Thursday, June 6, 2024

YOGA -13

 

மூன்றடுக்கும் , தாங்கும் திறனும்.

 

ஒரு மாபெரும் கட்டிடம் அமைக்கப்பட்டு நீண்ட நாட்கள் உறுதியுடன் இருப்பதற்கு அடிப்படை காரணமென்பது , அந்த மண், அதில் செய்யப்பட்ட மண் பரிசோதனை,  இந்தியாவின் அத்தனை நகரங்களிலும் குறுக்கும் நெடுக்குமாக குழிதோண்டி போட்டு, மெட்ரோ ரயில் திட்ட வேலை நடைபெறுவதை நாம் பார்க்கிறோம், பெரும்பாலும் அதீத சப்தத்துடன் அங்கு வேலை நடைபெருகிறது. அந்த சப்தம், 'மண் பரிசோதனையின் ' ஒரு அங்கம் , அந்த பரிசோதனையின் போது, மூன்று கட்டங்களாக நடைபெறுவது வழக்கம் ,  முதலில் பூமியை குடைந்து குடைந்து அதன் இறுக்கத்தை, கெட்டியான தன்மையை சோதிப்பது , அடுத்ததாக எடைமிக்க சதுர பாறைகளை ஒரே இடத்தில் குறிப்பிட்ட நாட்கள் வரை அடுக்கி வைத்து, மண்ணின் ‘’எடை தாங்கும்’’ திறனை சோதிப்பது , மூன்றாவதாக, அதன் நெகிழ்வு தன்மையை சோதித்தறிவது என மிகமுக்கியமான பணி அது. மெட்ரோ ரயில் திட்டம் உலகம் முழுவதும் வெற்றிகரமான ஒன்றாக செயல்பட்டுக்கொண்டிருப்பதற்கு இது முதன்மை காரணம்.

அதுபோல நம் அன்றாடத்தில் மூன்று தளங்களில்  முக்கிய சோதனைகளை நாம் செய்து பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.  

டென்ஷன், மனச்சோர்வு , பதற்றம் என்பதையெல்லாம் நாம் எதோ மனம் சம்பத்தப்பட்ட விஷயமாக நினைத்துவிடுகிறோம். ஆனால் , யோகமரபில் இவையனைத்தும் மூன்று படிநிலைகளில் நிகழ்வதாக சொல்லப்படுகிறது , சுவாமி சத்யானந்த சரஸ்வதி அவர்கள் , இதை பற்றி மிக விரிவாக பேசியிருக்கிறார், 'த்ரய-தனாவ் '' என்கிறார் , மூன்றடுக்கு பதட்டம் என பொருள்.

முதல் அடுக்கு  மஸ்குலர் டென்ஷன் எனப்படும் . உடல் சார் இறுக்கமும் பதட்டமும். இரண்டாவது அடுக்கு மெண்டல் டென்ஷன் எனப்படும்  மனம் சார் பதட்டம் , மூன்றாவது அடுக்கு  எமோஷனல் டென்ஷன் எனப்படும்  உணர்ச்சி சார் பதட்டம்.  

முதல் அடுக்கான மஸ்குலர் டென்ஷன்  என்பது ஒவ்வொரு அரைமணிக்கு ஒருமுறை நம் உடல் அடையும் ஒரு குறிப்பிட்ட மாற்றம் அல்லது இறுக்கம், சோர்வு ,பதட்டம் இப்படி ஏதோ ஒன்று,  உதாரணமாக நீங்கள் அரைமணி நேரம், காலை மடித்து உட்கார்ந்திருந்தால், காலுக்கு ரத்த ஓட்டம் குறைந்து மரத்துபோன தன்மை உண்டாகிறது , அல்லது  அரைமணி நேரம் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தால் காலில் ஒரு வலி அல்லது வேதனை உண்டாகிறது, இது அடிப்படையான, மிகவும் இயற்கையான ஒரு நிலை, இதை சரியாக ஓய்வொடுப்பதன் மூலம் அல்லது  நாம் இரவில் நன்றாக தூங்குவதன் மூலம் சரிசெய்து, கொள்ளவும் அடுத்த நாள் தொடர்ந்து இயங்கவும் முடிகிறது. ஆகவே இது பெரிய பாதிப்பை உண்டாக்குவதில்லை,  ஆரோக்யமான உணவும் , நல்லுறக்கமும் , சரியான உடலுழைப்பும்  இருந்தாலே போதும்.

 

இரண்டாவது அடுக்கான , மனசோர்வு அல்லது மன அழுத்தம், { மெண்டல் டென்ஷன் } உடல் சார் அழுத்தத்தை விட  ஆழமாகவும் , நுண்ணியதாகவும் இருப்பதால், அதை சரிசெய்ய , சமநிலைக்கு கொண்டுவர வாழ்வில் பிரத்யேகமாக சிலவற்றை  செய்யவேண்டியுள்ளது .

இந்த வகை அழுத்தம் ஒரு வகையில் நம் உள்ளுறுப்புகளுடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு அதன் மூலம் உடல் மற்றும் உளம் சார்ந்த நோயாக மாறிவிட வாய்ப்புள்ளது. உதாரணமாக  நாம் வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல ஒருமணி நேரம், ஆகுமெனில், அதை நம் மனமும் உடலும் இத்தனை நாட்களாக பழகி இருக்கிறது. இப்படி பழகிய உடலும் மனம் பழக்கத்திற்கு மாறாக ஒன்று நிகழும் பொழுது தடுமாற்றைத்தையும் அழுத்தத்தையும் அடைகிறது . இன்று சாலையில் போக்குவரத்து நெரிசலின் காரணமாக நாம் ஒரு மணி நேரம் தாமதமாக அலுவலகம் செல்ல நேர்ந்தால், அந்த ஒருமணி நேரமும், நம்மை அறியாமலேயே கொந்தளிப்பில் இருப்போம். அதாவது நாம்  பழகி வைத்திருக்கும் பழக்கத்திற்க்கும் நேரில் நிகழ்வதற்கும் இடையே உள்ள இடைவெளி ஏற்படுத்தும் கொந்தளிப்பு . இதைத்தான் மரபில்  ‘’மான்சீக் தனாவ்’’ என்கிறார்கள்  அதாவது மன அழுத்தம் எனும் மெண்டல் டென்ஷன்.

 

மூன்றாவது அடுக்கு எமோஷனல் டென்ஷன் எனப்படும் உணர்ச்சி சார்ந்த பதட்டம் அல்லது அழுத்தம் என்பது நமது உறவுகள் சார்ந்த ஒன்று உதாரணமாக நமக்கு பிடித்தவர்கள் ,பிடிக்காதவர்கள் ,விருப்பு வெறுப்பு என நாம் நம் அகத்தில் ஒரு உலகை உருவாக்கி வைத்துள்ளோம். ஒரு மனைவி தன் கணவர் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார், ஆனால் கணவர் அப்படி நடந்துகொள்ளாத போது இருவருக்கும் ஒருவித உணர்ச்சி கொந்தளிப்பு ஏற்படுகிறது, இப்படி நண்பர்கள்,குழந்தைகள், உறவுகள் என நம்மை சுற்றி குறைந்தது பத்து பேராவது அணுக்கமாக இருக்கிறார்கள் அவர்கள் மூலமாக நமக்கு வந்துசேரும்  அழுத்தம் தான் இந்த மூன்றாவது டென்ஷன்.

இந்த மூவகை அழுத்தத்தையும் நாம் ஒவ்வொரு நாளும் சேர்த்துக்கொண்டே தான் இருக்கிறோம், அப்படி சேமித்த அழுத்தங்களில் உடல் சார்ந்த பதட்டம், பெரிய அளவில் எந்த பாதிப்பையும் செய்வதில்லை ஒவ்வொரு நாளும் நல்ல தூக்கத்தின் மூலம் நாம் அதை சமன் செய்து விடுகிறோம் , ஆனால் மனம் ,மற்றும் உணர்ச்சி நிலைகள் நம்மை விட்டு நீங்குவதற்கு ஆழ்ந்த உறக்கம் தேவைப்படுகிறது, உதாரணமாக நம் தூக்கத்தின் நிலைகள் நான்கு அதில் நான்காவது நிலையான ஆழ்நிலை  தூக்கம் மட்டுமே, மனம் மற்றும் உணர்ச்சி சார்ந்த அழுத்தங்களை நீக்குவதற்கு உதவுகிறது.

ஆழ்ந்த தூக்கம் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரமாவது நீடிக்க வேண்டும் என்கிறது அறிவியல் , எனினும் நமக்கு ஆழ்ந்த தூக்கம் என்பது மிகக்குறைந்த நேரமே நிகழ்கிறது. அப்படி ஆழ்ந்த தூக்கம் நிகழாத போது , நம்முடைய மன ,உணர்ச்சி கொந்தளிப்புகள் முற்றிலுமாக நீக்கப்படாமல் ஒன்றின் மேல் ஒன்றென படிந்து விடுகிறது அப்படி சேர்ந்த அழுத்தங்களை நீக்கவும் பதட்டத்தை போக்கவுமே யோக மரபில் ‘’பிரத்யாகார’’ பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டு மரபார்ந்த குருகுலங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது. இவற்றை முறைப்படி ஒருவர் கற்று முற்றிலும் இறுக்கமற்ற ஓய்வான மனிதராக மாறமுடியும் வெறும் மூன்று மாதங்கள் ஒருவர் இத்தகைய பயிற்சிகளின் மூலம் முழு பலனை அடையமுடியும்.

Featured Post

The Master Christian - A NOVEL by Marie Corelli

 - குயவன் கையில் களிமண்ணாய்...... தமிழில் சுபஸ்ரீ  ---------------------------------------------------- மெய்யியல், தத்துவம் ஆன்மீகம், மற்றும...