Sunday, May 5, 2024

YOGA -7

 


உங்களுக்கான சிறந்த யோகமுறை எது? எப்படி தேர்ந்தெடுப்பது ?

 

மனிதர்கள் உருவாக்கிய ஒவ்வொரு  துறையிலும் அத்துறையில் சிறந்தவற்றை அடைய,  வல்லுநர்கள்  சில அளவீடுகளை ஏற்படுத்தி  வைக்கின்றனர். அந்த அளவீடுகள் பல்லாயிரம் முறை சரிபார்க்கப்பட்டு, அனுபவிக்கப்பட்டு , பின்னர் பொது சமூகத்திற்கு வந்து சேரும், ஒரு சினிமா விமர்சனம் முதல் இலக்கிய விமர்சனம் வரை இங்கே உலகளாவிய அளவீடுகள் இருப்பதையும், அப்படி முன்வைக்கப்பட்ட விசயங்கள், தனித்தன்மையுடனும் ,தரத்துடனும் இருப்பதை நாம் காணலாம்.

அப்படிதான் இன்று உலகம் முழுவதும் யோகத்துறையில் இருபதுக்கும் மேற்பட்ட மரபுகளும் , ஏழு லட்சம் யோக ஆசிரியர்களும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான யோக பள்ளிகளும் இருக்கின்றன.

இப்படி ஒரு மாபெரும் துறையில் மிகச்சிறந்த ஒன்றை நாம் எப்படி தேர்வு செய்வது?

ஏனெனில் ஒரு நுகர்வுப்பொருள் போல எதாவது ஒன்றை வாங்கி உபயோகித்து பார்த்து, சரியில்லையெனில் பின்னர் மாற்றிக்கொள்ளலாம் என்று யோகத்தை நாம் தேர்வு செய்து விட முடியாது.  இது நமது உடல் ,மனம்,புத்தி என பல்வேறு வாழ்வியல் அம்சங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.

ஆகவே, ஐந்து முக்கியமான அடிப்படைகளை இந்த துறையின் வல்லுநர்கள்  முன்வைக்கின்றனர்.

 

 

அவற்றில் முதன்மையானது,

ஆசிரிய அல்லது குருமரபு.

அதாவது  நீங்கள் கற்றுக்கொள்ளும் யோகவகுப்பு ஒரு மரபார்ந்த, நீண்ட ஆசிரிய/ குரு குலத்தை சார்ந்ததா? என்கிற கேள்வி , இது ஏன் முக்கியமெனில், இது போன்ற பயிற்சிகள் ஆயிரக்கணக்கான வருடங்களாக பயின்று , பயன் பெற்று ,மறு சீரமைப்பு, செய்யப்பட்டிருக்கும், நமது தாத்தாவின் அன்றைய உடல் , மனம், உயிர் சார்ந்த தேவைகளுக்கான பயிற்சிகளை வழங்கி இருக்கும். அதன் பின்னர் நம் தந்தையின் உலகிற்கு தேவையானவற்றை மறு சீரமைப்பு செய்து வழங்கி இருக்கும் , இன்று நம் தேவைகளுக்கான பிரத்யேகமான ஒன்றை வடிவமைத்து தன்னகத்தே கொண்டிருக்கும். இப்படி ஒரு நீண்ட கால தொடர் பயணம் இல்லாத, அல்லது சமீபத்தில் உருவாகி தற்காலிக புகழ் பெற்ற ஒரு யோக ஆசிரியரோ நிறுவனமோ, நம் அகத்தின் ஆழத்தில் இருக்கும் பிரச்சனைகளை கண்டுகொள்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு,  அப்படி குறைவுபட்ட பயிற்சி திட்டம் சிலசமயம் பக்கவிளைவுகளை வழங்கிவிடக்கூடும். காலவரிசைப்படி குறைந்தது ஒரு நூறு, நூற்றைம்பது  வருட பாரம்பரியமாவது இல்லாத, ஆசிரியரை, யோகப்பள்ளியை தேர்ந்தெடுப்பதை  தவிர்க்கலாம்.

 

இரண்டாவது

அறிவியல் சார்ந்த அணுகுமுறை.

ஒரு முழுமையான அறிவு அல்லது பாடத்திட்டம் என்பது மரபார்ந்த ஒன்றாக இருப்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதே  அளவிற்கு சமகால அறிவியல் சார்ந்ததாகவும் இருத்தல் அவசியமாகிறது, அதுவும் யோகம் போன்ற உடல், மனம், இயக்கம் ,போன்ற வாழ்வியல் அம்சங்களில் இந்த அணுகுமுறை முக்கியமான ஒன்று. ஆகவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் ,யோக ஆசிரியர் அல்லது நிறுவனம், உங்களுக்கு பரிந்துரைக்கும் பயிற்சிகள் சார்ந்து அறிவியல் பூர்வமான ஆய்வுகளை முன் வைக்கிறார்களா? அந்த பயிற்சிகளின் சாதக பாதகங்கள் விரிவாக சொல்லப்படுகிறதா ? எந்த வகையில் இந்த பயிற்சி உங்கள் உடலியல் /மனம் சார்ந்த உபாதைக்கு உதவும். உடலில் எந்த மாதிரியான முன்னேற்றத்தை ஏற்படுத்தும், முக்கியமாக தவறாக பயிற்சி செய்தல் நிகழும் பக்கவிளைவுகள் யாவை ? போன்ற அனைத்தும் அறிவியல் பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்திய அளவிலோ , உலக அளவிலோ, ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறார்களா? அதன் எதிர்வினை என்ன? போன்ற அறிவுசார் விவாதங்கள் நிகழ்திருக்கிறதா ? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், உலக அளவில் முக்கியமான நான்கு நிறுவனங்கள் இதை மிகச்சிறப்பாக செய்து வருவதை இணையத்தில் சற்று தேடினாலே  கண்டு கொள்ள முடியும்.

மூன்றாவதாக

பரிந்துரை

இன்று நாம் ஒரு பொருளை வாங்க முதலில் நாடுவது அந்த பொருளை பற்றி, அதை அனுபவித்த , நுகர்வோர் என்ன சொல்கிறார்கள் என்கிற அடிப்படையில் தான்,  இணையத்தில் தேடி ஒன்றை வாங்குகிறோம். எனினும்  யோக பள்ளி  அல்லது ஆசிரியரை தேர்ந்தெடுக்க சற்று மேலதிகமாக சில அளவீடுகளை கவனிக்க வேண்டியுள்ளது.  உதாரணமாக அந்த யோக ஆசிரியர் பற்றி, அவரிடம் கற்றுக்கொண்ட மாணவர் இணையத்தில், ''நன்றாக இருந்தது ''  ''வெரி குட் '' போன்ற ஒற்றை வார்த்தையாக இல்லாமல், சில நட்சத்திரங்களை  / ஸ்டார் ரேட்டிங்குகளை வழங்காமல், அந்த யோக பயிற்சி மாணவரின் வாழ்வில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தியது. எது முக்கியமான அம்சம் போன்றவற்றை, நான்கைந்து வரிகளிலாவது எழுதியிருக்க வேண்டும். அப்படியான பரிந்துரை நமக்கு ஆயிரக்கணக்கான யோக ஆசிரியர்களிலிருந்து, சிறந்த ஒருவரை தேர்ந்தெடுக்க உதவும்.

 

நான்காவதாக

நோக்கமும் குறிக்கோளும்

நாம் இங்கே எய்தும் ஒவ்வொரு செயலும் ஒரு குறிப்பிட்ட நோக்கமும்,  குறிக்கோளும் கொண்டவை , அதுவன்றி நாம் பெரும்பாலும் எந்த செயலையும்  செய்வதில்லை. அப்படி இருக்கையில், பல்வேறு பிரிவுகள், உட்பிரிவுகள் கொண்ட நீண்ட பாடத்திட்டமான 'யோகக்கலை ' உங்களுக்கு அளிக்கும் பயிற்சிகள் அதன் நோக்கங்கள் அதில் உங்களுடைய குறிக்கோள் போன்ற அம்சங்களை நிச்சயமாக தெரிந்து கொள்வது அவசியம். உதாரணமாக, ஒருவருக்கு மூட்டுவலி  காரணமாக ஒரு குறிப்பிட்ட பயிற்சியை தேர்ந்தெடுக்கிறார் என்றால், அந்த பயிற்சியின் நோக்கம் 'வலியை நீக்குதல் ' என்பதாக மட்டும் இல்லாமல் மீண்டும் அந்த உபாதை வராமலிருக்கும் குறிக்கோளுடன் செய்யப்பட்டால் நீங்கள் தேர்ந்தெடுத்த ஆசிரியர் அல்லது யோக கல்வி சரியானது என்றே பொருள்.

 

ஐந்தாவதாக

சுயதேர்வு

 

ஒரு யோகப்பயிற்சி அல்லது ஆசிரியரை தேர்ந்தெடுப்பதில், ஒருவருக்கு தான் எதனால் இதை செய்கிறோம் என்கிற கவனம் தேவை , வெறும் ஆர்வத்தால் , அல்லது இணையத்தில் உலவும் யோகம் சார்ந்த அமானுஷ்ய காரணங்களால், அல்லது பொழுதுபோக்கிற்காக, என்கிற மேலோட்டமான , எவ்வகையிலும் நமக்கு உதவாத ஒன்றை செய்து பார்ப்பதை விட அதை செய்யாமலே இருக்கலாம்.  ஆக உங்களுடைய தேவை சார்ந்தும் , அதன் முக்கியத்துவம் தெரிந்தும், வாழ்வின் இந்த தருணத்தில் எவ்வாறு உங்களுக்கு பலனளிக்கும் என்றும் தீவிரமாக யோசித்து , ஒரு சுயதேர்வாக யோகத்தை தேர்ந்தெடுங்கள்.

 

இப்படியாக, இந்த அனைத்து அம்சங்களும் ஒருசேர இல்லாவிட்டாலும், மூன்று அல்லது நான்கு அடிப்படைகளையாவது ஆராய்ந்து ஆயிரக்கணக்கான யோக கல்வியிலிருந்து சரியான ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.


Featured Post

YOGA -12

  இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலே உனக்கு கவலை எதற்கு ?   நீண்ட நேர இரயில் பயணங்களில் , நாம் அனைவருமே குறுகிய கால நட்பு ஒன்ற...