Tuesday, May 7, 2024

YOGA -9

 

மேன்மைகள்  யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்.

 

இந்திய அறிதல் முறைகள் அனைத்தும், மற்ற மரபுகளுடன் உரையாடி அவற்றிலிருந்து தனக்கான நன்மை பயக்கக்கூடிய ஒன்றை, உள்ளிழுத்து மேலும் பெருகி வளரும் தன்மை கொண்டவை,

உதாரணமாக ஒரு தேர்ந்த ஆயுர்வேத ஆசான் அல்லது மருத்துவர் இன்றைய அறிவியலின் அளவுகோல்கள் அனைத்தையும் சேர்த்து கணக்கில் கொண்டு தான் மரபார்ந்த மருத்துவ முறையை தேர்ந்தெடுப்பார்.  ‘’எம்.ஆர் ஸ்கேன்’’ { MRI-SCAN}  செய்து பார்த்து முதுகு தண்டில்  இருக்கும் அமைப்பை /பிரச்சனையை அறிந்து கொண்டு,  ஒரு தைலமோ , மூலிகை சார்ந்த கஷாயமோ,லேகியமோ கொடுப்பதில் அவருக்கு எந்த தயக்கமும் இருக்காது. இதுவே நன்மை பயக்கும் கருவிகளை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் இந்திய ''உள்ளிழுத்துக்கொள்ளும் ' முறை.

 

யோக மரபும், வேதகாலம் முதல் இன்று வரை அறிஞர்களால் , இத்துறையின் வல்லுநர்களால் இப்படித்தான் பயணித்து வந்திருக்கிறது. இந்த நீண்ட பயணத்தின் காரணமாகவே யோகமரபு  யோகம் என்பதை வெறும் ஆசனங்கள் என்றோ ,தியானமுறை என்றோ ,மூச்சு பயிற்சி என்றோ ஒரு எல்லை வகுத்து வைக்காமல், அதன் துணை மரபுகளான ஆயுர்வேதம் மற்றும் தாந்த்ரீக பயிற்சிகளையும் தேவையான இடங்களில் இணைத்துக்கொள்கிறது.   ஒரு மரபார்ந்த யோகக்கல்வி நிலை அல்லது ஆசிரியர், கற்றுக்கொள்ள வருபவர்களுக்கான பயிற்சிகளை வடிவமைக்கையில் முதலில் அவருடைய வாத பித்த கபம் என்கிற முக்குணங்களை கருத்தில் கொண்டு உடல் சார் பிணிகளை நீக்கும் பயிற்சிகளை வழங்குகிறது  இந்த கருதுகோள் ஆயுர்வேத மரபின் அடிப்படைகளில் முதன்மையானது ஆயுர்வேதத்தின் அனைத்து சிகிச்சை முறைகளும் ‘வாத- பித்த- கப’ அடிப்படைகளில் தான் அமைந்துள்ளது.

ஆக ,வாதம் எனும் வாயுவின் தன்மை சமநிலையில் இல்லாத ஒருவருக்கு, வாதத்தை தூண்டக்கூடிய அல்லது குறைக்கக்கூடிய பயிற்சிகளை நேரடியாக வழங்காமல் , மற்ற இரு தோஷங்களான பித்தம், கபம் எனும் நிலைகளையும் கருத்தில் கொண்டே பயிற்சியை வடிவமைக்க வேண்டியுள்ளது , ஏனெனில் நாம் ஏற்கனவே சொன்னது போல.  சரியாக தேர்ந்தெடுக்கப்படாத யோக பயிற்சி நிச்சயமாக பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவல்லது.

இப்படியாக ஆயுர்வேத மரபிலிருந்து உணவு பழக்கவழக்கம் , தினசரி செய்யக்கூடிய ஆரோக்ய செயல்பாடுகள் , மற்றும் தவிர்க்க வேண்டியவை, போன்ற பல கருத்துக்களை பல நூற்றாண்டுகளாகவே, யோகமரபு இணைத்து கொண்டிருக்கிறது, முக்கியமான யோகநூல்கள் அனைத்தும் இதை சுட்டிக்காட்டுகிறது. ‘’ஹதயோக பிரதீபிகா’’ போன்ற முதன்மை நூல் ஒரு  நல்ல உதாரணம் .

யோகப்பயிற்சிகளில் சரிபாதி, மனம் , ஆழ்மனம் , உணர்ச்சிகளை சரியாக நிர்வகித்தல்,  தியானம் , போன்ற புறக்கண்களால் காணவே முடியாத நமது இருப்புக்கான பயிற்சிகளாகவே அமைந்துள்ளது. குறிப்பாக பெரும்பாலான தியான முறைகள் ஒரு குறியீட்டு தன்மையுடனோ , ஒரு உருவகத்தை, அல்லது  யந்திரம் எனும் முக்கோணம் அறுகோணம் போன்ற வடிவங்களை தியானித்தல், போன்ற பயிற்சிகள் , சிறு சடங்குகள் போல அல்லது ஒலியுடன் இணைந்து செய்யக்கூடிய தியான மற்றும் ஆழ்நிலை பயிற்சிகள், பெரும்பாலும் தாந்த்ரீக மரபிலிருந்து யோக மரபிற்கு வந்தவை. ஏனெனில் முந்தைய யோக நூல்கள் மந்திரங்கள் யந்திரங்கள் போன்ற, சடங்கு மற்றும் குறியீட்டு தன்மையை பற்றி பேசவில்லை, குண்டலினி உபநிஷத் , சிவ சம்ஹிதை போன்ற நூல்கள் தான் யந்திர மந்திர கருதுகோள்களை முன்வைக்கிறது, கடந்த ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டுகளாகத்தான், தாந்த்ரீக சடங்குகளை சிறு சிறு பகுதிகளாக பிரித்து எவரும் செய்யக்கூடிய பயிற்சிகளாக மாற்றி வடிவமைத்து யோகமரபு முன்வைக்கிறது.

இன்று நீங்கள் ஒரு யோகவகுப்பில் அமர்ந்தவுடன் சொல்லப்படும் ''சஹநா வவது '' எனும் ஆரம்ப சாந்தி மந்திரம்  உபநிஷத் கால மந்திரம்.     தியான வகுப்பில் சொல்லப்படும்  புருவ மத்தியில் தீபச்சுடர் அல்லது நெஞ்சு பகுதியில் ‘அறுகோண வடிவம்’ , வயிற்றுப்பகுதியில் சொல்லப்படும் ‘கீழ்நோக்கிய முக்கோணம்’ போன்ற அனைத்தும் தாந்த்ரீக மரபிலிருந்து யோகத்திற்குள் வந்திருக்கிறது. இதை ஒரு ஆரோக்யமான ‘கொடுக்கல் வாங்கல்’ என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் மற்ற மரபுகளும் யோகத்திலிருந்து தங்களுக்கான பயிற்சிகளை எடுத்தாள்கிறது. உதாரணமாக  ஆயுர்வேதத்தில்  வஸ்தி எனப்படும் குடலை சுத்திகரிக்கும் பயிற்சிக்கு , ஒரு குறிப்பிட்ட மருந்தை உட்கொண்டபின்னர் நோயாளியை உட்கட்டாசனம் எனும் ஆசன பயிற்சியை செய்யவைப்பது இன்றும் நிகழ்கிறது.

 

அதுபோலவே , தாந்த்ரீக பயிற்சிகளில் யோகமரபின் முத்திரைகளும் , பிராணாயாம முறைகளும் முக்கியமான அடிப்படைகளாக வைத்துள்ளனர்.

 

‘நாம் அறிந்துகொள்ளவே முடியாத நமது ஆழ்மனம், நமது அகம், எதோ ஒரு வகையில் ஒலியுடன், குறிப்பிட்ட சப்தங்களுடன் தொடர்புடையவை. ஆகவே சில மந்திர சப்தங்கள் , சில மறைஞான பாடல்கள் ,ஒருசில இசைக்கருவியின் ஒலிகள் நம்மை மெய்மறக்க அல்லது அமைதியடைய ,அல்லது கொந்தளிக்க வைக்கிறது. இந்த அறிவியலை மையமாக வைத்து நாதயோகம் எனும் யோகப்பிரிவு, தாந்த்ரீக மரபிலிருந்து மனிதனின் அகத்தை தீண்டக்கூடிய சப்தங்களை வைத்து எண்ணற்ற பயிற்சி முறைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.  உதாரணமாக மந்திரங்கள் என்றவுடன் நாம் ஏதோ சடங்கு ,சம்பிரதாயம் ,மதம் என்று நினைத்துக்கொள்கிறோம்,  சாதனா மந்திரங்கள் எனப்படுபவை மதங்களுக்கு அப்பாற்பட்ட, ஒலியால் நம் அகத்தில் சில மாற்றங்களை செய்யும்படி உருவாக்கப்பட்டவை. எவ்வித நம்பிக்கையும் அற்ற ஒருவருக்கும் இந்த ஒலிகள் மிகப்பெரிய அளவில் பலனளிப்பவை. இதை நாதயோகம் என்கிறது யோகமரபு. நாதயோகத்தால் ஒருவர் தன் அகத்துள் ஊடுருவி சென்று அறிந்து கொள்ளவும் , தேவையற்றவற்றை அகற்றவும் முடியும் என்பது இதன் முதன்மை பணி. அப்படி ஒன்றை தேர்ந்து கற்றுக்கொள்வதில் நமக்கு எந்த மனத்தடையும் இருக்க வேண்டியதில்லை. ஏனெனில் நன்மைகள் எங்கிருப்பினும் அதை நம்முள் கொணர்ந்து சேர்ப்பதற்கு தயக்கம் எதற்கு?


Featured Post

YOGA -9

  மேன்மைகள்   யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்போம் .   இந்திய அறிதல் முறைகள் அனைத்தும் , மற்ற மரபுகளுடன் உரையாடி அவற்றிலிருந்து த...