Friday, April 5, 2024

YOGA-5

 


உள்ளே உறையும் உயர் அறிவை மீட்டெடுத்தல்.

 

 

இந்த பகுதியில் நாம், மனோமய கோசத்திற்கு அடுத்த தளமான, உயர் அறிவின் உறைவிடம் என்று சொல்லப்படும் விஞ்ஞான மய கோசம் பற்றி பார்க்கலாம்.

நாம் ஏற்கனவே சொன்னது போல , இந்த ஐந்து தளங்களும் ஒன்றைவிட ஒன்று சூட்சுமமாக இருக்கிறது, உடலை விட மூச்சு இன்னும் ஆழத்தில் இருக்கிறது, மூச்சை விட மனம் இன்னும் ஆழம் கொண்டது, இந்த மனமும் ஆழத்தில் தன் சம நிலையை அடையும் பொழுது உயர் மனம் சிறிது விழிப்படையும் பொழுது ஏற்படும் நிலையை நாம் உள்ளுணர்வின் தளம் என கொள்ளலாம் . இந்த உள்ளுணர்வே உயர் அறிவாக விஞ்ஞான மய கோசமாக மரபு வகை படுத்துகிறது.

உதாரணமாக நம்முடைய மனதை வைத்து நம் வாழ்வை ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே அறிய முடிகிறது. இந்த மேல் மனதையும் , மேலோட்டமான புத்தியையும் வைத்து நாளை அல்லது வருங்காலம் சார்ந்து சில திட்டங்களை வகுக்கலாம். அது சார்ந்து குழப்பங்கள் , முடிவுகள் , சந்தேகங்கள் , என பலவாறாக நினைத்து பார்க்கிறோம். ஆனால் இந்த உள்ளுணர்வு எனும் உயர்மட்ட அறிவு நமக்கு எப்போதாவது ஒரு முறை நிகழ்கிறது. அந்த ஒரு கணத்தில் நம்மால் இன்னும் தெளிவாக நம் வாழ்வு பற்றியோ , வருங்காலம் பற்றியோ துல்லியமான காட்சி ஒன்று கிடைத்து விடுகிறது.

அப்படி  ஒரு காட்சியை அகத்தில் கண்டு விட்ட பின் நீங்கள் தவறான ஒரு செயலை அல்லது  தோல்வி அடையக்கூடிய ஒரு திட்டதை செயல்படுத்த மாட்டீர்கள் , ஏனெனில் விஞ்ஞான மய கோசத்தில் உச்சபட்ச அறிவுநிலை முதன்மையாக இருந்து உங்களுக்கு வழி காட்டுகிறது. அப்படியான தீர்க்க தரிசனங்கள் பெரும்பாலும் பொய்ப்பதே இல்லை எனலாம். எனினும் இந்த உள்ளுணர்வின் தளம்  நமது மொத்த வாழ்நாளில் மிகச்சிறிய அளவிலேயே நிகழ்கிறது. அல்லது இப்படி விழிப்படைந்த உயர் அறிவின் தளத்தை நம்மால் நீண்ட நேரத்திற்கு தக்கவைத்துக்கொள்ளும் தகுதியோ , ஆற்றலோ நம்மில் இல்லை.

 ஏனெனில் பெரும்பாலும் மேல்மனம் அடையும் பரபரப்பில் இந்த உயர்மனம் மறைந்து கொள்கிறது.

நமது கனவு நிலையை இந்த கோசத்திற்கு நிகராக சொல்லலாம் , நமது கட்டுப்பாட்டில் இல்லை எனினும் நமக்கு சிலவற்றை கனவுகள் உணர்த்துகிறது, அதை சரியாக உள்வாங்கிக்கொள்ள நமக்கு முடியாமல் போகலாம். ஆனால் நவீன உளவியல் ஆராய்ச்சியாளர்கள் வரை சொல்வது அதைத்தான்.

உதாரணமாக நமது குலதெய்வங்களை பற்றி நமக்கு தகவல் இல்லையெனில், நமது சொந்த ஊரின் மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து வந்து துணியில் கட்டி வாசலில் தொங்கவிட , ஒரு மாத காலத்திற்குள் நமது கனவில் நம் குலதெய்வம் தன்னை வெளிப்படுத்தும் என்பது ஒரு நம்பிக்கை.

 

சில சமயங்களில் நம் வீட்டின் பெரியவர்களுக்கு சன்னதம் அல்லது அருள் வந்து அவர்கள் வேறு ஒரு தளத்தில் நின்று சிறிது நிமிடம் பேசுவார்கள்.

 

அங்கே நமது மேல்மனம் , புத்தி , அனைத்தும் உயர்வான அல்லது இந்த பிரபஞ்ச இயக்க சக்தியுடன் இணைத்து கொண்டு சிலவற்றை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

அப்படியெனில்  உயர் தளத்தை தூண்டக்கூடிய ஆற்றல் எது ? இதை இயக்கும் எரிபொருள் எங்கிருக்கிறது ? இந்த போன்ற வினாக்களுக்கு நமது யோக   மரபில் சில பதில்கள் கிடைக்கிறது. அதாவது மேல்மனம் அடங்கும் பொழுது அதற்கு நாம் செலவிட்ட ஆற்றல் அனைத்தும் இந்த விஞ்ஞான மயன் நோக்கி செலுத்தப்படுகிறது. அப்படி செலுத்தப்பட்ட பிராணனே இங்கே எரிபொருளாகிறது.

பிராணன் என்பது மூச்சு என்று ஒரு தவறான கருத்து இங்கே உள்ளது, அதுவல்ல.

ஆக , விஞ்ஞான மயனை விழிப்படைய செய்ய ஒரு குறிப்பிட்ட அளவில் தியான நிலை அமைய வேண்டி இருக்கிறது. பிராணன் இல்லாத உடலால்  நல்ல தியான அனுபவத்தை தக்கவைத்துக்கொள்ள முடிவதில்லை.  ஆகவே யோகமரபு உடலிலிருந்து தொடங்குங்கள் என்று ஆணையிடுகிறது. அன்னமயத்தில் ஏற்படும் சமநிலை, பிராண மயனால் செறிவூட்டப்பட்ட உள்ளத்தில் திகழ்ந்து, தியான அனுபவத்தை கூர்கொள்ளச் செய்கிறது. அப்படி கூர் கொண்ட மனம், ஆழம் நோக்கி சென்று  விஞ்ஞான மயம் எனும் உயர் அறிவை , உள்ளுணர்வை தூண்டுகிறது. அங்கே கனவு நிலையென காட்சிகளும் , காலத்தை முன்னோக்கி பார்க்கவல்ல இயல்பும் , மனத்தெளிவும் உறைகிறது.

நமது முனிவர்களும் ரிஷிகளும் கவிகளும் திரிகால சஞ்சாரிகள் என்று நாம் சொல்வது இந்த கோசத்தில் அவர்கள் தொடர்ந்து இருந்ததால் தான். ஆகவே அவர்களால் காலத்தை முன்னோக்கி தரிசித்து வருங்காலத்தை நோக்கி பேச முடிகிறது.

யோக பயிற்சிகளில் சில இன்றைய நோய்களுக்கு தீர்வாக அமைவதுண்டு, உதாரணமாக, ஆர்த்தரைடீஸ் எனப்படும் மூட்டுவலி,இதற்கு ஜானு சக்ராசனம் என்று ஒரு பயிற்சி யோகத்தில் உண்டு  இந்த பயிற்சி கிட்டத்தட்ட  நானூறு ஐந்நூறு வருடங்களுக்கு முன்னர் கண்டு சொல்லப்பட்ட பயிற்சியாக இருக்கலாம், அந்த கால கட்டத்தில் அவர்களுக்கு மூட்டு வலி இருந்திருக்க வாய்ப்பே இல்லை . பிறகு ஏன் இந்த பயிற்சி ? அவர்களுக்கு ''தெரிந்திருக்கிறது ' இன்னும் ஐநூறு வருடம் கழித்து வரப்போகும் மானுடனுக்கு இது உதவலாம் என. இப்படித்தான் மரபு சில பயிற்சியை முன்வைக்கிறது. இது எதிர்காலத்தை பார்க்கத்தெரிந்த வல்லுநர்களால் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம். இப்படி ஒவ்வொரு மரபிலும் உண்டு . அது வல்லமை மிக்க மானுடர்களால் விஞ்ஞான மய கோசத்தின் துணை கொண்டு  ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டம். ஆக, முதல் மூன்று தளத்திலும் நம்மை சூழ்ந்திருக்கும் எல்லைகளையும் , போதாமைகளையும் சரியாக கையாள்வதன் மூலம் நான்காவது தளத்திற்கு அடிக்கடி ‘’வந்துசெல்லும்’’ அரிய வாய்ப்பை பெறுகிறோம். விஞ்ஞான மய கோசத்திற்கு வந்து செல்வதென்பது நமது வாழ்விற்கான உயர் கேள்விகளுக்கான விடையாக, நமது அடிப்படை கீழ்மைகளிலிருந்து மேலெழ வாய்ப்பாக , நம்மை சூழ்ந்திருக்கும் அனைத்திற்கும் ஏதேனும் வகையில் நன்மை ஒன்றை வழங்குவதற்கு, இது அனைத்தையும் தாண்டி , அடுத்த தளமான ஆனந்தமய கோசத்திற்கான வாசலாக அமைகிறது.


 

 


Featured Post

Maleysia yoga retreat

 Malaysia yoga retreat https://www.jeyamohan.in/199529/