வரலாற்றுச் சோகங்களை வாதைகளை போர்சூழலை காவியங்களில் வடிப்பதும், அத்தகைய வேதனைமிகு சூழலை வாசிக்கும் ஒருவருக்கு கடத்துவதும் தான், ஒரு படைப்பு செய்யக்கூடிய காரியம் எனில், ஒருவர் ஏன் இவ்வகை சோகத்தை தேடிச்சென்று படிக்க வேண்டும்? தன் வாழ்விலேயே இருந்து கூட பெற்றுக்கொள்ள முடியமே. அன்றாட வாழ்வில் சோகத்திற்கா பஞ்சம் ?
அல்லது அப்படி போர்சூழலை அதன் வஞ்சக தீமைகளை எழுதுவதால், வரும் காலங்களில் மனிதர்கள், முடிந்து போன வரலாற்றிலிருந்து தமக்கான பாடங்களை கற்றுக்கொண்டு போர் செய்யாமல் இனிமையான வாழ்வை வாழ்வார்கள். என்று அர்த்தமா ?
இந்த இரண்டு வினாக்கள் தான் நாம் இதுவரை படித்த ஈழ எழுத்துக்கள் நமக்கு கடத்துபவை.
இலக்கியம் ஆன்மீகத்திற்கு இணையானதெனில், நம் அகம் சென்று தொடக்கூடிய கூர்முனை உள்ள கருவியெனில், மேலே கேட்ட கேள்விகளிலிருந்து முன்னகர்ந்து புதிய வெளிச்சம் ஒன்றை தரவேண்டும்.
அப்படி ஒரு வெளிச்சத்தை இன்றைய தலைமுறை ஈழப் படைப்புகளில் காண முடிகிறது. போர்சூழல் முடிந்து இடம்பெயர்வும் நடந்து, வெவ்வேறு திசைகளிலிருந்து எழுதிக்கொண்டிருப்பவர்களில், அகரமுதல்வன் முக்கியமானவர். என அவருடைய 'மாபெரும் தாய்' நூல் நம்பிக்கை விதைக்கிறது.
அகரமுதல்வன் கவிஞராகவும் அறியப்படடவர் என்பதால் இந்நூல் ஒரு கவித்துவ நடையுடன், ஒப்பாரிகளையும் , மரண ஓலத்தையும் கூட , சரியான சொற்களில் கடத்திவிட முடிகிறது. பன்னிரண்டு கதைகள் கொண்ட இத்தொகுப்பில்,
நேரடியாக போர்க்கள சூழலை கண்டவர்.
நேரடியாக பாதிக்கப்பட்டவர்.
நேரடியாக மீண்டு வந்தவர்.
எனும் சித்திரம் கதைகள் முழுக்க நிறைகிறது .
அதற்கு இணையாகவே , படிமங்களும் உருவகங்களும் ஒவ்வொரு கதையிலும் மிளிர்கிறது.
''நிலமெங்கும் ஓடிய குருதி வெள்ளத்தில் நந்தி விக்கிரகங்கள் மூழ்கின, நாகமும் மீன்களும் பொறித்த நாணயங்கள் வீதியெங்கும் கேட்பாரற்று கிடந்தன.
எஞ்சிய நந்தி விக்கிரகங்களை புத்த பிட்சுக்கள் உடைத்து நொறுக்கினர். அந்த குருதியின் ஈரப்பதத்தின் மீது வெள்ளரசுக் கன்றுகளை நடத்தனர். தமது கொலைவாள்களை புத்தனின் சிலைகளில் மறைத்து வைத்தனர்-
எனும் வரிகள் வெறும் போர்சூழலையும், மரணங்களையும் காட்சிப்படுத்துவதை தாண்டி மற்றவர்கள் நம்பிக்கைகளை உடைப்பதையும் போர் என்றே கருத வேண்டிய சித்திரத்தை அளிக்கிறது.
எந்த போரிலும் முதலில் நிகழ்வது சூறையாடல், அதை தொடர்ந்து கற்பழிப்பு, இவையிரண்டையும் உலகம் முழுவதும் எழுதி எழுதி இன்னும் தீரவில்லை, இந்த நூலிலும் அவை கிட்டத்தட்ட அனைத்து கதைகளிலும் இடம்பெறுகிறது. ஆச்சரியமாக, அந்த இழப்புகளுக்கு பின்னரான வாழ்வும் ஒரு சிறு ஒளிக்கீற்றும் இருப்பதை இந்த கதைகளால் மிக ஆத்மார்த்தமாக சொல்ல முடிந்திருக்கிறது.
நம்பிக்கை தரும் இளைய படைப்பாளி எனும் இடத்தை நாம் இதை வைத்தே முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.
பாரதப்போரின் 18 நாள் மகா யுத்தத்தை விட, அதற்கு பின்னர் கட்டியெழுப்பப்பட்ட அஸ்தினாபுரம் அல்லவா இன்னும் ஆழமாக பதிவு செய்யப்படவேண்டும். கலையும் இலக்கியமும் நமது அக-புற வாழ்வியலில் நம்பிக்கை விதைக்கும் என்றால் ஒரு தேர்ந்த படைப்பாளி, இந்த வெளிச்சத்தை ஏற்றக்கூடிய திரியை அல்லவா தேடித்தேடி பற்றவைப்பான்.
போர்சூழலின் போது, இராணுவ துரோகிகளாகவும், தேசத்துரோகிகளாகவும் , இயக்க துரோகிகளாகவும் இருந்தவர்கள் அனைவரும், உயிரை மட்டும் உடமையாக்கிக்கொண்டு, கிடைத்த நாடுகளில் கிடைத்த, கிடைத்த வேலையில் தஞ்சம் புகுகின்றனர். முன்னால் எதிரிகளும் , துரோகிகளும், இன்று குட்டி யாழ்ப்பாணம் என்று சொல்லக்கூடிய சென்னை வளசரவாக்கம் பகுதியில் நண்பர்களாக , காதலர்களாக, புதிய உறவுகளின் மூலம் குழந்தையும் குட்டியுமாக வலம் வருகின்றனர்.
பெரும்பாலான கதைகளில், நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்தித்துக்கொள்ளும் ஆணும் பெண்ணும் சில மணித்துளிகளில் நிர்வாணமாக கட்டிலில் கிடக்கின்றனர். முதலில் ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தும் இந்த காட்சிகள், ஒட்டுமொத்தமாக நூலை முடிக்கையில், உயிரை கையில் பிடித்துக்கொண்டு சிதறி ஓடியவர்கள் ,காமத்தையும் அதே அளவில் ஆழத்தில் பிடித்துக்கொண்டு தான் ஓடியிருக்க முடியும், கனிந்து அமையும் தனிமையும், சிறு சுதந்திரமும், அப்படித்தான் வெளிப்படமுடியும் என்றே தோன்றுகிறது. ஆதி இச்சை எனும் உயிரின் இருப்பு.
தொன்மம் மற்றும் , மரபின் மீதான பரிச்சயமும், சைவ நூல்களின் ஆழ்ந்த வாசிப்பும் கொண்ட அகரமுதல்வனுக்கு, இந்த கதைகளை சொல்வதில் ஒரு ஆச்சியின் கதை கூறல் தன்மையை கொடுத்து விடுகிறது, ஆகவே நாம் மகவு என மடியமர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
பிலாக்கணம் பூக்கும் தாழி - எனும் கதையில் முதுமை கனிந்து இறக்கும் தருவாயிலுள்ள ஆச்சிக்கும், மருமகளுக்குமான கிண்டலும் , சீண்டலுமான ஒரு அந்நியோன்யமான உறவை பற்றி சொல்கையிலும் ,
மாபெரும் தாய் கதையில், முன்னோர்களின் தெய்வங்கள் அனைத்தும் உயிர்ப்புடன் எழுந்து வந்து நடமாடுகிற, இடங்களிலும், மரபும், தொன்மமும் இல்லையென்றால். இக்கதைகள் அனைத்தையும், ரத்தமும், கருமையும் , தாமசமும் கொண்ட கதைகளாக மாற்றி இவற்றின் ஆன்மாவை அழித்திருக்கும்.
அங்கையற்கண்ணியும் , வீரபத்திரனும் , பத்ர காளியும் கதைகளினூடே எழுந்து வந்து, ''இனி வாழ்ந்து நிறைக மக்களே'' எனும் குரலை துல்லியமாக கேட்க முடிகிறது.
போர்ச்சுழலை நேரடியாக எதிர்கொண்டவர், எனினும் ரணங்கள் அனைத்தையும் நம்பிக்கை எனும் மை தோய்த்து எழுதி எழுதி பார்க்கிறார். அதற்கு மரபும் , தொன்மமும் துணை நிற்கிறது.
அங்கே சுடலை காடாகிப்போன பூமியிலிருந்து கூட மழைக்கு பின்னான பசுந்தழை முளைக்கிறது.நறுமணம் பரப்புகிறது.
காடுடைய சுடலைப் பொடி பூசியவன் தான் பொன்னார் மேனியனாகவும் இருக்கிறான் என்கிற நம் மரபின் வசீகரத்தை கச்சிதமாக கையாண்ட விதத்தில் அகர முதல்வனுக்கு அன்பும் வாழ்த்துக்களும்.