Wednesday, October 19, 2022


                                                     வேள்வியை காணுதல்


முன்பு ஒருமுறை எங்கள் குருகுலத்தில்,  என் ஆசிரியர் ஸ்வாமி நிரஞ்சன், ஒரு கலந்துரையாடலில், பஞ்சமஹா யக்ஞம்,  பற்றி விவரித்துக்கொண்டிருந்தார்.
அதில் மூன்றாவது வேள்வியாகிய, "ப்ரம்ம யக்ஞம்" பற்றி பேசுகையில், 
உலகம் முழுவதிலும் ஞானம் சார்ந்த தேடல் உள்ளோர், ஞான வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டோர், எந்த பலனும் கருதாமல், முழுமூச்சாக, அதையே வாழ்க்கை என அமைத்துக்கொண்டு, எங்கேனும் ஒரு இடத்தில் அமர்ந்து அந்த தவத்தில் இருப்பார்கள். சற்று சிரத்தையுடன் தேடினால், நம் ஊருக்கு மிக அருகிலேயே அப்படி ஒருவர் இருக்க வாய்ப்புண்டு. நாம் தான் தீவிரமாக தேடுவதில்லை. உங்கள்
 ஊரில் கூட  "திராவிடாச்சார்யார்" என்கிற ஸ்வாமிஜி இருக்கிறர்
 தெரியுமா? என எங்களை கேட்க.  எங்களுக்கு அப்படி ஒருவரை தெரிந்திருக்கவில்லை.

ஆனால் அந்த பெயர் நீண்ட நாட்கள் என் நினைவில் நின்று விட்டது, பின்னர் ஏதோ ஒரு தருணத்தில், அவரை
 இணையத்தில் கண்டடைந்தேன்,  ஒவ்வொரு நாளும் அவருடைய எதேனும் ஒரு உரை அல்லது ஒரு வேத பாடத்தை கேட்பதை என் பழக்கமென கொண்டேன்.

பின்னர் எனது தூர்தர்ஷன் நிகழ்ச்சிக்கும், ஆசிரிய பயிற்சி திட்டத்திற்கும், அவருடைய உரைகளும், அவர் தொகுத்து வெளியிட்டிருக்கும், முக்கியமான நூல்களுக்கான விளக்க உரைகளும், மேலும் மேலுமென என்னை உள்ளே இழுத்துக்கொண்டது.

நேரில் சந்திக்க வேண்டுமென ஆர்வத்தில் அவரை கடிதம் மூலம் தொடர்பு கொண்டு, ஒரு நாள் கிளம்பி சென்றேன்.

"வா.....வா.....உனக்குத்தான் காத்துக்கொண்டு இருந்தேன்" என ஒருமையில், நட்புடன் உள்ளே அழைத்துச்சென்றார்.
அதன்பின், அனைத்து உரையாடலிலும்,ஒரு மாணவனென, நேரடியாக சென்று அவர் இருக்கைக்கு அருகே தரையில் அமர்ந்து கொள்வேன். அவர் பேசுவார். நான் என் துறை சார்ந்த பல நூல்களை அவர் சொல்லித்தான் கேள்வியே படுகிறேன். 

ஸ்வாமி திராவிடாச்சார்யார் தன்னை, 
தக்ஷிணாமூர்த்தி, ஆதிசங்கரர்
, வித்யாரண்யர், ஸ்வாமிசாந்தி  தர்மானந்த சரஸ்வதி, மற்றும் ஸ்ரீ சர்வேஷானந்த சரஸ்வதி, என்கிற குருமரபின் நீட்சியாக முன் வைக்கிறார்.

அதே வேளையில், குரு-சிஷ்ய முறையில்,  சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், மீமாம்சை, காஷ்மீர சைவம்,  என அனைத்தும
 கசடற கற்று தேர்ந்து, ரிஷிகேஷத்தில் 30வருட வாழ்வை நிறைவு செய்துவிட்டு,
திருவண்ணாமலை அருகில் தீர்த்தமலை எனும் அழகிய மலை அடிவாரத்தில் , தனியாக குடில் அமைத்து, தனிமைத்தவத்தில், இந்த ஞான வேள்வியை நடத்தி வருகிறார்.

வகுப்புகள் நடத்துவதில் நாட்டமில்லை , எனினும், தன் குருவின் ஆணைக்கிணங்க, தொடர்ந்து, பல்வேறு
 நூல்களை, அதிகமும் புழக்கத்தில் இல்லாத, வேத,வேதாந்த, நூல்களை, சம்ஹிதைகளை, குறித்து தினமும், இணையத்தில் உரையாடி வருகிறார்.

அது போக, பல்வேறு அரியவகை நூல்களுக்கு உரை எழுதியும், அச்சுவடிவத்திலும், தன்னை காண வருபவர்களுக்கு வழங்குகிறார்.

முதல்முறை
 சென்ற போது ஸ்ரீ வித்யாரன் யர் எழுதிய " பஞ்சதசி" நூலினையும், என் துறை சார்ந்த சில நூல்களையும் பரிசாக தந்தார்.

அடுத்த முறை ஒரு சிறிய நண்பர்கள் குழுவுடன் சென்றோம்.  அடைமழையில் கூரையின் இரைச்சலுடன், ஒரு நீண்ட கலந்துரையாடல் நிகழ்ந்தது.  அதில் ஓவ்வொருவரையும் பார்த்து, அவரவர்க்கான, நூல்களையும், அடைய வேண்டிய கல்வியையும், தொடர்ந்து பரிந்துரை செய்தார். நண்பர்
சுபஸ்ரீ,  வேத, வேதாந்த கல்விக்கான அடிப்படை பாடத்தை எங்கிருந்து தொடங்குவது? என்கிற கேள்விக்கு, " சாதனா பஞ்சகம்" என்கிற உரையை படித்து/ கேட்டு விட்டு வா. மேற்கொண்டு உரையாடலாம். என உரிமையுடன், சொல்லி அனுப்பினார்.
இப்படியாக, வேத வேதாந்த நூல்கள்
 சார்ந்த, ஞானத்திலும்,  செயலின் முடிவு பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலும், நம் கண்முன் ஒருவர்,  ஒரு மலையடிவாரத்தில
 அமர்ந்து, தனிமைத்தவமும், தனது வேள்வியும் என வாழ்ந்து கொண்டிருக்கிறார். என்பது நமக்கு ஒரு மாபெரும் உந்துதல். நாம் நின்று கொண்டிருக்கும் இடம் என்ன? என்கிற தெளிவை, சென்று கொண்டே இருக்க வேண்டிய பாதை எது? என்கிற முனைப்பையும்,  நம்முள் விதைக்கிறது.


அப்படி ஒருவருடன் உரையாட விரும்பும் நண்பர்களுக்கு இது உதவலாம். என்று
 தோன்றியது. 

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் சரளமாக உரையாடக்கூடியவர்.
 முதலில் அவருடைய காணொளிகள்  சிலவற்றை காணலாம். பின்னர், மெயிலில் தொடர்பு கொண்டால், பதிலளிப்பார்.


கண்முன் நிகழும், ஞானவேள்வி ஒன்றை
 காணும் வாய்ப்பு பெற்றேன்.
அது தேடுவோர் அனைவருக்கும் சென்று சேரட்டும்.


















அன்பும், நன்றியும்

Featured Post

The Master Christian - A NOVEL by Marie Corelli

 - குயவன் கையில் களிமண்ணாய்...... தமிழில் சுபஸ்ரீ  ---------------------------------------------------- மெய்யியல், தத்துவம் ஆன்மீகம், மற்றும...