ஹடயோகியின் உன்னத உடலை அடைதல்.
-----
அன்னமயகோசம் எனும் ஆடல் களம்
ஒவ்வொரு நூற்றாண்டிலும் யோகமரபின் பயிற்சியும், தேவைகளும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் யோகம் என்பது சித்திகளை அடைதல் , தாந்த்ரீக பயிற்சிகளை கற்று, தேர்ந்து அமானுஷ்யங்களை செய்து காட்டுதல் என்கிற நிலையில் தான் இருந்திருக்கிறது, 19ம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் யோகக்கல்வி உலகம் முழுவதும் பரவலாக்கப்பட்டு , அன்றாட தேவைக்கான மாற்று சிகிச்சை , மற்றும் அடிப்படை ஆரோக்யம் போன்ற காரணிகளுக்காக பயிலப்படுகிறது.
நாம் உண்ணும் உணவே நம் உடல் என்றாகிறது. உண்ணும் உணவு அனைத்துமே அன்னம் என்றே அழைக்கப்படுவதால் , அன்னத்தால் உருவான இந்த தளம். அன்னமய கோஸம்.
நாம் முன்னரே பார்த்த பஞ்சகோஷம் எனும் ஐந்து தளங்களிலான இந்த மனித வாழ்வில் , முதல் மூன்று தளங்களில் தான் நாம் அன்றாடம் துயரை அனுபவிக்கின்றோம். ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு ஒருமுறை நம் உடல் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைகிறது. உதாரணமாக நீங்கள் இந்த கட்டுரையை படிக்க அரைமணி நேரம் ஆகுமெனில், படிக்கத்தொடங்கிய போது இருந்த உடலல்ல கட்டுரை முடியும்போது இருக்கும் நிலை . உங்களுடைய காலோ , முதுகுப்பகுதியோ, கழுத்தோ, இறுக்கமாகி இருக்கும் அல்லது கணமாகவோ , உளைச்சலுடனோ இருப்பதை உணரமுடியும்.
நம் ரயில் பயணங்களில் கவனித்திருக்கலாம் மனிதர்கள் தொடர்ந்து தங்களை அசைத்துக்கொண்டே இருப்பதையும், அரைமணி நேரத்தில் அசூயையாக உணர்வதையும், கூன் போட்டு உட்கார்ந்த ஒருவர் நிமிர்ந்து சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டு மீண்டும் கூன் போட்டு அமர்ந்து மொபைலை பார்த்துக்கொண்டிருப்பதையும் பார்க்க நேரிடுகிறது. இந்த உடல்கள் என்ன சொல்கின்றன ?
நான் சமநிலையில் இல்லை. என்னை சீர் செய் - என்பது தான் அதன் குரல்.
இது நமது முதல் தளமான அன்னமய கோஷத்தில், நிகழ்கிறது.
நீங்கள் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும், அல்லது நாள் முழுவதும் செயலேதும் செய்யாமல் ஓய்வில் இருந்தாலும் , இந்த உடல் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட மாற்றத்திற்கு உட்படுகிறது. உலகின் மிக மிருதுவான, குதிரையின் மென்முடியால் நெய்யப்பட்ட ஆடம்பரமான, மெத்தையின் பெயர் ''விவிடஸ் '' என்பதாகும், இதன் விலை கிட்டத்தட்ட 12லட்சம் ரூபாய்கள். ஒருவேளை நாம் இதில் படுத்து நாள் முழுவதும் ஓய்வெடுத்தால் கூட நமது அன்னமய கோசம், எனும் நம் உடல் ஒரு சமநிலையின்மையை அடையும்.
ஆக இந்த உடல் அடையக்கூடிய சமநிலையின்மையை நீக்க வெறும் ஒய்வு என்பது போதாது அதையும் தாண்டி வேறு ஒன்று தேவையாகிறது.
யோகமரபை பொறுத்தவரை இந்த சமநிலையின்மையை நீங்குவதையே முதல் குறிக்கோளாக கொண்டு, சில பயிற்சிகளை ஏற்படுத்தி வைத்துள்ளனர், சில என்பது ஆரம்பகால நூல்களில் 84 என்று இருந்தது. இன்று 1500க்கும் மேற்பட்ட பயிற்சிகளாக உருமாறியுள்ளது.
இந்த இடத்தில நமக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். இத்தனை பயிற்சிகளை நான் எப்போது கற்று தேர்வது ?என .
ஆகவே நாம் பதஞ்சலி முனிவரின் சொல்லை கேட்கலாம்.
பதஞ்சலியின் யோக சூத்திரத்தின் படி. 'சுகம் , ஸ்திரம் , ஆசனம்'
அதாவது எந்த நிலையை நீங்கள் இருக்கும் போது சுகமாகவும் , ஸ்திரமாகவும் உணர்கிறீர்களோ அதற்கு பெயர் ஆசனம்.
இதில் ஒரு நுட்பமும் இருக்கிறது உதாரணமாக உங்களால் இரண்டுமணிநேரம் நாற்பது நிமிடங்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் அமரவோ, நிற்கவோ முடிந்தால் உங்களை ஒரு யோகி என நீங்கள் சொல்லிக்கொள்ளலாம்.
பதஞ்சலியின் சொல்லை இத்துடன் இணைத்துத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
அதே நேரத்தில் நவீன அறிவியல் ,உடலியங்கியல், போன்ற துறைகளின் கருத்துக்களையும் நாம் முக்கியமாக கருதவேண்டியுள்ளது. ஒரு ஆரோக்கியமான உடல் என்பதற்கு நவீன அறிவியல் பல்வேறு அளவீடுகளை வைத்துள்ளனர். அவற்றை அடைவதன் மூலமாகவும் நாம் ஒரு யோகியின் உடலை அடைந்து விடலாம். அவற்றில் முதன்மையானது
வளைந்து நெளியும் தன்மை {FLEXIBILITY}
திடம் { STRENTH }
சமநிலை {SENSE OF BALANCE }
சுறுசுறுப்பு { AGILITY }
சீரான உடற்கட்டுமானம் { STRECTURAL ALIGNMENT}
இப்படி பல்வேறு அளவீடுகள் இருந்தாலும் மேலே சொல்லப்பட்டவை தான் அடிப்படை அந்த அடிப்படையை அடைய , உற்ற துணையாக உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருவி தான் ஹடயோகம் என்பது.
ஒரு ஹடயோகியின் உடல் என்பது உன்னதமான ஒன்று அது தன்னை உயர்நிலை ஆற்றலில் வைத்துக்கொள்வதுடன், சுற்றியிருக்கும் ஓவ்வொரு உயிரையும், ஆற்றல் மையமாக தூண்டக்கூடியது.
நீங்கள் சரியான பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்யத்தொடங்கிய சிறிது காலத்தில் , அதாவது 3 மாதங்கள் முதல் ஒரு வருடத்தில், உங்கள் உடலின் விஷத்தன்மையை, சமநிலையின்மையை, சோர்வை, சலிப்பை , கடந்து விடுவீர்கள்.
இது ஹடயோகியாக நீங்கள் மாறுவதற்கான முதல் தகுதி.
சரி இதை எங்கிருந்து துவங்குவது ?
நாம் சதாசர்வ காலமும் உடலே பிரதானம் என திளைத்துக்கொண்டு அல்லது நினைத்துக்கொண்டு இருப்பதால் , அதற்கான பயிற்சிகளை உடலிலிருந்தே தொடங்கலாம். அப்படி உடலை மையமாக வைத்து இயக்கக்கூடிய பயிற்சியாலேயே யோகமரபு ஆசனங்கள் என்று வகைமை படுத்துகிறது.
ஒருவர் வெறும் 12 ஆசனங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த உடலின் அனைத்து சாத்தியங்களையும் அடைந்துவிடமுடியும்.
எனினும் அவற்றை தேர்ந்தெடுப்பதில் தான் சவாலே இருக்கிறது. 1500க்கும் மேற்பட்ட பயிற்சிகள் இருந்தாலும் , உங்கள் உடலுக்கான பயிற்சி எது என்பதை ஒரு நல்லாசிரியரின் துணையுடன் தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.