Wednesday, April 3, 2024

YOGA- 4

 

துக்க காரணம்- மோட்ச சாதனம்- மனம்

 

கிரேக்க தொன்மத்தில் முதல் பெண்மணியான பண்டோரா என்பவளுக்கு கடவுளர்கள் அனைவரும் பரிசுப்பொருட்களை அளிக்கின்றனர், அதில் ஒரு பெட்டியை எக்காரணத்தை கொண்டும் திறக்கக்கூடாது என சொல்லப்படுகிறது. ஆனால் அவள் ஆர்வமிகுதியால் திறந்து பார்க்க அடைத்து வைக்கப்பட்டிருந்த  அத்தனை தீமைகளும், வெளியேறி உலகில் பரவிவிட்டது என்று ஒரு தொன்மக்கதை உண்டு.

இதை அப்படியே நமது மனம் எனும் கருவிக்கும் போட்டு பார்க்கலாம்.

நம் ஒவ்வொருவருடைய பண்டோரா பாக்ஸையும் திறந்து பார்த்தால், என்னவெல்லாம் வெளிவரும் என நாம் அறிவோம் . நவீன உளவியல், ஒரு மனிதருக்கு ஒரு நாளில் மட்டும் ஆறாயிரம் எண்ணங்கள் முதல் நாற்பதாயிரம் எண்ணங்கள் வருவதாக கணிக்கிறது. இவ்வளவு எண்ணங்கள் வந்து செல்லும் நாம் எப்படி சாந்தமான அமைதியான ஒரு மனிதராக இருந்துவிட முடியும்.

 

 

 

 

ஆக மனம் எனும் ஒரு மாபெரும் வலைப்பின்னலில் ஏதேனும் ஒரு கண்ணியில் சிறு அதிர்வு நிகழ்ந்தால் கூட மொத்த வலையும் பதட்டத்துடன் துடிதுடிப்பது போல தான் நம் மனம் சதா பரபரத்துக்கொண்டே இருக்கிறது.

 

நமது மரபில் சொல்லப்படும்   மூன்றாவது தளமான மனோமய கோசம் என்பது இந்த இடம் தான். எனினும் குறிப்பிட்டு சொல்லப்படும் ஒரு உடலுறுப்பு அல்ல.

இந்த மனம் எனும் கருவி எதோ தனித்து இயங்ககூடியதல்ல, அது உடலிலிருந்தும் , பிராணனிலிருந்தும் ஆற்றல் முழுவதையும் உறிஞ்சி    செலவு செய்தவண்ணம் இருக்கும் ஒரு கருவி  ஆகவே  நவீன மருத்துவம் மனதால் உடலில் உருவாகும் நோய்கள் என ஒரு நீண்ட பட்டியலை சொல்கிறது இதை 'சைக்கோ சோமாடிக் டிசீஸ்' என வகைமை படுத்துகிறது. 

இன்று நாம் அடிக்கடி கேள்விப்படும் முதல் பத்து நோய்களில் கிட்டத்தட்ட ஏழு நோய்கள் இந்த வகைமையை சேர்ந்தவை.

உதாரணமாக,  தந்தைக்கு சர்க்கரை நோய் இல்லாத நிலையில், மகனுக்கு வருவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருக்கிறது. அதற்கு மகனின் வாழ்க்கைமுறை மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணிகளை சொல்லலாம்.  எனவே சர்க்கரை நோய் என்பது பரம்பரை நோய் அல்ல மாறாக வாழ்க்கை மற்றும் மனம் சார்ந்த நோய்.

சிலர் ' நானெல்லாம் படுத்தா பத்துமணி நேரம் , பதினைந்து மணிநேரம் நல்லா தூங்குவேன் சார் ' என்று பெருமையாக

 சொல்வதை கவனிக்கலாம் அதேபோல சிலர் தொடர்ந்து எதையேனும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதை கவனிக்கலாம், இப்படியாக  தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம், உடல் பருமன்  போன்ற நிலைகளை மனநோய் என்றே உளவியல் சொல்கிறது.

நவீன உளவியலும் , நமது யோக மரபும் சொல்லக்கூடியது, நம் மனம் நமக்கு தெரிந்த மேலடுக்கு மனம் மட்டுமல்ல நம்மால் புரிந்து கொள்ளவே முடியாத பல்வேறு அடுக்குகள் கொண்டது. அதனாலேயே நம்மால் எதையெல்லாம் மனதில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் , எதையெல்லாம் வெளியேற்றி விடவேண்டும் என்கிற தெளிவு இல்லை. பத்து வருடத்திற்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட நாளில் நாம் ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்காக அவமானம் ஒன்றை அடைந்திருப்போம், அது இன்னும் மனதின் ஆழத்தில் ஒரு புண்ணாக ஆறாமல் இருக்கிறது, அதே வருடத்தில் மிக இனிமையான நாட்கள் சில கடந்து சென்றிருக்கும் அவற்றை நம்மால் நினைவில் மீட்ட முடிவதில்லை. இவ்வாறாகவே கோபம் , குரோதம் போன்ற எதிர்மறை பண்புகளை எப்படி கையாள்வது என்கிற நுட்பம் தெரியாத போது , நாம் நமக்கு தெரியாமலே இந்த உடலை ஏதோ வகையில் சிறிது சிறிதாக  அழித்துக்கொள்கிறோம்.

உதாரணமாக ஒருவருக்கு மரண பயமோ, நோய் வந்துவிடுமோ என்கிற பயமோ வந்துவிட்டால் அவரால் நிம்மதியாக தூங்க முடியாது. அந்த தூக்கமின்மை அவரை நோய் நோக்கி அழைத்துச்செல்லும். இதை சரிசெய்ய மருந்து மாத்திரைகள் மட்டும் தான் உதவும் என்று சொல்வதற்கில்லை.

மிகச்சரியாக தேர்ந்தெடுக்கப்படும் தியான பயிற்சி அல்லது ஒய்வு தரும் பயிற்சியால் வெறும் மூன்று மாதத்தில்  மேற்சொன்ன பிரச்சனைகளில் இருந்து முற்றிலுமாக வெளிவந்து விடமுடியும்.

யோகநித்ரா போன்ற பயிற்சிகள் மனோமய கோசத்தின் அனைத்து அடுக்குகளையும் சீர் செய்து சமநிலையை கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

அதற்காக நவீன மருத்துவம் சொல்லக்கூடிய மருந்து மாத்திரைகளை கைவிட்டு விட்டு இதை தொடங்கவேண்டிய அவசியமில்லை. இது போன்ற பயிற்சிகளில் ஒருவர் காட்டும் ஆர்வமும் தொடர் முயற்சியும் குறுகிய காலத்தில் நல்ல பலனை தரும். அதன் பின்னர் மருந்து மாத்திரைகளை நிறுத்திக்கொள்ளலாம்.

 

எனினும் மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக ஒரு தியான முறையை தேர்ந்தெடுக்கும் பொழுது சற்று கவனமாக நமக்கான சரியான பயிற்சியாக தேர்ந்தெடுத்தல் மிகவும் முக்கியம். ஏனெனில் சில தியான பயிற்சிகள் நேரடியாக மனதை மேலும் கொந்தளிப்பு மிக்க மனதாகவோ, பக்கவிளைவுகளை தரக்கூடியதாகவோ அமைந்து விடும். ஆகவே யோகமரபு  ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், என முறையே உடல் , ஆற்றல் ,மனம் என்று ஒரு படிநிலையை பரிந்துரை செய்கிறது.

ஏனெனில் மனமே நமது துக்கத்திற்கு காரணமாகவும் , துக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான சாதனமாகவும் இருக்கிறது .

 

நீங்கள் தியானம் போன்ற ஒன்றை தேர்ந்தெடுக்கும் பொழுது இந்த படிநிலையை கவனத்தில் கொள்வது மேலும் பலனளிக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Featured Post

Maleysia yoga retreat

 Malaysia yoga retreat https://www.jeyamohan.in/199529/