கொண்ட மதங்கள், எப்படி வன்முறையும் , மூர்க்கமும் கொண்டவையாக,  வரலாறு முழுவதும் திகழ்ந்தன. என்றும், குத்திக்காட்டுகிறார்.

அறிவுசார் செயல்பாட்டில் முன்னர் எப்போதையும் விட, இன்றைய மனிதன் தீவிரமாக ஈடுபட்டுள்ளான், துரதிஷ்டாவசமாக, முன்னர் எப்போதையும் விட, மிகக்குறைந்த அளவே தெரிந்து இருக்கிறது.  ஏனெனில் இணையத்தில் இலவசமாக கொட்டிக்கிடக்கும்,  உண்மையற்ற தகவல்கள், அவர்களுக்கு  ஒருபோதும் அறிவுசார் செயல்பாட்டிற்கு உதவாது. உலகின் எங்கோ  ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு,  ஒரு கோடீஸ்வரர் உங்கள் மூளையை சலவை செய்து,  தன்னுடைய தொழிலை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார் .  உங்கள் பொன்னான  நேரத்தை அவருக்கு தருவதன் மூலமாக  ஏமாந்துகொண்டிருக்கிறீர்கள் .  ஏனெனில் ஒரு நல்ல தரமான அறிவியல் கட்டுரையும் , இயற்கை சார்ந்த,  ஆராய்ச்சி கட்டுரையும்,  விலையுயர்ந்ததாக இருக்கிறது. எனவே,  நாம் கவனமாக இருக்கவேண்டிய,  இணைய சாதனங்களை பற்றி பட்டியலிடுகிறார்.  


கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பற்றி,  இதுவரை யாரும் பேசாத புதிய கோணத்தில்,  பல்வேறு திறப்புகளை தரும் யுவால் ,  இன்று பிறக்கும் ஒரு குழந்தை, எல்லாம் நல்லபடியாக இருந்தால் 2050ல் முப்பது வயதாகியிருக்கும் , அன்று உலகம் இப்படித்தான் இயங்கும்.  என யாராலும் கணிக்க முடியாது. என்பதால்,  அந்த குழந்தைக்கான, சரியான கல்வி இது தான்.  என்பதையும் யாராலும் சொல்ல முடியாது.
 எனினும்,  ''நிரந்தமான ஒரு வேலை'' என்பது இனி வேலைவாய்ப்பு உலகில் சாத்தியமே இல்லை.   தகவல் தொழில்நுட்ப புரட்சியும், வேலைவாய்ப்பு சந்தையும்,  பலகோடி ''உதவாக்கரைகளை'' வெளியே தள்ளப்போகிறது.  அதே நேரத்தில்  எந்த மதிப்பும் , ஊக்கமும் இல்லாத,  கோடிக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கப்போகிறது.

 இதில்,  உங்கள் குழந்தை எந்த எந்தக்குழுவில் இருக்கவேண்டும்.  என்பதை, இன்று முதல் அந்த குழந்தைக்கு,  உளச்சமநிலையை தக்கவைத்துக்கொள்வதை, மிகச்சரியாக சொல்லிக்கொடுப்பதன் மூலமாகவே,  அடையமுடியும்.  என முடிக்கிறார்.


இறுதி அத்தியாயத்திற்கு முன்னதாக,  இந்த உலகின் ஆதி கேள்வியான ,  நான் யார் ? வாழ்வின் பொருள் என்ன?   என்கிற கேள்விக்கு, அறிவியல் , மதம் , அரசியல் ,கடவுள்  என,  பல்முனை சாத்தியங்களின் வழியாக விடைகாண முயலும்  யுவால் ,  துணைக்கு  அழைத்துக்கொள்ளும் கருதுகோள்  ஆச்சரியமாக , ''சுதர்மம் '' எனும் 'உன் இயல்புக்கு தகுந்த ஒன்றை தீவிரமாக செய்தல்' அதன் மூலம்  நிறைவடைதல்'  என்கிற சித்தாந்தத்தை முன்வைக்கிறார்.   அதற்கு, அர்ஜுனனுக்கு உரைக்கப்பட்ட கீதையையும், அதன் தொடர்ச்சியாக, அந்த உபதேசத்தை,  நவீனப்படுத்தி சொல்லப்பட்ட  ' த  லயன் கிங் '' படத்தையும் மேற்கோள் காட்டுகிறார்.

எனவே,   பிரபஞ்சத்தை பற்றிய  உண்மையையும் , வாழ்வின் அர்த்தத்தையும் , உங்கள் சொந்த அடையாளங்களையும்,   தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கேள்விகளையும் , துன்பத்தையும் , கூர்ந்து கவனித்து, அது  என்ன? என்பதை ஆய்வு செய்வதிலிருந்து தொடங்குங்கள். அதுவே சிறந்த வழி  என்று அந்த அத்யாயம் முடிகிறது.

அனைவருக்கும் ஒரே தீர்வு. ஒரே பதில் என்பது எப்போதும் ஆபத்தானது, என்கிற பீடிகையுடன் தான்  இறுதி அத்யாயமான தியானம் - வெறுமனே அவதானியுங்கள் - தொடங்குகிறது. 

விபாசனா தியானமுறையில் தான், அடைந்த பயன்களை பட்டியலிடும் யுவால், சேப்பியன்ஸ் ,ஹோமோ டியஸ்.  போன்ற மாபெரும் வெற்றிப்படைப்புகள்  நிகழ விபாசனா ஒரு முக்கிய காரணம் என குறிப்பிடுகிறார் .


மனதின் மர்மங்களை புரிந்து கொள்வதற்கு நம்மிடம் அறிவியல் சார் கருவிகள் இல்லை.   

பல அறிஞர்கள் மனதை மூளையுடன் போட்டு குழப்பிக்கொள்கின்றனர். மூளை என்பது நரம்பணுக்களையும் , நரம்பு இணைப்புகளையும்,  உயிர்வேதி பொருட்களையும், உள்ளடக்கிய ஒரு பின்னாலமைப்பு.

 மனம்  என்பது வேதனை, இன்பம், கோபம்.  என  அகரீதியானது.  ஆகவே , படிமுறைத்தீர்வுகள்  நம் சார்பில் தீர்மானங்களை மேற்கொள்ளத்தொடங்குமுன்,  நாம் நம்முடைய மனங்களை புரிந்துகொண்டு விடுவது நல்லது  '' என இந்நூல்   முடிகிறது.


ஏற்கனவே இரண்டு நூல்களையும் மொழிபெயர்த்து, சரியாக தடம் பார்த்துவிட்டதால், நாகலட்சுமி சண்முகம் அவர்களுக்கு இந்நூல் இன்னும் சிறப்பாக கைகூடியிருக்கிறது, முக்கியமாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சொற்கள், தெளிவாக மொழிபெயர்க்கப்ட்டுள்ளது .

தனக்கு சாதகமான பகுதிகளை மட்டும் மரபிலிருந்து எடுத்து கையாள்கிறார்.
தெளிவான பதில் ஒன்றை சொல்ல மறுக்கிறார்.
வரும் உலகை இருள் நிறைந்ததாக கற்பனை செய்கிறார்.
என யுவால் ஹராரி மேல் ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும். 

ஒரு அறிஞரை முற்றோதல் செய்தோம் என்கிற மனநிறைவும், உலகின் செல்திசையை,  பல்துறை அறிஞர்  ஒருவர் தன்னுடைய பெரிய விளக்கின் மூலம், வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். அதை தெளிவாக நம்மால் பார்க்க முடிந்திருக்கிறது என்கிற திருப்தியுடனும். நன்றியுடனும் இந்நூலை முடிக்கலாம்.

Featured Post

YOGA-3

  பிராணனே பிரதானம்.   இந்த பிரபஞ்சம் முழுவதும் இயங்கிக்கொண்டே இருப்பதற்கு எது ஆதாரமோ, அதுவே நம் இருப்புக்கும் இயக்கத்திற்கும் ஆதாரம். அந...