Monday, May 6, 2024

YOGA -8

 

அச்சத்திலிருந்து  ஆனந்தத்திற்கான வழித்தடம்

 

 

இந்திய மரபில் ஒரு விசயத்தை புரியவைக்க அதன் உள்ளுறையும் கருத்தை தெளிவாக்கிக்கொள்ள , அந்த விசயத்தை  மூன்று ஐந்து ஏழு ஒன்பது என்று பிரித்துக்கொண்டு தனித்தனியாக விளக்கி, பின்னர் ஒருமுனையில் அனைத்தையும் இணைத்து ஒரு முழுமையான திரண்ட கருத்தை சொல்வது இங்கே நெடுங்காலமாக உள்ள கல்விமுறை.

உதாரணமாக, முக்குணங்கள் ,ஐம்பெரும் பூதங்கள்ஏழு ஸ்வரங்கள், ஒன்பது கோள்கள். என ஒரு நீண்ட வரிசை உள்ளது போல, யோக மரபில் பிராணன் எனப்படும் இந்த பிரபஞ்ச இயக்க ஆற்றலை, மனிதனுக்குள் நிகழ்கையில் ஐந்தாக பகுக்கின்றனர்.  அது ' பஞ்ச பிராணன் ' எனப்படுகிறது

இந்த ஐந்து இயக்க சக்திகளும் மனிதனுள் தனக்கான இடத்தையும், செய்ய வேண்டிய செயலையும், அளவுகளையும் ,கொண்டுள்ளன.  அவை மாறும் பொழுது, அந்த மனிதனுக்கு உடல் சார்ந்த நோய் , மனநோய் , உளவியல் சிக்கல் , உணர்ச்சி தடுமாற்றம் என நான்கு அல்லது ஐந்து அடுக்குகளில் உபாதைகளை அனுபவிக்க நேருகிறது.

இந்த பஞ்ச பிராணனின் இருப்பை அறிந்த ஒருவர் , அதை சரியாக நிர்வகிக்க முடிந்த ஒருவர் , ஆற்றும் செயல்கள் அனைத்தும், மேன்மை கொண்டதாக , உயர் தளம் சார்ந்ததாக சமநிலை கொண்ட உடலியக்கமாக, என பல்வேறு தளங்களில் மிளிர முடிகிறது

அதில் முதன்மையானது

அபானன் எனும் முதலாற்றல் , இது மனித உடலில் தொப்புள் பகுதி முதல் பிறப்புறுப்பு மற்றும் ஆசனப்பகுதி வரை உறைகிறது, இது உடலின் கழிவுகளை வெளியேற்றும் சக்தியாக, ஆண் உடலில் விந்தணுவில் உயிராக , பெண்ணுடலில் உயிரை தரிக்க உதவும் கருமுட்டையாக, மனிதர்களில் இச்சையாக , பயமாக , காமமாக , நுகர்வின் இன்பமாக என பல்வேறு உடல் மற்றும் உள இயக்கங்களுக்கு ஆதாரமாக செயல் படுகிறது , இந்த அபானன் கூடும் பொழுது ஒருவித உபாதையையும் ,குறையும் பொழுது  அவஸ்தையையும் நாம் அனைவரும் அடைகிறோம். யோக மரபும் தன் பயிற்சிகளில் முதலில் ஒருவருக்கு வழங்குவது, இந்த அபானனை சமன்செய்யக்கூடிய பயிற்சிகள் தான், இதை ஒருவர் சரிசெய்து விட்டாலே ,பாதிக்கும் மேற்பட்ட பிரச்சனைகள் ஓரளவு சரியாகி விடுகிறது. ஆரோக்கியத்தின் திறவுகோல் என்று இந்த பகுதியை சுவாமி சத்யானந்தர் குறிப்பிடுகிறார்.

அடுத்த ஆற்றல் சமானன் , இது தொப்புள் பகுதியில் தொடங்கி மேல்வயிறு நெஞ்சுக்கூடு வரை திகழ்கிறது, நாம் உட்க்கொள்ளும் உணவை அரைத்தல் , உணவிலிருக்கும் போஷாக்கை உறிஞ்சி குறிப்பிட்ட உடல் உறுப்புகளுக்கு அனுப்புதல் , கழிவுப்பொருள் அல்லது சக்கைகளை மலக்குடல் நோக்கி தள்ளுதல், என சமானன் நாம் உயிரோட்டத்துடன் இயங்க முக்கியமான ஆற்றலாக விளங்குகிறது. அதீதமான கோபம் , உணர்ச்சி கொந்தளிப்பு , சந்தோசம், தலைமை பண்பு ,அல்லது ஆளுமைத்திறன் என நம் பல்வேறு குணநலன்களில் நேரடியாகவும் , மறைமுகமாகவும் தாக்கத்தை செலுத்துகிறது.

மூன்றாவது ஆற்றல்  ''பிராணன் ' எனப்படுகிறது இது நமது இதயம் மற்றும் கழுத்துப்பகுதியில் உறைகிறது , இதுவே உயிரின் ஆதாரம் இந்த ஆற்றல் நின்றுவிடுமெனில் உயிர் பிரிந்து விடுகிறது அதாவது இதயம், மற்றும் நுரையீரலின் இயக்க ஆற்றலாக இது விளங்குகிறது, இந்த பிராணனில் ஏற்படும் சமநிலையின்மை , இதயநோயாக ,மூச்சுக்கோளாராக , இரத்த அழுத்தமாக என பல்வேறு நோய்காரணிகளுக்கு வழிவகுக்கிறது. இதே பிராணன் தான், அதீதமான வெறுப்பு ,அதீதமான பற்று, ஒரு குறிப்பிட்ட மனநிலையிலிருந்து விடுபட முடியாமை, போன்ற எதிர்மறை சிந்தனைக்கும்   மற்றும் சிலநேரங்களில் அன்பு, வாஞ்சை , மகிழ்ச்சி என்கிற நேர்மறை எண்ணங்களுக்கும் அடிப்படையாக அமைகிறது.

நான்காவதாக, கழுத்துப்பகுதிக்கு மேல் உச்சந்தலை வரை உறையும் ஆற்றல் ' உதானன் ''

உடலின் ஒவ்வொரு உறுப்பும் நமது தலைமை செயலகமான மூளையுடன் தான் பிணைக்கப்பட்டுள்ளது, கை சுண்டுவிரலின் சிறு அசைவிற்கும் கடினமான ஒன்றை ஜீரணம் செய்வதற்கும் ,ஓடிச்சென்று பேருந்தை பிடிப்பதற்கும் , மூளையிலிருந்து தான் சமிக்ஞை வரவேண்டியுள்ளது. அப்படியான இந்த தலைமை உறுப்பு இயங்குவதற்கு இயக்க சக்தியாக உதானன் விளங்குகிறது, இந்த உதானன் மிகும்பொழுது நரம்பியல் சார்ந்த பிரச்சனைகளும், குறையும் பொழுது உடலியக்கத்தில் குறைபாடுகளும் உருவாகிறது , ஒருவருடைய புத்திகூர்மை , அறிவு, புரிந்துகொள்ளும் ஆற்றல் புரிந்தவற்றை சரியாக தொகுத்துக்கொள்ளும் வல்லமை ,என அனைத்து உன்னத செயல்பாடுகளும் உதானனால் நிகழ்கிறது , இந்த ஆற்றலில் தேக்கமும் , குறைபாடும் வரும்பொழுது மறதி, எதிர்மறை எண்ணங்களை திரும்பத்திரும்ப எண்ணிக்கொள்ளுதல் , சரியாக ஒன்றை திட்டமிட்டு நடத்த முடியாமை , எடுத்த காரியங்களை பாதியில் விட்டுவிடுதல் என பல தவறான விஷயங்கள் நிகழ்ந்து விடுகிறது.

ஐந்தாவதாக நம் உடல் முழுவதும் வியாபித்துள்ள ஒன்று அதற்கு ''வியானன் ' என்று பெயர் . மூளை ஒருவிசயத்தை சமிக்ஞையாக அனுப்பினால் மட்டும் போதாது அதை நிகழ்த்திக்காட்ட , ஒரு ஆற்றல் தேவையாகிறது அந்த அந்த எந்த நேரத்திலும் விழிப்புடன் கட்டளைக்காக காத்துக்கொண்டிருக்கும் , ஒரு தேர்ந்த போர்வீரன் போல செயல்பட வேண்டும் அப்படியான ஒன்று தான் வியானன், நம் உடலின் ஒவ்வொரு இயக்கத்திற்கும் உறுதுணையாக அசைவாக ,அசைவின்மையாக , இலகுவாக,கனமாக என தொடர்ந்து செயல்பட்டுக்கொன்டே இருக்கும் ஆற்றல் இது , உதாரணமாக நீங்கள் உங்கள் அருகே இருக்கும் தண்ணீர் பாட்டிலை கையால் எடுத்து வாயருகே சரித்து குடிக்க, ஒரு குறிப்பிட்ட அளவு ஆற்றலை உங்கள் கை நிகழ்த்துகிறது, அதே கை  ஒரு இருபது கிலோ எடையுள்ள ஒரு பொருளை தூக்கி நகர்த்தி வைக்க வேறு மாதிரியான ஆற்றலை செலவு செய்கிறது. இந்த நுட்பத்தை மூளை கணக்கிட்டாலும், நிகழ்த்துவது வியானன் தான், ஆகவே இது இயக்கத்தின்  'உற்ற துணைவன் 'என்று சொல்லப்படுகிறது. மனம் சொல்வதை உடல் நிகழ்த்த முடியாமல் போகும் தடுமாற்றத்திற்கு,வியானனில் ஏற்படும் சமநிலையின்மையே காரணமாகிறது.

 

 

மூச்சுடன் இணைந்து செய்யக்கூடிய மரபார்ந்த பயிற்சிகள் மட்டுமே, இதுபோன்ற நுண்மையான விஷயங்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை நேரடியாக பஞ்ச பிராணனின் சமநிலையை ஏற்படுத்தி, ஒரு வருடத்திற்குள் நமது ஆளுமையில் ,ஆரோக்யத்தில் ,நடத்தையில் மாபெரும் மாற்றங்களை செய்கிறது. அந்த மாற்றம் நம்மை அச்சத்திலிருந்து ஆனந்தம் நோக்கி அழைத்துச்செல்கிறது


Featured Post

The Master Christian - A NOVEL by Marie Corelli

 - குயவன் கையில் களிமண்ணாய்...... தமிழில் சுபஸ்ரீ  ---------------------------------------------------- மெய்யியல், தத்துவம் ஆன்மீகம், மற்றும...