Thursday, March 21, 2024

ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் - நீட்ஷே


சில  'கணத்த' நூல்களை வாசித்தபின் இப்படி  தோன்றுவதுண்டு .'இது பிடிகிடைக்கல' என.  குர்ட்ஜீப் பற்றிய (https://www.jeyamohan.in/139884/ ) நூல், எழுதப்பட்ட தன்மையாலும் , ஓஷோ சொன்னதால் வந்த வசீகரத்தாலும், படித்து முடித்தபின், 'நல்லாயிருக்குங்க '' என்று மனதில் ஒருமுறை சொல்லிக்கொள்ள செய்த நூல். அந்தவகையில் இதுவும் ஒன்று.  






ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் - நீட்ஷே
 
மாபெரும் மறுப்பாளனின் மகத்தான  வாக்குமூலம்


பதின்வயது பையன் ஒருவன் , தன் தந்தைக்கு  தெரியாமல்  ஒரு லாகிரி வஸ்துவை  புகைப்பதில் அடையும், பேரின்பமும், மீறலும், அவனது வாழ்நாள் சேகரமான அனுபவ கிடங்குகளில்  முக்கியமான இடத்தை நிரப்பிக்கொள்பவை.  அப்படி ஒரு அனுபவம்  தான் எனக்கு இந்த நூல். கடந்த பத்து வருடங்களாக  நித்ய சைதன்ய யதியை  அவர் ஞானத்தை  துளித்துளி என  பருகுபவன்  என்கிற முறையில், அவரின் நூற்றுக்கணக்கான மாணவ- புத்திரர்களின் வரிசையில் மானசீகமாக  ஒரு  ஓரத்தில் நின்றுகொள்பவன் 


இந்த  கட்டுரையில் 



''நித்யா நீட்சேவின் ''அதிமானுடன்'' என்னும் உருவகம் பற்றிப் பேசியிருக்கிறார். அதை நிராகரித்து விராடபுருஷன் என்னும் கருத்தை முன்வைத்து. விழைவின் உச்சமான அதிமானுடன் அழிவுச்சக்தியாகவே இருக்கமுடியும், ஏனென்றால் அவன் ஒரு பெரிய விசை. எந்த ஒற்றைவிசைக்கும் எதிர்விசை இருக்கும் என்றார்.''

நீட்ஷே  பற்றி,  யதி இப்படி சொன்ன பின்னர், ஒருமுறை  நீட்ஷேவை , படித்துபார்க்கலாம்.  என தோன்றியது. அதற்கு காரணம், நீட்ஷே  நமது  சார்வாக நெறிக்கு சற்று அருகில் இருப்பவர் என்கிற எண்ணமும் , மேலே சொன்ன மாணவ -மீறலும்  தான்  காரணம். 


பின்னர், எஸ் .ராமகிருஷ்ணன் சார், இந்த நூலுக்கு எழுதிய அறிமுக உரையில்,
{ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்}  கவரப்பட்டு , ஜரதுஷ்டனை  தேர்ந்தெடுத்தேன்.

ஜரதுஸ்டராவின் மனத்தின் குரலாக நீட்ஷே பேசுகிறார்.

நீட்ஷே, ஏன்  தன்னுடைய குரலை, பெர்ஷிய மதகுருவான  ஜரதுஷ்டா மூலம் வெளிப்படுத்தினார் என்பதற்கு, 
'' அகுரா -மஜ்தா '' எனும்  ஒளி மற்றும் நன்மையின்  கடவுளுக்கும்.  'அங்ரா-மெய்ன்' எனும்  இருள்  மற்றும்  தீமையின் கடவுளுக்கும்  நடக்கும், போராட்டம்  தான் இந்த  மதத்தின்  மையம்'  என்று, தனக்கு  சாதகமான குரலாக  ஜரதுஷ்டாவை  தேர்தெடுத்ததாக  சொல்கிறார்.


நாவல்  தன்மையுடன் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த  நூல், ஜரதுஷ்டா, (1) மலைக்குகையிலிருந்து இறங்கி மக்களிடம்  வருதல் ,(2) அந்த கும்பலில் இருந்து தனது சீடர்களை  கண்டடைதல் ,(3) மீண்டும் விலகி  ஏகாந்தத்திற்கு செல்லுதல்,(4) இறுதியாக  உயர்மனிதர்களை கண்டடைதல்  என  நான்கு பாகங்களாக,  பிரிக்கப்பட்டிருந்தாலும், நாவல் முழுவதும் ஒருவித , தொடர்ந்து உருண்டோடும் சக்கரம் இருக்கிறது, அது நம்மை முன்னோக்கி இழுத்துச்செல்கிறது .

நீட்சே கறாரான தத்துவவாதியாகவோ , ஒற்றை பிரதி எனப்படும். 'கேனான்' போன்ற ஒன்றையோ,  ஆணித்தரமாக முன்வைக்காதது ஒருவகையில் திருப்தியையும், நீட்ஷேவை விட்டுவிட்டாலும் தத்துவத்திற்கு ஒன்றும் பங்கம் வந்துவிடாது. என்கிற   உத்திரவாதத்தையும் ஒரு சேர வழங்குகிறது.  

எனினும் ,இந்நூலில் 'அதிமனிதன்' - 'சுயத்தை அல்லது தன்னை விஞ்சுதல்' - 
'கடவுள் இறந்துவிட்டார்' - போன்ற மறைச்சொற்கள் , தொடர்ந்து சொல்லப்படுகிறது. 

ஆனந்த குமாரசாமியின்  சிவதாண்டவத்தில் '' நீட்ஷே பற்றி ஒரு அத்யாயம்  வருகிறது. அதில் 
'' ஒரே சமயத்தில்  மலராகவும் , மனிதர்களின்  ரட்சகனாகவும் ,  தலைவனாகவும், நல்லது மற்றும்  தீயத்திற்கு அப்பால்  நற்குணம் கொண்ட -அதிமனிதன்- திரும்பத்திரும்ப முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்த  சீர்மையிலான பெயர்கள்  இந்திய இலக்கியத்தில் ,அர்ஹத் {கை தேர்ந்தவர் } புத்தர் { ஒளிபேறு  பெற்றவர்}ஜீனர் {ஆட்கொள்பவர் } தீர்த்தங்கரர் { கடவுத்துறையை  கண்டடைந்தவர் } போதிசத்வர் { அளிக்கும் நற்குணத்தின்  மறுபிறப்பு} ஜீவன் முக்தர் {இந்த வாழ்வில் விடுதலை அடைந்தவர்.  மற்றும்  நீட்சேவின்  கருத்துக்கள் பல  பகவத் கீதை , உபநிடதங்கள் , மற்றும் தாவோவில் உள்ளவற்றோடு  ஒத்துப்போவதை  சுட்டிக்காட்டுகிறார் . 

எனினும் , இந்த நூல் படித்து முடிக்கையில் முற்றிலும் வேறு ஒன்றாக பொருள் தருகிறது .
உதாரணமாக  இந்நூல் ஒரு மாபெரும் மறுப்பாளனின் மகத்தான வாக்குமூலம்  என்றே படுகிறது.


அதிமனிதன் யார் ? 

அனைத்து உயிரினங்களும் இதுவரை தங்களுக்கு மேலான ஒன்றை உருவாக்கியுள்ளன, புழுவாய் இருந்த  நீங்கள் மனிதனாகும்  வழியை  ஏற்படுத்திக்கொண்டீர்கள் , ஆனால் உள்ளே இன்னும் புழுவாகத்தான் இருக்கிறீர்கள், நீங்கள் ஒருகாலத்தில் மனித குரங்காக இருந்தீர்கள் , இப்போதும் கூட அப்படியே  நீடிக்கிறீர்கள். உங்களை அதிமனிதனாக மாற்றிக்கொள்ளாவிட்டால், நாளை வரப்போகும் அதிமனிதனுக்கு  நீங்கள் ஒரு  நகைப்பிற்குரிய குரங்கு  அல்லது தடுமாற்றம் நிரம்பிய புழு. 
இப்படித்தான் பீடிகையுடன்,  நீட்ஷே  அதிமனிதனுக்கான  அடித்தளத்தை  எழுப்புகிறார்.
 
பின்னர்  தான் நிராகரிக்கும் மிக நீண்ட பட்டியல் ஒன்றை  வாசிக்கிறார்.

நம்பிக்கையாளர்களை, பூமிக்கு மேலேயுள்ளவற்றின் {கடவுள்} நம்பிக்கை பற்றி பேசுபவர்களை  நம்பாதீர்கள்  !!
கடவுளுக்கு எதிரான  நிந்தனையாளர்களை  நம்பாதீர்கள் !!
ஏனெனில் கடவுள் இறந்துவிட்டார் !!
ஆத்மா-வை நம்பாதீர்கள் !!
உங்கள் மகிழ்ச்சியையும் , நற்குணங்களையும்  நம்பாதீர்கள் !!
உங்கள் நியாயத்தையும் , கழிவிரக்கத்தையும்  நம்பாதீர்கள் !!
இவ்வாறு நீங்கள் நிராகரிக்கப்படும்  அனைத்தும்,உங்களை மந்தையில் இருந்து வெளியேற்றி    அதிமனிதனாக்குகிறது. 

என்று கூறிவிட்டு, அடுத்த இரண்டு அத்தியாயங்களில்  கிட்டத்தட்ட 250 பக்கங்களில்  பின்வரும்  அனைத்தை பற்றியும்  மறுத்தளிக்கிறார். அல்லது இதிலிருந்து மேலெழுபவனே  அதிமானுடன்  என்கிறார்.
 
மகிழ்ச்சி மற்றும் ஆசை பற்றி ...
வாசித்தல் மற்றும் எழுதுதல்  பற்றி ...
போர் மற்றும் போராளிகள் பற்றி ...
நண்பனை பற்றி .. 
கற்பு பற்றி ...
அண்டை வீட்டானை நேசிப்பது பற்றி ...
கிழவி மற்றும் குமரிகள் பற்றி...
திருமணம்  மற்றும் குழந்தைகள் பற்றி .. 
மரணம் பற்றி...
கொடை பண்பு  பற்றி...
 என ஒரு  நீண்ட பட்டியல் தொடர்கிறது. 
இறுதி அத்தியாயத்தில் கவிதை நடையில், பூடகமான வார்த்தைகளில் , விழைவின் மூலமும் மேலும் மேலும்  தன்னை  தானே விஞ்சுதல் மூலமும், அதிமானுடனாவது.

விலங்கு நிலைக்கும், அதிமானுட நிலைக்கும், இடைப்பட்ட நிலை தான் இந்த  மனித இருப்பு. இந்த பாதாளத்தை கடக்கும் கயிறாக மனித இருப்பை உபயோகித்து மேலெழுந்து, அதிமானுடனாவதே, முக்கியம்.
ஆகவே இந்த மனித வாழ்விற்கு செலவிடப்படும் நேரமும், ஆற்றலும்  நேரமும் முற்றிலும் வீண் தான்  என்கிறார்.

'உரிய காலத்தில் சட்டையை உரித்துக்கொள்ளாத நாகம் மரணிக்கும்.  மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத மனமும் மரணத்தையே தழுவும்'. போன்ற மனம் சார்ந்த கோட்ப்பாடுகளை முன் வைக்கும்  நீட்ஷே.


'விஞ்சுதல்' , 'அதிமனிதனாகுதல்' போன்றவற்றிற்கு, துல்லியமான ஒரு பாடதிதிட்டத்தை, அல்லது வழிமுறையை சொல்லாமல், ''மனித மனதின் திடத்தால்''{ psychological power} அளப்பரிய சக்தியால் இதை அடைய முடியும் என்று சொல்கிறார்.  ஓரளவு கிழக்கின் போதனைகளும் , சாதனைகளும் தெரிந்த ஒருவருக்கு  நீட்சே மிகவும் அடிப்படையான ஒன்றை மட்டுமே தருகிறார்.  மேற்கில், மனம் மற்றும் அதன் ஆற்றல்கள் பற்றி பேசிகொண்டுருந்த காலகட்டத்திற்கு முன்னரே , கிழக்கே , மனம் மற்றும் அதன் செயல்பாடுகள் அதையும்விட ஆழமான சித்தம்,புத்தி , அஹம்காரம் , மனம். மற்றும் சித்தத்தை சீரமைக்கும் பயிற்சி திட்டங்கள். என பலவும் பேசப்பட்டுவிட்டது. ஆகவே  நீட்சே முன்வைக்கும்  ''மனதின் ஆற்றலால் மேலெழுதல் '' நமக்கு புதுமை இல்லை.என தோன்றியது. 

எனினும், ''தத்துவங்களும் , உன்னதங்களும், அனைவருக்குமானவை அன்று , அவை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே , ''புனிதமான செய்திகளே'' பெருந்திறலுக்குரியவை.' என்று குறிப்பிடுகிறார். சாதாரணங்கள்  அனைத்தையும் உடைத்தல்,முற்றிலும் தனித்த உறுதியான,  தன்னை கண்டடைந்து முன்வைத்தல் , அதில் அடையப்பெறும் சுக-துக்கங்களை சமமாக பாவித்தல்.  அல்லது கண்டுகொள்ளாமல்  இருத்தல்.
என பூடக மொழியில் பேசிச்செல்கிறது  நூல். 

நீட்சே முன்வைக்கும் மூன்று  உருவகங்கள்.

1) ஒட்டகம் :-    தனித்த பாலைநிலத்தில்  தனக்கான பயணத்தை, அதிக சுமையுடன், நீண்ட தூரம் பயணிக்கும் வல்லமை பொருந்திய  பயணி.  ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான முறை நடக்கப்பட்ட பாதையில் செல்லும் பெருந்திரள் மனிதர்களையும் , மரபை தொடர்பவர்களையும்,  குறிக்கும்  படிமம்  இது.

 

2) சிம்மம் :-    'ஒட்டகம்' என  தனக்கான பாதையை வகுத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்கும், பயணியின் பாதையை முற்றிலுமாக மறுக்கக்கூடிய, அனைத்து சம்பிரதாயமான முறைமைகளுக்கும் கறாரான மறுப்பை காட்டக்கூடியது. இந்தபடிமம்.  
ஒட்டகம் 'ஆம் ஆம்'  என தலையாட்டியபடி, பெருத்த சுமையுடன் , பயணித்தாலும் அதன் நேர் எதிரென  ''இல்லை இல்லை'' என அனைத்தையும் மறுத்தபடி,  சுயத்தை, வலிமையை,  தனது எல்லைகளை  கண்டடைய எத்தனிக்கும், இரண்டாவது படிமம் இந்த  சிம்மம். 
ஒருவகையில்  மனிதன் இந்த ஒட்டக நிலையிலிருந்து சிம்மாமாக உருமாறுவது ஒரு  படிநிலை.


3) குழந்தை :-   முந்தைய  வாழ்வின் சுவடுகள் முழுவதும் துடைக்கப்பட்டு , புதிய சாத்தியங்களுடன் பிறக்கும் புதுப்பிறவி, ஒவ்வொரு நொடியும் புதிதாக ஒன்றை கண்டடைவதும், கலைப்பதும் , தனக்கான ஒரு உலகை சமைத்துக்கொள்வதுமாக இருக்கும் குழந்தை.  நன்மை தீமைகளுக்கு அப்பாற்பட்ட இருப்பு.  தனக்கான மதிப்பீடுகளை தானே வகுத்துக்கொண்டு, ஆனந்தநிலையில் திளைத்தல். 

இப்படியாக  ஜரதுஷ்டனின் குரலில் பேசிமுடிகிறார் நீட்சே. 

மேற்கின் சித்தனை முறைகளை , தத்துவங்களை,   கிழக்கின் தத்துவங்களுடன் இணைவைத்தோ, ஒப்பிட்டோ நோக்கக்கூடாது, எனினும்  நமக்கு  ஒவ்வொன்றையும் நமது மரபுடனும், நிலத்திடனும், சற்று தேய்த்துப் பார்த்துக்கொள்வதில் ஒரு  கிளர்ச்சி இருப்பது உண்மையே.  

நீட்ஷேயின் அதிமனிதன் இன்னும் நேர்நிலைகொண்ட  அதிமானுடனாக,  வர சாத்தியமுள்ள சொல்லாட்சியும் , கதாபாத்திரங்களும், நம்மிடம் எதெல்லாம் இருக்கிறது என,  இந்த நூலை முடிக்கையில்  தற்செயலாக எழுந்தவை.

விவேகானந்தர் முன்னிறுத்தும்   ''அம்ருதஸ்ய புத்ர '' !!

உபநிதட வாக்கியங்களில் வரும் 'தத்வமஸி' யும். 'அஹம் ப்ரஹ்மாஸ்மி' யும்  யாரை நோக்கி சுட்டிக்காட்டப்பட்டதோ  அந்த ''ரிஷி''.!!

''விராட புருஷன்''  எனும் 'அது'!!
''பிரஹஸ்பதி'' ( பிரஹத் =பிரமாண்டம்) பிரமாண்டத்திற்கு அதிபதி .!!
இப்படி பத்து பதினைந்து உவமைகளை சொல்லிவிடலாம்.



மொழிபெயர்ப்பு பற்றி ஒரு சில வார்த்தைகள்.
ரவி அவர்கள் மொழிபெயர்த்திருக்கும் இந்த நூலை ஆங்கில பிரதியுடன் படிப்பது  நலம், இணையம் எனும் தோழனின் உதவியுடன், இந்த நூலின்  ஓவ்வொரு முக்கியமான பகுதியையும் , தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து புரிந்துகொள்ள வேண்டியிருந்தது . ஜுனூன் தமிழ் என்று ஒன்று இருந்தது  அதற்கு சற்றும் சளைத்ததல்ல இந்த மொழிபெயர்ப்பு .


இந்த நூலில் நீட்சேவின்  முடிவிலா மறுசுழற்சி { eternal recurrence} ,பற்றி விரிவாக பேசப்படவில்லை எனினும்  அவருடைய சிந்தனைப்பள்ளியில் அதுவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இன்றைய அறிவியல் பார்வையில் முற்றிலுமாக மறுக்கப்பட்டுவிட்ட ஒரு சித்தாந்தம். என்பது வேறு கதை. 
  
இந்த நூலை நீட்சே பற்றிய ஒரு அறிமுக வாசிப்புக்காகவே  தேர்தெடுத்தேன் , மேலும் சில காலங்கள் தொடர்கையில், தத்துவத்தில் , சிந்தனைப்பள்ளியில்,  நீட்சேவின் இடம் எனக்கு இன்னும் தெளிவாக பிடிகிடைக்கலாம். அதுவரை தொடர்வாசிப்பு மட்டுமே மேலும் சில வாசல்களை திறக்கும் என  நம்புகிறேன். 

வானத்துக்கு கீழ் இருக்கும் அனைத்தும் புரிந்தே ஆகவேண்டிய அவசியம் இல்லைதான்.
 நாம் அனுபவித்த பின்னரும் சில விஷயங்களில் நமக்கு ''பிடி கிட்டுவதில்லை ''  இந்நூல் எனக்கு அத்தகைய ஒன்று. 

Featured Post

The Master Christian - A NOVEL by Marie Corelli

 - குயவன் கையில் களிமண்ணாய்...... தமிழில் சுபஸ்ரீ  ---------------------------------------------------- மெய்யியல், தத்துவம் ஆன்மீகம், மற்றும...