Friday, November 24, 2023

''காதலின் நாற்பது விதிகள் ''எனும் சூஃபி நாவலை முன்வைத்து.

                      பெருநதியும் , நம் குவளையின் அளவும்.

                                               *****************************************

 

தமிழ் விக்கி -

https://tamil.wiki/wiki/%E0%AE%95.%E0%AE%A8%E0%AE%BE.%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D


என்பது எந்த ஒரு அறிவியக்கவாதிக்கும் , படைப்பாளிக்கும் , இன்று எழுதவரும் இளைஞருக்கும், ஒரு புதையல் அதிலிருக்கும் ஒவ்வொரு ஆளுமைகளையும் வைத்து வாழ்நாள் எல்லாம் நாவல்கள் எழுதிக்கொண்டிருக்கலாம் ' என ஒரு பேச்சில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் சொல்லியிருப்பார்.


படைப்பாளிகளுக்கு மட்டுமல்ல என்னை போன்ற மனித மேம்பாடு மற்றும் ஆன்மீக துறைகளில் இருப்பவருக்கும் , தொழில் முனைவோருக்குமே. ' தமிழ் விக்கி'  ஒரு புதையல் தான். 

அதிலிருக்கும் ஒரு ஆளுமையை படிக்கத்தொடங்கி நூல்பிடித்து சங்க காலம் வரையோ , வேதகாலம் வரையோ சென்று அவரின் நீட்சியை புரிந்து கொள்ள முடியும். 


க நா .சு. வின் தமிழ் விக்கி பக்கத்தை படித்து விட்டு , மதுரை கோவிலின் 'அகோர வீர பத்ரன் ' எனும் வடிவம் தான் எனக்கு தோன்றியது. தன் வாழ்நாளில் அசுரத்தனமான இலக்கிய பணியை ஆற்றியிருக்கிறார். இப்படி பல ஆளுமைகள். 


சமீபத்தில் ஜே .ஆர் .ரங்கராஜு அவர்களை பற்றி படித்தேன் , சுவாரஷ்யமான ஆளுமை ,  'சந்திரகாந்தா'   போன்ற பல ஆக்கங்களை செய்தவர், எனினும்  இலக்கிய திருட்டு நிரூபிக்கப்பட்டு  1930ல் சிறை செல்ல நேர்கிறது, அதன் பின்னர் தன் இலக்கிய அடையாளத்தை நிறுத்திக்கொள்கிறார்.


இப்படி பல ஆளுமைகளும் , அவர்களை எது செயல்படவும் , செயலின்மைக்கும் தூண்டுகிறது ?  என்பதை வெவ்வேறு மரபுகள் எப்படி வகைப்படுத்துகிறது, அதற்கு மரபிலும் , நவீனத்திலும் உள்ள தீர்வுகள் பற்றியும் படிப்பதில் ஆர்வம் என்பதால்.  

சூஃபி  மரபு மனிதர்களை, ஆளுமைகளை பற்றி கொண்டிருக்கும் பார்வையை அறிய விரும்பினேன். அஜிதனின் ' அல்கிசா 'வும் ஒரு காரணம். 

அப்படி வாசிக்க நேர்ந்தது தான் இந்த நாவல்.

இரண்டு கால கட்டங்களில் நாவல் அமைந்திருக்கிறது. ஒன்று 2008ல் ஒரு நடுவயது குடும்ப பெண்ணின் வாழ்க்கை.

அடுத்தது 1242 முதல் 1260 வரையிலான காலகட்டத்தில் நகரும் மையக்கதை.

அதில் ரூமியும்  அவருடைய ஆசான் ஷம்ஸ் -ஈ - தப்ரீஸ் . எனும் அலைந்து திரியும் ஞானிக்குமான உறவும் உரையாடலும் அடங்கிய பகுதி. 

அது ரூமி எனும் அறிஞன் புகழின் ஒளியில்  உச்சத்தில் இருந்த காலகட்டம். 

ஒவ்வொரு நாளும் பள்ளிவாசலில் அவரை பார்ப்பதற்கும் , அவருடைய வசனங்களை கேட்பதற்கும் உலகின் திசைகளிலெல்லாம் இருந்து மக்களும் , அறிஞர்களும், நம்பிக்கை வாதிகளும் வந்து கொண்டிருந்தனர், பொற்ச்சரடுகளால் அலங்கரிக்கப்பட்ட குதிரையில் தனது இரண்டு மகன்களுடன் ஒரு அரச ஊர்வலம் போல அவர் தன்னுடைய வீட்டிலிருந்து பள்ளிவாசல் வந்து சேருவார். அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும் அந்த அரங்கில் உரை நிகழ்த்த தொடங்கியவுடன், அந்த சூழல் முழுவதும் இறை நிரம்பிவிடும், அனைவரின் கண்களும் பனிக்க இறையில் மூழ்கி அன்றைய நாளை நிறைவு செய்து தொழுதுவிட்டு , ரூமியை புகழ்ந்து பணிந்து கிளம்பி செல்வர் மக்கள். 

இப்படி நல்மக்கள் , செல்வம் ,புகழ் , விசுவாசமான சீடர்கள், குடும்ப வாழ்விலும் பொது வாழ்விலும் நான் மகிழ்ச்சியான , நிறைவடைந்த மனிதனாகவே இருக்கிறேன் , பிறகும் ஏன் நான் எனக்குள் வெறுமையை உணர்கிறேன் ? ஒவ்வொரு நாளும் அது அகலமாகவும் ஆழமாகவும் ஆகிவருகிறது ஏன்?  ஒரு நோயைப்போல என் ஆன்மாவை தின்று வருகிறது.- என ரூமி சோர்ந்து உடையும் இடத்தில் நாவல் தொடங்குகிறது. 

தப்ரீஸ் நகரை சேர்ந்த ஷம்ஸ் எனும் அலைந்து திரியும் துறவி, தனது வாழ்நாளில் பயணங்களிலும் , நூலகங்களிலும் , ஞானியரிடமும் ஆசானிடமும் அமர்ந்து கற்ற ஆன்ம ஞானத்தை காதலின் { இறை மீதான } நாற்பது விதிகள் என நாவல் முழுவதும் தகுந்த இடைவெளியில் பேசிச்செல்கிறார். 

இந்த நாற்பது விதிகள்  சூஃபியிஸத்தின் மூலத்தில் இல்லையெனினும் இறைத்தூதர்கள் மற்றும் இஸ்லாமிய ஞானியரின் சொற்களையே நாவலாசிரியர் பயன்படுத்தி இருக்கிறார் என்பது மேற்கொண்டு சூஃபி மரபு பற்றி படிக்கையில் தெரிகிறது. 

எவ்வித கவலையும் , பகட்டும் , புகழும் இல்லாத ஷம்ஸுக்கு இருக்கும் ஒரே மனக்குறை  ' தனக்கொரு ஞானத்தொடர்ச்சியை இவ்வுலகில் விட்டுச்செல்லாமல் போய்விடுவோமோ? எனும் பதற்றம் தான்.    

அதே வேளையில் அவர் ஒரு சீடனையோ , குருவையே , புகழ்பாடியையோ விரும்பவில்லை , தன்னை அண்டிய அனைவரையும் சிறிய சோதனைகளை வைத்து விரட்டிவிடவே விரும்புகிறார். அவர் தேடுவது ஒரு கூட்டாளியை. 


ஒரு இரவில் ' இறைவா என் வாழ்நாள் முழுவதும் உன்பாதையில், உலகில் அலைந்து திரிந்தேன் , ஒரு சரியான நபரிடம் உன் ஞானத்தை ஒப்படைக்க எனக்கு உதவு ' அதன் பின் என்னை உன் விருப்பப்படி ஏதும் செய்து கொள் ' என விம்மிக்கொண்டிருப்பவருக்கு.
' பாக்தாதுக்கு போ அங்கே உன் கூட்டாளியை சந்திப்பாய் ' என 
ரூமியை சுட்டிக்காட்டி அருளப்படுகிறது. 

இப்படி தொடங்கும் இவர்களது சந்திப்பு,  மீதி நாவல் முழுவதும் ஆன்மீக உரையாடலாக அமைந்து விடும் என எதிர்பார்த்தால், முற்றிலும் வேறொன்றாக, ஒவ்வொரு பக்கத்திலும் ரூமியையும் , நம்மையும் உடைத்துக்கொண்டே செல்லும் உளியாக, தீவிரம் கொள்கிறது.  அதை செய்பவர்  ஷம்ஸ் ஈ தப்ரீஸ்.

இந்த உடைப்பை  சூஃபி தத்துவத்தின் முக்கிய அங்கமான  ' நப்ஸ் ' எனப்படும்  'தன்முனைப்பு' அல்லது 'அகம்' அதன் பல்வேறு நிலைகள் அதிலிருந்து படிப்படியாக ஆசானின் உதவியுடன் ஏழாவது நிலை வரை செல்லுதல் இறையை தன்னுள் உணர்தல்.  என ஷம்ஸ்  ரூமிக்கு நிகழ்த்துகிறார். 

அதுவரை அறிஞனாக இருந்த  ரூமி  இறை  கவிஞனாகிறான். ஞானியென மாறுகிறான்.  ''ஏனெனில்  அறிஞனை விட ஞானியே மேலானவன் ''- என ஷம்ஸ் முடிக்கிறார். 


இந்த நப்ஸ் எனும் அகங்காரம் ஏழு நிலைகளாக நம் அனைவரிலும் நிறைந்து இருக்கிறது.


இறைநிலையை , சத்தியத்தை , ஏகனை ,இறைநிலையை அடைய ஏழு நிலைகளை, தன்முனைப்பை , மனதை  கடந்து போவதை வலியுறுத்துகிறது. மறை நூல்.

முதல் நிலை இழிமனம். தனது துன்ப நிலைக்கு பிறரை குறை கூறிக்கொண்டும் , உலக துன்பங்களில் சிக்கித்தவித்துக்கொண்டும், திளைக்கும் மனம். 

சுய விசாரம் செய்து தன் முனைப்பின் இழிநிலையை ஒருவர் உணரும் போது பரிசுத்தம் நோக்கி முதல் அடியை எடுத்து வைக்கிறார். 

மூன்றாம் கட்டத்தில் அர்ப்பணம் என்றால் என்ன என்பதை அனுபவிக்கிறார் , பொறுமை , அறிவு , பணிவு , ஊக்கம் உண்டாகிறது, இதுவரை வந்துவிட்டவர்கள் மேற்கொண்டு செல்வதற்கான நாட்டத்தை இழந்து விடுவார்கள்.  இந்த நிலை எவ்வளவு அழகானதாகவும் அருளப்பட்டதாகவும் உள்ளதோ , மேற்கொண்டு செல்ல நினைப்போருக்கு வலையாகவும்  இருக்கிறது. 

இதிலிருந்து மேலே செல்பவர்கள் ' நிம்மதியான மனம் ' எனும் ஞானத்தின் பள்ளத்தாக்கிற்கு வந்து சேர்கிறார்கள் , இங்கே  நன்றியும்  , முழுமையும் ,திருப்தியும் காண்கின்றனர்.

இதற்கப்பால் இருப்பது ஏகத்துவத்தின் நிலை , இங்கே இறைவன் தன்னை எந்த நிலையில் வைத்தாலும் அதனுடன் பொருத்திக்கொள்கின்றனர். 

அடுத்த கட்டத்தில் தன்னில் நிறைந்து அடுத்தவருக்கு ஒளி காட்டும் விளக்காக ,ஆசானாக இருந்து சாதகனுக்கு போதிக்கின்றனர்.  சிலநேரம் அத்தகைய ஒருவருக்கு குணமளிக்கும் ஆற்றலும் வந்து விடுகிறது. அவர் எத்திசை சென்றாலும் அங்கே மக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டே செல்கின்றனர்.  

இறுதியாக தூய்மையாக்கப்பட்ட 'முழு மனிதர் ' ஆகிறார் . அவரையே ' இன்சானுல்  காமில் ' - என்கிறது மறை. 

 மொத்த நாவலும் அதில் வரும் குடிகாரன் , விலைமாது , கொலைகாரன் , பிச்சைக்காரன் , துறவி , மகான், குழந்தைகள் என அனைவரையும் இந்த மையகருத்தில் வைத்து இணைத்து பார்த்து விடமுடியும் என்கிற அளவிற்கு, ஒவ்வொரு பாத்திரமாக வந்து இந்த ஏழு நிலைகளில் ஒன்றை பிரதிபலித்து விட்டு செல்கிறது. 

ஆன்மாவின் நூறு பாடலுக்கு விரிவுரை எழுதிய குரு நித்ய சைதன்ய யதி   "

இறையே, நீ எனக்கு நிச்சயமாய் இதில் உதவவேண்டும்.  நான் ஒரு தற்பெருமைக்காரனாக ஆகாமல் இருக்க எனக்கு அருள் புரிவாயாக!  ஊதிப்பெருகும் பொய்யான தன்முனைப்பு எனக்கில்லாமலாகட்டும்.  இதில் நான் செய்யக்கூடியது எதுவுமில்லை.  நீ வந்து எனக்கு உதவவேண்டும்.  நான் ஆன்மீகத் தன்முனைப்பற்றவனாக ஆகும்படி அருள்வாய்” என்கிறார்.

ஆன்மீகத் தன்முனைப்பைக் கடப்பது எளிதல்ல.  ஒரு பத்து பேர் உங்களைப் பணிந்து மரியாதை செலுத்துவார்களேயானால், நீங்கள் உங்கள் சமநிலையை இழக்காமல் இருக்கக்கூடும். ஆனால் மேலும் மேலும் மக்கள் உங்களை போற்றத்தொடங்கும்போது அது உங்களை விட்டு விலகத்தொடங்கும்.  சரியான மனப்பாங்கை கைவிடாமல் இருப்பது மிகவும் கடினம்."  இப்படி கூறுகிறார்.

இந்த பகுதியும், நாவலின், ரூமியை ஷம்ஸ் ஒவ்வொரு பரிசோதைகளாக செய்து உடைக்கும் பகுதியும் வெகுவாக பொருந்திப்போகிறது.

ஆச்சரியமாக, ஞானியர் அனைவரும் ஒரே வழியிலேயே சிந்தித்திருக்கின்றனர். 

சில நாட்களுக்கு முன், சுவாதிஷ்டானம் எனும் யோக -சக்ர வகுப்பிற்கு தயார் செய்து கொண்டிருக்கும் போது,  மேலே சொன்ன நப்ஸ் மற்றும் குரு நித்யாவின் சொற்களு

ம்  எப்படி பொருந்திப்போகிறது என காணமுடிந்தது.   

யோக மரபு மனிதனில் திகழம் சுவாதிஷ்டான சக்கரத்திற்க்கான ' சுயத்தை '  நிலையாக முன் வைக்கிறது, சுவாதிஷ்டானத்தை உயிர்ப்புடனும், சம நிலையிலும் வைத்துக்கொள்ளும் ஒரு சாதகன் அடையும் , திருப்தியும், சம நிலையும், மகிழ்ச்சியும் பேசப்படுகிறது, எனினும், இந்த நிலையில் திளைத்து தங்கி, தேங்கி விடவே வாய்ப்புகள் அதிகம் என்பதால், ' சாதனாவாலும், ஆசானின் வழி காட்டுதலாலும், முன்னோக்கி சென்று விட வேண்டும்  என வலியுறுத்துகிறது. 

இப்படி 12ம் நூற்றாண்டில் கதை நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே , 2008ல் நிகழும் கதையும் இத்துடன் பிண்ணப்படுகிறது. 

எல்லா எனும் குடும்பத்தலைவி தனது முப்பதுகளின் இறுதியில், வாழ்க்கையில் அனைத்தும் இருந்தும் கொந்தளித்துக்கொண்டிருக்கிறாள்,  அவளை அறியாமலேயே அவள் வாழ்வில் இருந்த  'ஆன்மீக வறட்சி'   அவளை அனைத்து திசைகளிலும் சிதறடிக்கிறது, அதிர்ஷவசமாக நூல்களை வாசித்து விமர்சனம் எழுதும் பணி கிடைக்கிறது, சூஃபி வாழ்வியலை தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளனுடன் நட்பு ஏற்படுகிறது. மீதியிருக்கும் மொத்த வாழ்வும் திசை மாறுகிறது. என்கிற கிளைக்கதை.

 அவள் படித்துக்கொண்டிருக்கும் நாவல் வழியாக நாற்பது காதல் விதிகளில் சிலவற்றை தொட்டு அவளை 'ஆன்மீக வறட்சி' எனும் நிலையிலிருந்து தன்னிறைவு எனும் நிலைக்கு அழைத்துச்செல்கிறது. 


ஷம்ஸ்  ரூமியுடன் நாற்பது நாட்கள் தங்கி சூஃபி மரபின் அனைத்து அங்கங்களையும் போதித்தார் என்றும் , இன்றைய வடிவமான  'சுழலும் தர்வேஸ்கள்'  எனும் இறை நடனத்தை வடிவமைத்து அதன் முறைமைகள், பயிற்சிகள், அனைத்தையும் இயற்றினார்கள் . என சொல்லப்படுகிறது. அது நாவலாசிரியரின் படைப்பு கற்பனையில்  ரூமியும் - ஷம்ஸும் இரண்டரை வருடங்களுக்கு மேலாக கூடி இருந்தனர் என புனைவாக்கப்படுள்ளது.  

புனைவாக  இணைக்கப்பட்ட பகுதிகளில் உணர்ச்சிகரமான தருணங்கள் பல இருந்தாலும் இறையியலில் அதன் எல்லை மீறாமல் கையாளப்பட்டிருக்கிறது, நமது மஹாபாரத கிளைக்கதைகள் பலவற்றை நினைவுறுத்தும் சம்பவங்களும் , காட்சிகளும் நாவல் முழுவதும் பரவிக்கிடக்கிறது. கிழக்குச்சிந்தனை அப்படித்தானே இருக்க முடியும் என தோன்றியது. உதாரணமாக.
 
வெண்முரசில் வரும் சார்வாகன்-தருமன் பகுதி. 

வெற்றி பெற்ற பாண்டவர்கள் மக்களுக்கு பொன்னையும் பொருளையும் வாரி வழங்குகினறனர், அந்த கூட்டத்தில் ஒரு சாருவாகன் தருமனிடம் வாங்கிய பொற்காசுகளை தரையில் வீசி எரிந்து, 'குருதியின் வாசம் வீசும் ' பொற்காசுகள் வேண்டாம் ,வேறு காசுகள் தருக.  என கலகம் செய்கிறான் ஒவ்வொரு முறையும் காசுகளை தருமனை நோக்கி வீசுகிறான். 

இந்த கதை அப்படியே நாவலில் வேறு வடிவில் கையாளப்படுகிறது. 
ரூமியும் - ஷம்ஸும்  தனிமையில் நாற்பது நாட்கள் உரையாடலில் உள்ளனர் முடிவில்  இன்றைய வடிவில் நாம் காணும் ''சுழலும் இறை நடனம்'' எனும் முறையை கோயா நகரில் அறிமுகம் செய்கின்றனர். நகரின் அனைத்து தரப்பினரும் குழுமியிருக்க , நகரத்தலைவரும் நீதிபதியும் வந்து நடனத்தை ரசிக்கின்றனர், 

நீதிமான்,  ரூமியின் புரவலர் என்பதால் , நடனம் முடிந்தபின் பொற்கிழி பரிசளிக்கிறார். நீதிமான் மேடையை விட்டும் இறங்கும் முன்னரே அவருக்கும் முன்னால் அந்த பொற்காசுகள் வீசியெறிப்படுகிறது, எறிந்தவர் ஷம்ஸ் தப்ரீஸ்-  'இது இறைவனுக்கு நாங்கள் அர்ப்பணிக்கும் நடனம் ' கேளிக்கையல்ல ' என கடிந்து நகரத்தலைவரை விரட்டுகிறார். 

இப்படி பல சம்பவங்கள் நம் கீழைச்சிந்தனைக்கு அருகில் சென்று அமர்பவை. 

கிளைக்கதையான  குடும்பத்தலைவி எல்லா  மற்றும் நவீன சூஃபி  அஸீஸ் கதை எந்தவகையிலும் தனித்தும் , துருத்திக்கொண்டும் இல்லாமல் , மையக்கதையுடன் பொருந்திப்போகிறது. 

ஓஷோவின் இறுதிச்சடங்கை மாபெரும் நடனத்திருவிழாவாக கொண்டாடும் காட்சி இணையத்தில் கிடைக்கிறது. அதை முன்னரே திட்டமிட்டவரும் அவரே தான். இந்தக்கதை அப்படி ஒரு கொண்டாட்டமாக முடிகிறது. 

ஷம்ஸ்  தப்ரீஸ் மரணம் பற்றி பல கருத்துகள் இருக்கிறது, அவர் மறைஞானியருக்கே உரித்தான முறையில் மாயமாக 'மறைந்து ' விட்டார் என்றும் , ரூமியின் அணுக்கசீடர்களே தப்ரீஸை கொன்று விட்டார்கள் என்றும் , கோன்யா நகரிலிருந்து கோய் நகருக்கு சென்று இறந்தார் அவருக்கு ரூமியின் மகன் சமாதி எழுப்பினர் என்றும்  கதைகள் இருந்தாலும், இவை அனைத்தயும் வைத்து நாவலை கச்சிதமாக முடித்திருக்கிறார். 


கிழக்கின் ஞானம் பிரவாகமாக எல்லா திசைகளிலும் பாய்ந்து கொண்டிருக்கிறது , அதை ஒவ்வொரு மனிதனின் வீட்டு படித்துறை வரை கொண்டு சேர்க்கும் ஞானியரும், ஆசான்களும் தோன்றியவண்ணம் இருக்கின்றனர், படித்துறை வரை செல்வதும் , நமக்கானதை பெறுவதும், அவரவர் செய்ய வேண்டிய சாதனா { தரீக்கா } எனும் பயணமும் , எந்த அளவு மொண்டுகொள்ள முடியும்,  என்பதும்  அவரவர் கையிலிருக்கும் குவளையின் அளவையும் பொறுத்தது. நதிகள் இங்கு என்றுமிருக்கும். -  

எலிஃப் ஷாபாக் எழுதிய இந்நாவல் ரமீஸ் பிலாலி அவர்களால் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  ரமீஸ் தனது முன்னுரையில்,  ''பல்பண்பாட்டியல்'' எனும் நவீன கோட்பாட்டின் படி இங்ஙனம் தமிழில் மொழிபெயக்கப்படும் நாவல்களை வாசிக்க வேண்டிய தேவை குறித்தும் , அதன்  இன்றைய சூழலுக்கான முக்கியத்துவம் குறித்தும் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

Featured Post

The Master Christian - A NOVEL by Marie Corelli

 - குயவன் கையில் களிமண்ணாய்...... தமிழில் சுபஸ்ரீ  ---------------------------------------------------- மெய்யியல், தத்துவம் ஆன்மீகம், மற்றும...