Thursday, March 14, 2024

YOGA- 1

 

‘’யோகா’’  என்கிற  தலைப்பிற்கு இன்று எந்த  அறிமுகமும்  தேவையில்லை . அடுத்த மூன்று  நிமிடத்தில்  நீங்கள்  கைபேசியை  இயக்கி  ஆயிரம்  தகவல்களை  திரட்டி விடமுடியும்  அல்லது  இந்த நிமிடத்தில்  உங்கள்  மனதில்  யோகா பற்றிய  ஒரு  சித்திரம் உருவாகி   இருக்கும் .           இந்தத்தொடர்  இவற்றிலிருந்து  சற்று முன்னகர்ந்து  நவீன  வாழ்வியல்  தேவைகள் மற்றும்  சிக்கல்களுக்கு , மரபார்ந்த  யோக முறைகளும் ,யோக  கல்வியும்  தீர்வு அளிக்குமா? , அதன்  சாதக, பாதகங்கள்  என்ன ? என்பதை எவ்வித  புனிதப்படுத்தலும் , புறந்தள்ளுதலும்  இன்றி இந்த நூற்றாண்டுக்கான  யோகம்  எது? அதன் சாத்தியங்கள்  மற்றும்  எல்லைகள் என்ன ?  என்பதை  தெரிந்து கொள்ளவும், தேர்வு செய்யவும்  ஒரு  அர்ப்பணிப்புடன்  கூடிய  முயற்சி.

இதில்  நாம்  தெரிந்துகொள்ள வேண்டியது , உலகம் முழுவதும்  இன்று  இரண்டு வகையான யோகக்கல்வி  அல்லது  பாடத்திட்டங்கள்  போதிக்கப்பட்டு வருகிறது. முதலாவதும்  பெரும்பான்மையானதுமான ''நவீன  யோகக்கல்வி ''  இரண்டாவதும்  முக்கியமானதுமான  ''மரபுவழி  யோகக்கல்வி ''

 

 

‘’நவீன  யோகக்கல்வி’’ {NON-TRADITIONAL YOGA }  என்பது  ஒரு குறிப்பட்ட  பலனை கருதி செய்யப்படும் பயிற்சி முறைகள் .  உதாரணமாக , ஒருவருக்கு  முதுகுவலி  இருக்கும் பட்சத்தில்  அதற்கான பிரத்யேகமான யோகப்பயிற்சிகளை , மூன்று மாதம் முதல்  ஆறு மாதங்கள் வரை  தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால்  அந்த நோய்  முற்றிலுமாகவோ , அல்லது  பெருமளவிலோ குணப்படுத்தப்பட்டு ,ஒரு  மாற்று மருத்துவ சிகிழ்ச்சை போல  செயல் படும் .   இது  பெரும்பாலும்  ஆசனப்பயிற்சிகள்  என்பதால் , உடல்  சீராக்கப்படுவது மட்டுமே  இதன்  நோக்கமாக இருக்கிறது ,  இதில்  மனதளவில்  பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் மிகவும் குறைவு . அதுவே  இவ்வகை உடல் சார்ந்த பயிற்சிகளின் எல்லைகள் என்றும் சொல்லலாம்.

 

இன்று  உலகம் முழுவதுமுள்ள  யோக பயிற்சியாளர்கள் ,  மாணவர்கள் , நிறுவனங்கள் ,  மற்றும்  ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள்  இந்த முதல் வகை யோக முறையை சார்ந்தவர்கள். மேற்குலகில்  அவர்களின்  அறிவியல் பூர்வமான  அணுகுமுறை, மற்றும்  அன்றாட பலன் சார்ந்த  அணுகுமுறைக்கு  இந்தவகை  பயிற்சிகள்  நேரடி அனுபவமாக   கிடைப்பதால், அவர்கள் இதை  வரவேற்றனர் ,  ஆகவே  உலகம் முழுவதும்  இதே வடிவில்  யோகாவை   அணுகியது .  இதுவே  அறுபது முதல்  எழுபது  சதவிகித மக்களால்  பயிலப்படுகிறது .  இதில்  யோக மரபின்  தத்துவமோ , அதன் படிநிலைகளோ ,  நம்பிக்கை , மற்றும்  சம்பிரதாய முறைகளோ  பெரியதாக   பேசப்படுவதில்லை.   

இந்தமுறை யோகத்தை பயிலும்   மாணவர்களுக்கும்   அதற்கான  தேவைகள்  இருப்பதில்லை .  அவர்கள்  எதிர்பார்க்கும்   உலகியல் மற்றும் உடலியல்   சார்ந்த பலன் கிடைப்பதால் ,  அதில் நிறைவும் ,  மகிழ்வும்  அடைந்து விடுகினறனர் .  ஒப்புநோக்க ,  மற்ற  சிகிழ்ச்சை முறைகள் அல்லது கட்டுப்பாட்டு  முறைகளை விட  இவ்வகை  யோகம்  ஒரு  சிறந்த கருவி  என்றே சொல்லமுடியும் .  ஆகவே ,  இந்திய   அறிதல் முறைகளான , தாந்த்ரீகம் , ஆயுர்வேதம் ,  யோகம், என்கிற  மூன்றிலும்,  ஆயுர்வேதமும் , தாந்த்ரீகமும் ,மேற்குலகில்  ஒரு கிளர்ச்சிக்காக ,  அல்லது ஆர்வத்திற்காக  பேசப்பட்டாலும்,  யோகக்கல்வியே , விரைவாகவும் , எளிதாகவும்  கிளை பரப்பி இருப்பதை காணலாம் .

 

இதற்கு அடுத்ததாக ,  ‘மரபுவழி  யோகா’ { TRADITIONAL YOGA}  எனப்படும்  யோகக்கல்வி முறை. இதைப்பற்றி  தெரிந்து கொள்வதற்கு முன் , இந்திய மரபில் ,  யோகா என்பதை  எவ்வகையில் பொருள் கொள்கிறார்கள்  என்பதை  சிறிது  பார்த்துவிடலாம். ‘’யோக்’- ‘யுஜ்’ என்கிற வேர்ச்சொல்லிலிருந்து வருகிறது, இதற்கு, ஒருங்கிணைத்தல்  என்று பொருள் கொள்ளலாம். எனின் எதை ஒருங்கிணைத்தல் ? என்கிற கேள்விக்கு, புராண, தத்துவ, அறிவியல், உளவியல்,  என பல்வேறு தளங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

எனினும், யோக  மரபு இந்த வாழ்வை,  ஐந்து தளங்களாக பிரிக்கிறது. அதாவது பஞ்சகோஷம் என்று கூறுகிறது.

கோஷம் என்பதை அடுக்குகள் அல்லது தளங்கள், உறைகள் என்று மொழிபெயர்க்கலாம்.

இவை முறையே  அன்னமய கோஷம்,  பிராண மய கோஷம்,  மனோமய கோஷம்,  விஞ்ஞான மய கோஷம் , ஆனந்தமய கோஷம் என்று வகைப்படுத்துகிறது.

                       

 

 

 

 

 

அவை

அன்னமய கோஷம் , உண்ணும் உணவால்  அதாவது  அன்னத்தால் உருவாகும்  உடல் கண்ணுக்கு தெரிவது ,

இரண்டாவது  பிராணமய  கோஷம் , பிராண  என்றால்  சக்தி  அல்லது  உயிராற்றல்  எனலாம் , அதாவது  இயக்க சக்தி

மூன்றாவது , மனோமய கோஷம்  அதாவது  மனம் எனும்  எண்ணங்களால் உருவான  தளம் ,

நான்காவது , விஞ்ஞான மய  கோஷம்  எனும் , உள்ளுணர்வு  அல்லது  உயர்நிலை   அறிவின் தளம்.

ஐந்தாவதாக , ஆனந்தமய கோஷம்  எனும்  மெய்யான  ஆனந்தநிலை.

 

 

இவற்றை  ஒருங்கிணைத்து  அடையப்பெறும்  விடுதலை நிலையை, பதஞ்சலி ,திருமூலர்  முதல்  ஓஷோ, ஜக்கி வாசுதேவ் வரை பல்வேறு  காலகட்டத்திலும், தொடர்ந்து  பேசி வந்துள்ளனர். இன்னும்  ஆயிரமாயிரம்  வருடங்களானாலும் ,  இது  தொடர்ந்து பேசப்படும் ,  ஏனெனில் , நமது அன்றாடம்  என  சொல்லிக்கொள்ளும்  அத்தனை  அனுபவங்களும் ,  மேலே  சொன்ன பஞ்சகோஷ தளங்களில்  நிகழ்கிறது . அதிலும் முக்கியமாக முதல் மூன்று கோஷங்கள்  நமது  தினசரி  வாழ்வு  என்று  தெளிவாக  காணமுடியும் , நமது  வலி , வேதனை ,  துக்கம் , சந்தோசம் , அமைதி ,படபடப்பு , என்கிற  அனைத்து  அனுபவங்களும் , உடலாலோ  மனதாலோ  மட்டுமே, பெரும்பாலும்    நாம்  அனுபவிக்கிறோம் .

 

எனில், நீங்கள்  ஒரு நாளில்  அரைமணி நேரமோ , ஒருமணி நேரமோ செய்யும் பயிற்சியில் ,உங்களுடைய மனம் , உடல் ,உயிராற்றல் என மூன்றையும் சமன் செய்யக்கூடிய வல்லமை தரக்கூடிய பயிற்சிகள் இல்லையெனில் அது முழுமையான யோகக்கல்வியாக இருக்க முடியாது . அப்படி ஒரு யோகக்கல்வி அமையுமெனில்  பயிற்சி தொடங்கிய முதல் 90  நாட்களில் , உங்களுடைய, உடல் ,உயிராற்றல் , மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு , மிகப்பெரிய தீர்வும் விடுதலையும் கண்டடைய பட்டிருக்கும் . . ஆகவே , அப்படி ஒரு யோகத்தை பயில்வதே முழுமையான பலனையும் , அளிக்கும் . அப்படி ஒன்றை தேடிக்கண்டடைக .

 

நமது அடுத்த பகுதியில்  அப்படியான கல்வி, மற்றும் பயிற்சி முறைகள் சிலவற்றை காண்போம்.

 


Featured Post

YOGA -9

  மேன்மைகள்   யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்போம் .   இந்திய அறிதல் முறைகள் அனைத்தும் , மற்ற மரபுகளுடன் உரையாடி அவற்றிலிருந்து த...