Friday, April 12, 2024

Sunday, April 7, 2024

YOGA- 6

 


இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே !!!

 

 

 இந்த நாள்  மிகச்சிறப்பாக அமைந்தது என்பதை நாம் அனுபவிக்கக்கூடிய தளங்கள் தான் முதல் மூன்றும்.  உடல் இலகுவாக, சொன்ன வண்ணம் இயங்கிக்கொண்டும் , ஒருவித துள்ளலுடனும், பெரும்பாலான வேலைகளை ஒரு நடனம் போல இயல்பாக நிகழ்த்த முடிந்தால் , உடலில், அதாவது அன்னமய கோசத்தில்  இன்பத்தை அடைந்திருக்கிறீர்கள் என்றே பொருள். சுறுசுறுப்பும் உற்சாகமும் பாட்டும், சிறு விசிலும் , களைப்பின்றியும் இந்த நாள் முடிந்தால் , உங்கள் பிராணமய கோசத்தில் அதன் முழுமையை அனுபவித்து இருக்கிறீர்கள் என கொள்க. எவ்வித பதட்டமுமின்றி மனம் ஒரு ரம்யமான இசை போல ஒழுகிச்சென்று, மீண்டும் மீண்டும் உதட்டிலும் மனத்திலும் புன்னகையை நிறைத்து வைத்திருந்தால், உங்கள் மனோமய கோசம் அதன் முழுமையை அடைந்து ததும்பி நிற்கிறது என்றே உணர்க. இதற்கு நேர்மாறாக இந்த மூன்று கோசத்திலும் நிகழ்ந்தால் அந்த நாள் ஒரு ஒவ்வாத நாளாக நாம் அனுபவிக்கிறோம்.  ஆக , நமது வாழ்வின் பெரும்பகுதி முதல் மூன்று தளத்தின் முழுமையிலும் , போதாமையிலும் தான் அமைந்து இருக்கிறது. ஒரு ஹடயோகியானவன் , சாதகன்,  அடையக்கூடிய அடிப்படை பயன் என்பது இந்த முக்கோண தளத்தை இணைப்பது தான்.  ஒன்றுடன் ஒன்று இணையாமல் துண்டிக்கப்பட்டிருந்த இந்த முக்கோணத்தின் முனைகள் மிகச்சரியாக,  ஒரு பயிற்சி திட்டத்தின் மூலம், இணைக்கப்படட உடனேயே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் இந்த முக்கோண வடிவம் {  உடல், உயிராற்றல்  மனம் } முழுமையை வெளிப்படுத்துகிறது, அந்த சாதகன் சாமானியன் யாரை விடவும், அனைத்திலும் ஒரு படி மேலானவனாகிறான்.

 

எனினும் இந்த மூன்று தளங்களின் ஒருங்கிணைப்பு மட்டுமே ஒரு முழு வாழ்வை தந்துவிடாது என்பதால், யோகமரபும் , வேதாந்த மரபும் மேலும் சில தளங்களை சொல்கிறது, நான்காவது தளமான  விஞ்ஞான மாய கோசம் பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம், இந்த நான்கு கோசங்களும் ஒன்றில் ஒன்றென சரியாக அமைகையில், நாம் ஆனந்த மய கோசம் எனும்  தளத்தில் சென்று அமர்கிறோம்.

இந்த ஐந்தாவது தளத்தை பற்றி விளக்குவதில் இருக்கும் மாபெரும் சவாலே, எத்தனை சொற்களை போட்டு நிறைத்தாலும் இன்னும் சொல்வதற்கு மீதமிருக்கும் நிலை அது, ஆகவே அத்தனை  மகான்களும் தாங்கள் உணர்ந்த அல்லது அனுபவித்த இந்த நிலையை பற்றி, உவமையாக சிலவற்றை சொல்ல முயற்சி செய்கின்றனர்.

உதாரணமாக இரண்டு உவமைகள் இங்கே பேசப்படுவதுண்டு. ஒன்று  தேனின் சுவை - நான் எவ்வளவு தான் தேனின் சுவை பற்றி உங்களுடன் மணிக்கணக்காக உரையாடினாலும், இனிமை , இனிப்புச்சுவை, தித்திப்பு, என்கிற வார்த்தைகளை உபயோகித்தாலும்,  இனிப்பு பற்றி அறிந்திருக்காக ஒருவருக்கு சொல்லி புரிய வைக்கவே முடியாது , ஆனால்  எந்த மொழியும் தெரியாத ஒருவருக்குக்கூட  ஒரு சொட்டு தேனை கொடுத்தால் அவர் அதை அனுபவமாக மாற்றிக்கொள்ள முடியும். இது தான் ஆனந்த மய கோசம் பற்றி சொல்ல முடியக்கூடிய முதல் உவமானம்.

அடுத்ததாக இறைநிலை அல்லது இரண்டற்ற இறையுடன் கலந்தநிலை   என்பதை குறிப்பிட  'உப்புப்பதுமை கடலில் கரையும்' உவமானம்.

உபநிடதங்கள் நம் இருப்பை அன்னமயம், பிராண மயம் , மனோமயம் , விஞ்ஞான மயம்  ஆனந்த மயம் என படிப்படியாக ஏறுவரிசையில் சுட்டுகிறது.  இதில் ' மயம் ' என்பது மயட் '' என்கிற வேர்ச்சொல்லின் திரிபு. இதற்கு ''ஒன்றாலேயே ஆனது'' அல்லது ''ஒன்று மற்றொன்றாக மாறுவது, நிரப்பப்படுவது''. என பொருள்  ஆக, ஆனந்த மயமான நிலையை அடைவதேயே, அதாவது ஆனந்தமே உருவான பிரம்மத்தை அல்லது முழுமுதல் நிலையை அடைவதையே குறிக்கோளாக கொண்டுள்ளது நமது மரபு. யோகமரபு பிரம்மத்தை அடைவதை குறித்து எதுவும் பேசுவதில்லை, அது முற்றிலும் சமாதிநிலை அல்லது கைவல்ய நிலை குறித்து மட்டுமே பேசுகிறது.

 

 

ஆக  ஒரு பயிற்சி என்பது படிப்படியாக ஒருவரை இந்த ஐந்து கோசங்களிலும், ஒரு மாபெரும் மாற்றத்தை, ஏற்படுத்தி, சிறிது சிறிதாகவேனும் நம்மை மேம்பட்ட நிலையை நோக்கி அழைத்துசெல்ல முடிந்தால் அப்படியான ஒரு பயிற்சி திட்டத்தை நாம் வாழ்நாள் முழுவதும் கைகொள்ளலாம்.

அதில் யோகப்பயிற்சிகள் மிக சாதகமாக இருப்பதால், நமக்கான ஒரு குறிப்பிட்ட திட்டத்தை  தேர்ந்து எடுக்கலாம். பயிலலாம், அதன் பயன்களை அடையலாம்.

எனினும் சரியான யோகக்கல்வி என்பதை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றி நம் அனைவருக்குமே, தயக்கமும் ,குழப்பமும் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு நோய்க்கான மருந்தை தேர்ந்தெடுப்பதில் , நம் குழந்தையின் மேல்படிப்புக்கான கல்லூரியை தேர்ந்தெடுப்பதில் , எப்படி நாம் அடிப்படையான சில அளவீடுகளை வைத்திருக்கிறோமோ, அதே போலத்தான் ஒரு நல்ல யோகக்கல்வியை அல்லது பயிற்சியை தேர்ந்தெடுப்பதிலும் சில அளவீடுகள் இருக்கிறது.


Friday, April 5, 2024

YOGA-5

 


உள்ளே உறையும் உயர் அறிவை மீட்டெடுத்தல்.

 

 

இந்த பகுதியில் நாம், மனோமய கோசத்திற்கு அடுத்த தளமான, உயர் அறிவின் உறைவிடம் என்று சொல்லப்படும் விஞ்ஞான மய கோசம் பற்றி பார்க்கலாம்.

நாம் ஏற்கனவே சொன்னது போல , இந்த ஐந்து தளங்களும் ஒன்றைவிட ஒன்று சூட்சுமமாக இருக்கிறது, உடலை விட மூச்சு இன்னும் ஆழத்தில் இருக்கிறது, மூச்சை விட மனம் இன்னும் ஆழம் கொண்டது, இந்த மனமும் ஆழத்தில் தன் சம நிலையை அடையும் பொழுது உயர் மனம் சிறிது விழிப்படையும் பொழுது ஏற்படும் நிலையை நாம் உள்ளுணர்வின் தளம் என கொள்ளலாம் . இந்த உள்ளுணர்வே உயர் அறிவாக விஞ்ஞான மய கோசமாக மரபு வகை படுத்துகிறது.

உதாரணமாக நம்முடைய மனதை வைத்து நம் வாழ்வை ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே அறிய முடிகிறது. இந்த மேல் மனதையும் , மேலோட்டமான புத்தியையும் வைத்து நாளை அல்லது வருங்காலம் சார்ந்து சில திட்டங்களை வகுக்கலாம். அது சார்ந்து குழப்பங்கள் , முடிவுகள் , சந்தேகங்கள் , என பலவாறாக நினைத்து பார்க்கிறோம். ஆனால் இந்த உள்ளுணர்வு எனும் உயர்மட்ட அறிவு நமக்கு எப்போதாவது ஒரு முறை நிகழ்கிறது. அந்த ஒரு கணத்தில் நம்மால் இன்னும் தெளிவாக நம் வாழ்வு பற்றியோ , வருங்காலம் பற்றியோ துல்லியமான காட்சி ஒன்று கிடைத்து விடுகிறது.

அப்படி  ஒரு காட்சியை அகத்தில் கண்டு விட்ட பின் நீங்கள் தவறான ஒரு செயலை அல்லது  தோல்வி அடையக்கூடிய ஒரு திட்டதை செயல்படுத்த மாட்டீர்கள் , ஏனெனில் விஞ்ஞான மய கோசத்தில் உச்சபட்ச அறிவுநிலை முதன்மையாக இருந்து உங்களுக்கு வழி காட்டுகிறது. அப்படியான தீர்க்க தரிசனங்கள் பெரும்பாலும் பொய்ப்பதே இல்லை எனலாம். எனினும் இந்த உள்ளுணர்வின் தளம்  நமது மொத்த வாழ்நாளில் மிகச்சிறிய அளவிலேயே நிகழ்கிறது. அல்லது இப்படி விழிப்படைந்த உயர் அறிவின் தளத்தை நம்மால் நீண்ட நேரத்திற்கு தக்கவைத்துக்கொள்ளும் தகுதியோ , ஆற்றலோ நம்மில் இல்லை.

 ஏனெனில் பெரும்பாலும் மேல்மனம் அடையும் பரபரப்பில் இந்த உயர்மனம் மறைந்து கொள்கிறது.

நமது கனவு நிலையை இந்த கோசத்திற்கு நிகராக சொல்லலாம் , நமது கட்டுப்பாட்டில் இல்லை எனினும் நமக்கு சிலவற்றை கனவுகள் உணர்த்துகிறது, அதை சரியாக உள்வாங்கிக்கொள்ள நமக்கு முடியாமல் போகலாம். ஆனால் நவீன உளவியல் ஆராய்ச்சியாளர்கள் வரை சொல்வது அதைத்தான்.

உதாரணமாக நமது குலதெய்வங்களை பற்றி நமக்கு தகவல் இல்லையெனில், நமது சொந்த ஊரின் மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து வந்து துணியில் கட்டி வாசலில் தொங்கவிட , ஒரு மாத காலத்திற்குள் நமது கனவில் நம் குலதெய்வம் தன்னை வெளிப்படுத்தும் என்பது ஒரு நம்பிக்கை.

 

சில சமயங்களில் நம் வீட்டின் பெரியவர்களுக்கு சன்னதம் அல்லது அருள் வந்து அவர்கள் வேறு ஒரு தளத்தில் நின்று சிறிது நிமிடம் பேசுவார்கள்.

 

அங்கே நமது மேல்மனம் , புத்தி , அனைத்தும் உயர்வான அல்லது இந்த பிரபஞ்ச இயக்க சக்தியுடன் இணைத்து கொண்டு சிலவற்றை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

அப்படியெனில்  உயர் தளத்தை தூண்டக்கூடிய ஆற்றல் எது ? இதை இயக்கும் எரிபொருள் எங்கிருக்கிறது ? இந்த போன்ற வினாக்களுக்கு நமது யோக   மரபில் சில பதில்கள் கிடைக்கிறது. அதாவது மேல்மனம் அடங்கும் பொழுது அதற்கு நாம் செலவிட்ட ஆற்றல் அனைத்தும் இந்த விஞ்ஞான மயன் நோக்கி செலுத்தப்படுகிறது. அப்படி செலுத்தப்பட்ட பிராணனே இங்கே எரிபொருளாகிறது.

பிராணன் என்பது மூச்சு என்று ஒரு தவறான கருத்து இங்கே உள்ளது, அதுவல்ல.

ஆக , விஞ்ஞான மயனை விழிப்படைய செய்ய ஒரு குறிப்பிட்ட அளவில் தியான நிலை அமைய வேண்டி இருக்கிறது. பிராணன் இல்லாத உடலால்  நல்ல தியான அனுபவத்தை தக்கவைத்துக்கொள்ள முடிவதில்லை.  ஆகவே யோகமரபு உடலிலிருந்து தொடங்குங்கள் என்று ஆணையிடுகிறது. அன்னமயத்தில் ஏற்படும் சமநிலை, பிராண மயனால் செறிவூட்டப்பட்ட உள்ளத்தில் திகழ்ந்து, தியான அனுபவத்தை கூர்கொள்ளச் செய்கிறது. அப்படி கூர் கொண்ட மனம், ஆழம் நோக்கி சென்று  விஞ்ஞான மயம் எனும் உயர் அறிவை , உள்ளுணர்வை தூண்டுகிறது. அங்கே கனவு நிலையென காட்சிகளும் , காலத்தை முன்னோக்கி பார்க்கவல்ல இயல்பும் , மனத்தெளிவும் உறைகிறது.

நமது முனிவர்களும் ரிஷிகளும் கவிகளும் திரிகால சஞ்சாரிகள் என்று நாம் சொல்வது இந்த கோசத்தில் அவர்கள் தொடர்ந்து இருந்ததால் தான். ஆகவே அவர்களால் காலத்தை முன்னோக்கி தரிசித்து வருங்காலத்தை நோக்கி பேச முடிகிறது.

யோக பயிற்சிகளில் சில இன்றைய நோய்களுக்கு தீர்வாக அமைவதுண்டு, உதாரணமாக, ஆர்த்தரைடீஸ் எனப்படும் மூட்டுவலி,இதற்கு ஜானு சக்ராசனம் என்று ஒரு பயிற்சி யோகத்தில் உண்டு  இந்த பயிற்சி கிட்டத்தட்ட  நானூறு ஐந்நூறு வருடங்களுக்கு முன்னர் கண்டு சொல்லப்பட்ட பயிற்சியாக இருக்கலாம், அந்த கால கட்டத்தில் அவர்களுக்கு மூட்டு வலி இருந்திருக்க வாய்ப்பே இல்லை . பிறகு ஏன் இந்த பயிற்சி ? அவர்களுக்கு ''தெரிந்திருக்கிறது ' இன்னும் ஐநூறு வருடம் கழித்து வரப்போகும் மானுடனுக்கு இது உதவலாம் என. இப்படித்தான் மரபு சில பயிற்சியை முன்வைக்கிறது. இது எதிர்காலத்தை பார்க்கத்தெரிந்த வல்லுநர்களால் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம். இப்படி ஒவ்வொரு மரபிலும் உண்டு . அது வல்லமை மிக்க மானுடர்களால் விஞ்ஞான மய கோசத்தின் துணை கொண்டு  ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டம். ஆக, முதல் மூன்று தளத்திலும் நம்மை சூழ்ந்திருக்கும் எல்லைகளையும் , போதாமைகளையும் சரியாக கையாள்வதன் மூலம் நான்காவது தளத்திற்கு அடிக்கடி ‘’வந்துசெல்லும்’’ அரிய வாய்ப்பை பெறுகிறோம். விஞ்ஞான மய கோசத்திற்கு வந்து செல்வதென்பது நமது வாழ்விற்கான உயர் கேள்விகளுக்கான விடையாக, நமது அடிப்படை கீழ்மைகளிலிருந்து மேலெழ வாய்ப்பாக , நம்மை சூழ்ந்திருக்கும் அனைத்திற்கும் ஏதேனும் வகையில் நன்மை ஒன்றை வழங்குவதற்கு, இது அனைத்தையும் தாண்டி , அடுத்த தளமான ஆனந்தமய கோசத்திற்கான வாசலாக அமைகிறது.


 

 


Wednesday, April 3, 2024

YOGA- 4

 

துக்க காரணம்- மோட்ச சாதனம்- மனம்

 

கிரேக்க தொன்மத்தில் முதல் பெண்மணியான பண்டோரா என்பவளுக்கு கடவுளர்கள் அனைவரும் பரிசுப்பொருட்களை அளிக்கின்றனர், அதில் ஒரு பெட்டியை எக்காரணத்தை கொண்டும் திறக்கக்கூடாது என சொல்லப்படுகிறது. ஆனால் அவள் ஆர்வமிகுதியால் திறந்து பார்க்க அடைத்து வைக்கப்பட்டிருந்த  அத்தனை தீமைகளும், வெளியேறி உலகில் பரவிவிட்டது என்று ஒரு தொன்மக்கதை உண்டு.

இதை அப்படியே நமது மனம் எனும் கருவிக்கும் போட்டு பார்க்கலாம்.

நம் ஒவ்வொருவருடைய பண்டோரா பாக்ஸையும் திறந்து பார்த்தால், என்னவெல்லாம் வெளிவரும் என நாம் அறிவோம் . நவீன உளவியல், ஒரு மனிதருக்கு ஒரு நாளில் மட்டும் ஆறாயிரம் எண்ணங்கள் முதல் நாற்பதாயிரம் எண்ணங்கள் வருவதாக கணிக்கிறது. இவ்வளவு எண்ணங்கள் வந்து செல்லும் நாம் எப்படி சாந்தமான அமைதியான ஒரு மனிதராக இருந்துவிட முடியும்.

 

 

 

 

ஆக மனம் எனும் ஒரு மாபெரும் வலைப்பின்னலில் ஏதேனும் ஒரு கண்ணியில் சிறு அதிர்வு நிகழ்ந்தால் கூட மொத்த வலையும் பதட்டத்துடன் துடிதுடிப்பது போல தான் நம் மனம் சதா பரபரத்துக்கொண்டே இருக்கிறது.

 

நமது மரபில் சொல்லப்படும்   மூன்றாவது தளமான மனோமய கோசம் என்பது இந்த இடம் தான். எனினும் குறிப்பிட்டு சொல்லப்படும் ஒரு உடலுறுப்பு அல்ல.

இந்த மனம் எனும் கருவி எதோ தனித்து இயங்ககூடியதல்ல, அது உடலிலிருந்தும் , பிராணனிலிருந்தும் ஆற்றல் முழுவதையும் உறிஞ்சி    செலவு செய்தவண்ணம் இருக்கும் ஒரு கருவி  ஆகவே  நவீன மருத்துவம் மனதால் உடலில் உருவாகும் நோய்கள் என ஒரு நீண்ட பட்டியலை சொல்கிறது இதை 'சைக்கோ சோமாடிக் டிசீஸ்' என வகைமை படுத்துகிறது. 

இன்று நாம் அடிக்கடி கேள்விப்படும் முதல் பத்து நோய்களில் கிட்டத்தட்ட ஏழு நோய்கள் இந்த வகைமையை சேர்ந்தவை.

உதாரணமாக,  தந்தைக்கு சர்க்கரை நோய் இல்லாத நிலையில், மகனுக்கு வருவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருக்கிறது. அதற்கு மகனின் வாழ்க்கைமுறை மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணிகளை சொல்லலாம்.  எனவே சர்க்கரை நோய் என்பது பரம்பரை நோய் அல்ல மாறாக வாழ்க்கை மற்றும் மனம் சார்ந்த நோய்.

சிலர் ' நானெல்லாம் படுத்தா பத்துமணி நேரம் , பதினைந்து மணிநேரம் நல்லா தூங்குவேன் சார் ' என்று பெருமையாக

 சொல்வதை கவனிக்கலாம் அதேபோல சிலர் தொடர்ந்து எதையேனும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதை கவனிக்கலாம், இப்படியாக  தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம், உடல் பருமன்  போன்ற நிலைகளை மனநோய் என்றே உளவியல் சொல்கிறது.

நவீன உளவியலும் , நமது யோக மரபும் சொல்லக்கூடியது, நம் மனம் நமக்கு தெரிந்த மேலடுக்கு மனம் மட்டுமல்ல நம்மால் புரிந்து கொள்ளவே முடியாத பல்வேறு அடுக்குகள் கொண்டது. அதனாலேயே நம்மால் எதையெல்லாம் மனதில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் , எதையெல்லாம் வெளியேற்றி விடவேண்டும் என்கிற தெளிவு இல்லை. பத்து வருடத்திற்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட நாளில் நாம் ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்காக அவமானம் ஒன்றை அடைந்திருப்போம், அது இன்னும் மனதின் ஆழத்தில் ஒரு புண்ணாக ஆறாமல் இருக்கிறது, அதே வருடத்தில் மிக இனிமையான நாட்கள் சில கடந்து சென்றிருக்கும் அவற்றை நம்மால் நினைவில் மீட்ட முடிவதில்லை. இவ்வாறாகவே கோபம் , குரோதம் போன்ற எதிர்மறை பண்புகளை எப்படி கையாள்வது என்கிற நுட்பம் தெரியாத போது , நாம் நமக்கு தெரியாமலே இந்த உடலை ஏதோ வகையில் சிறிது சிறிதாக  அழித்துக்கொள்கிறோம்.

உதாரணமாக ஒருவருக்கு மரண பயமோ, நோய் வந்துவிடுமோ என்கிற பயமோ வந்துவிட்டால் அவரால் நிம்மதியாக தூங்க முடியாது. அந்த தூக்கமின்மை அவரை நோய் நோக்கி அழைத்துச்செல்லும். இதை சரிசெய்ய மருந்து மாத்திரைகள் மட்டும் தான் உதவும் என்று சொல்வதற்கில்லை.

மிகச்சரியாக தேர்ந்தெடுக்கப்படும் தியான பயிற்சி அல்லது ஒய்வு தரும் பயிற்சியால் வெறும் மூன்று மாதத்தில்  மேற்சொன்ன பிரச்சனைகளில் இருந்து முற்றிலுமாக வெளிவந்து விடமுடியும்.

யோகநித்ரா போன்ற பயிற்சிகள் மனோமய கோசத்தின் அனைத்து அடுக்குகளையும் சீர் செய்து சமநிலையை கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

அதற்காக நவீன மருத்துவம் சொல்லக்கூடிய மருந்து மாத்திரைகளை கைவிட்டு விட்டு இதை தொடங்கவேண்டிய அவசியமில்லை. இது போன்ற பயிற்சிகளில் ஒருவர் காட்டும் ஆர்வமும் தொடர் முயற்சியும் குறுகிய காலத்தில் நல்ல பலனை தரும். அதன் பின்னர் மருந்து மாத்திரைகளை நிறுத்திக்கொள்ளலாம்.

 

எனினும் மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக ஒரு தியான முறையை தேர்ந்தெடுக்கும் பொழுது சற்று கவனமாக நமக்கான சரியான பயிற்சியாக தேர்ந்தெடுத்தல் மிகவும் முக்கியம். ஏனெனில் சில தியான பயிற்சிகள் நேரடியாக மனதை மேலும் கொந்தளிப்பு மிக்க மனதாகவோ, பக்கவிளைவுகளை தரக்கூடியதாகவோ அமைந்து விடும். ஆகவே யோகமரபு  ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், என முறையே உடல் , ஆற்றல் ,மனம் என்று ஒரு படிநிலையை பரிந்துரை செய்கிறது.

ஏனெனில் மனமே நமது துக்கத்திற்கு காரணமாகவும் , துக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான சாதனமாகவும் இருக்கிறது .

 

நீங்கள் தியானம் போன்ற ஒன்றை தேர்ந்தெடுக்கும் பொழுது இந்த படிநிலையை கவனத்தில் கொள்வது மேலும் பலனளிக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Saturday, March 23, 2024

YOGA-3

 

பிராணனே பிரதானம்.

 

இந்த பிரபஞ்சம் முழுவதும் இயங்கிக்கொண்டே இருப்பதற்கு எது ஆதாரமோ, அதுவே நம் இருப்புக்கும் இயக்கத்திற்கும் ஆதாரம். அந்த இயக்க சக்திக்கு 'பிராணன் ' உயிராற்றல் என்று பெயர். சீன மருத்துவம் இதை ''சீ ''{CHI} என்றும் ஹோமியோபதியும் , நவீன மருத்துவமும் இதை  வைடல் போர்ஸ்{ VITAL FORCE}  என்றும் அழைக்கிறது. ஆயுர்வேதம் இதை பிராணா என்றே அழைக்கிறது.

எப்படி புரிந்து கொள்வது?

பொதுபுத்தியில் மரங்களை வெட்டுவது பற்றி, இயற்கையை சீரழிப்பது பற்றி, ஒரு ஆதங்கம் , போலியான ஒரு கோபம் இருக்கிறது. ஆனால் இயற்கை தன்னை எப்படியேனும் தகவமைத்துக்கொள்ளும் வல்லமை மிக்கது.  ஒரு புதிய கட்டிடத்தை, உபயோகிக்காமல் வெறும் இரண்டு வருடங்கள் விட்டு வைத்தால், அவற்றில் ஐந்தே ஐந்து பெருமரங்களின் விதைகள் விழுந்தால்,  அடுத்த பத்து வருடங்களில் அந்த இடம், மனிதர்கள் உள்ளே நுழையமுடியாது காடாக மாறிவிடும்.  இந்த செயலை செய்வது எது ?

அதற்கு பெயர்தான் மஹா பிராணன் என்கிறது நம் மரபு.

அப்படியான பிராணன் தான் நம்மையும் ஆள்கிறது. நம் உடலை மட்டுமல்ல, ஆழம்வரை சென்று நம் உயிரையும் ஆள்வதால், ஒருவருக்கு உயிர் பிரிந்தவுடன் நாம் ''பிராணன் போயிடுச்சு’’ என்கிறோம்

 

 

 

ஆகவே பஞ்ச கோசத்தில் இரண்டாவது தளமாக முன்வைக்கப்டுவது பிராணமய கோசம் என்கிறது தைத்திரீய உபநிடதம்.  மூத்ததும் முதன்மையானதும் பிராணனே- என்கிறது சாந்தோக்யம். 

 

இது உடல் மனம் , புலன்கள் என அனைத்தையும் இணைக்கும் பாலமாக , இயக்கும் எரிபொருளாக அமைந்திருக்கிறது ஆகவே ஒருவரின் உடல், மன பதட்டங்களை, போதாமையை , நோய்மையை, சரிசெய்ய வேண்டுமெனில் நாம் முதலில் சரி செய்ய வேண்டியது நமது பிராணனை தான்.

பெரும்பாலும் மூச்சை பிராணன் என்று பல இடங்களில் மேற்கோள்கள் காட்டப்பட்டு, பிராணாயாம பயிற்சிகள் செய்தால் பிராணன் சரியாகிவிடும் என்பது தவறான கருத்து.

உண்ணும் உணவில்,அருந்தும் நீரில் , நுகரும் காற்றில், சுடும் வெயிலில் என எங்கும் நிறைந்து நிற்கும், பிராணனை ஒரு ஆரோக்கியமான உடல் மன அமைப்பு கொண்டவர் தொடர்ந்து பெற்றுக்கொண்டே இருக்கிறார். அல்லது ஒரு ஹடயோகிக்கு இது மிகச்சரியாக நிகழ்கிறது.

ஒரு சரியான யோக பயிற்சி திட்டமும், தேர்ந்தெடுக்கப்பட்ட மூச்சு பயிற்சியும் ஒருவருக்கு, முதலில் நிகழ்த்துவது, முழுமையான ஜீரண சக்தியை தான் . ஜீரணம் என்பது உடல்,மனம் ,உணர்வு என்கிற மூன்று நிலைகளிலும் நடைபெற வேண்டும் என்கிறது.

முக்கியமாக நமது மைய நரம்பு மண்டலத்தை சார்ந்த எண்ணற்ற ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு நவீன அறிவியலும் பிராணாயாம பயிற்சிகளின் சாத்தியங்களை ஒத்துக்கொள்கிறது.

எனினும் அனைத்து பிராணாயாம பயிற்சிகளையும் ஒருவர் நேரடியாக செய்து பார்ப்பதும் பக்க விளைவுகளை உண்டாகலாம், ஏனெனில் ஒரே  பயிற்சி ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு மாதிரியான பலனையும் , பக்க விளைவுகளையும் உண்டாக்கலாம்.

உதாரணமாக தீய கனவுகளால் கஷ்டப்படும் ஒருவருக்கு பிராணாயாம பயிற்சியில்  சரியான வழிகாட்டுதல் இருந்தால் வெறும் ஐந்து வாரங்களில் அவர் அந்த பிரச்சனையில் இருந்து வெளிவந்து விடலாம். ஆனால் அதே பயிற்சி வேறு ஒரு நபருக்கு தூக்கமின்மை அல்லது  நரம்பு தளர்ச்சி போன்ற உபாதைகளை தர நேரிடும்.

 

ஆக, ஒரு பயிற்சி உங்களுக்கு தேவையா ? இல்லையா என்பதை கண்டறிந்த பின்னர் அவற்றை தொடர்வது நலம்

 

 

நுகரும் ஒவ்வொரு விஷயமும் சரியாக செரிக்கப்டுகிறதா ? என்பதை நீங்கள் பஞ்ச பிராணனின் தரத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம் .

நீங்கள் காலையில் உண்ட உணவு செரிமானம் ஆனதா?

நேற்று நீங்கள் சேகரித்த தகவல்கள் முழுவதும் சரியாக செரிமானம் அடைந்ததா ?

மனதில் தோன்றிய குறிப்பட்ட எண்ணங்கள் அதனதன் இடத்தில சரியாக சென்று அமர்கிறதா ?

இப்படி ஒவ்வொன்றயும் சரியாக அமைத்துக்கொள்ள பிராணன் ஆதாரமாக விளங்குகிறது.

 

ஓட்டப்பந்தயத்தில் நீங்கள் ஒன்றை கவனித்து இருப்பீர்கள், வெற்றி பெற்ற வீரர் கடைசி சுற்றில் மூன்று நான்கு மீட்டர் தூரத்தை, ஒரு சிறு தளர்வுக்குபின், தன்னிலிருந்து தோன்றிய உத்வேகத்துடன் மொத்த உயிரையும் திரட்டி பாய்ந்து சென்று வெற்றி பெறுவார். அது அவரை இயக்கிய அந்த ஆற்றலை பிராணன் எனலாம்

அதே பிராணன் தான்  நம் உடல் மனம் புத்தி உணர்வு என ஒவ்வொரு தளமாக இயங்கிக்கொண்டு இருக்கையில் ஒரு தளத்திலிருந்து அடுத்த தளத்திற்கு செல்லும் இணைப்பாக இயங்குகிறது. ஒரு காரில் நாம் ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒருமுறை கியரை மாற்றுவது போல அப்படி மாற்றும் பொழுது நடுவே நியூட்ரல் நிலைக்கு வந்து பின் அடுத்த கியருக்கு மாற்றுவது போல நம்மில் பிராணன் இயங்குகிறது.

 

இந்த இயக்கத்தை பஞ்ச பிராணன் என்றும் நம்முடலின் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் அந்த சக்திநிலைக்கு ஒவ்வொரு பெயரும் அதன் இயக்கமும் ,சாதக பாதக அம்சங்களும் யோக மரபில் விரிவாக பேசப்பட்டுள்ளது.

இந்த ஐந்து  ஆற்றல்கள் முறையே

அபானன்

சமானன்

பிராணன்

உதானன்

வியானன்

எனப்படுகிறது

இவற்றை தனித்தனியாக பின்னர் பார்க்கலாம்.

இங்கே மூச்சு முக்கியமாக பேசப்படுவதற்கு காரணம் , இவ்வுடலில் பிராணனை உற்பத்தி செய்ய முக்கிய கருவியாக இருப்பது மூச்சு என்பதால் பிராணாயாம பயிற்சிகளை பிராணனுடன் இணைத்து பேசுவது வழக்கம்.

ஒரு நாளைக்கு 21600 வந்து செல்லும் இயல்பான மூச்சை, ஒரு சில குறிப்பிட்ட மூச்சு பயிற்சிகளின் மூலம் , ஒரு நிமிடத்தில் 15மூச்சு விடும் நாம் 10 அல்லது 8 என குறைப்பதன் மூலம் ஆயுட்காலத்தை நீட்டித்துக்கொள்ள முடியும் என யோக மரபும் , ஆயுர்வேத மரபும் நம்புகிறது.

அது மட்டுமன்றி  மூச்சே மனதையும் உடலையும் இணைப்பதால் மூச்சு மாறுபட மன இயல்புகளும் மாறுபடுகிறது, ஒரு பதட்டமான சூழ்நிலையில் நீங்கள் ஒரு நிமிடத்தில்  15 முதல் 21 தடவை விடும் மூச்சு, மனம் அமைதியானவுடன் 8 அல்லது 10 என்கிற  குறைந்து விடுகிறது. ஆக மனதை நிர்வகிக்க மூச்சும் , மூச்சை நிர்வகிக்க மனமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுகிறது.

 

சரியாக  தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஆசன பயிற்சிகளின் மூலம் ஒரு ஹடயோகி எப்படி தன்னை உயிராற்றலின் மையமாக மாற்றிக்கொள்கிறானோ, அப்படியே  மிகச்சரியாக தேர்ந்தெடுக்கப்படும் உணவு , உறக்கம் ,பிராணாயாம பயிற்சிகளின் மூலம் மொத்த உயிராற்றலையும் தனக்கு தேவையான வேறு ஒரு ஆற்றலாக மாற்றி அமைத்துக்   கொள்ள முடியும்,

கொந்தளிப்பான மனதை, செயலூக்கம் கொண்ட சுறுசுறுப்பான மனமாகவோ, சோர்வான உடலை ஓய்வான உடலாகவோ , ஒருமுகத்தன்மை இல்லாத புத்தியை ஒரு கலையாகவோ , படைப்பாகவோ , கூர்மையான பேச்சாற்றலாகவோ  மாற்றிக்கொள்ள முடியும்.

எனினும் இது மூச்சை சரியான நிகர்நிலையில் உள்ளிழுத்தல் ,வெளியிடுதல், குறிப்பிட்ட விகிதத்தில் உள்ளே மற்றும் வெளியே நிலை நிறுத்துதல் என்கிற பல்வேறு   அங்கங்களை கொண்டது என்பதால் , சிறு மாறுதல் கூட ஒவ்வாமையை , எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும். ஆகவே ஆசனப்பயிற்சிகளுக்கு பின்னர் பிராணாயாமம் என்பது, பதஞ்சலி முனிவரின் பரிந்துரை. அதற்கு தக்க ஆசிரியர் கிடைப்பதும், அவரிடம் கற்பதும் மட்டுமே சரியான தீர்வாக அமையும். ஏனெனில் நூற்றுக்கணக்கான பிராணாயாம முறைகள் வழக்கத்தில் உள்ளது , இவற்றில் உங்களுக்கான ஒன்றை தேர்தெடுப்பது மிகவும் அவசியமானது.

  

Friday, March 22, 2024

YOGA-2

 

ஹடயோகியின் உன்னத உடலை அடைதல்.

-----

அன்னமயகோசம் எனும் ஆடல் களம்

 

ஒவ்வொரு நூற்றாண்டிலும் யோகமரபின் பயிற்சியும், தேவைகளும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர்  யோகம் என்பது  சித்திகளை அடைதல் , தாந்த்ரீக பயிற்சிகளை கற்று,  தேர்ந்து அமானுஷ்யங்களை செய்து காட்டுதல் என்கிற நிலையில் தான் இருந்திருக்கிறது, 19ம் நூற்றாண்டுக்கு பின்னர் தான்  யோகக்கல்வி உலகம் முழுவதும் பரவலாக்கப்பட்டு , அன்றாட தேவைக்கான மாற்று சிகிச்சை , மற்றும் அடிப்படை ஆரோக்யம் போன்ற காரணிகளுக்காக பயிலப்படுகிறது.

 

நாம் உண்ணும் உணவே நம் உடல் என்றாகிறது. உண்ணும் உணவு அனைத்துமே அன்னம் என்றே அழைக்கப்படுவதால் , அன்னத்தால் உருவான இந்த தளம். அன்னமய கோஸம்.

 

நாம் முன்னரே பார்த்த பஞ்சகோஷம் எனும் ஐந்து தளங்களிலான இந்த மனித வாழ்வில் , முதல் மூன்று தளங்களில் தான் நாம் அன்றாடம் துயரை அனுபவிக்கின்றோம். ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு ஒருமுறை நம் உடல் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைகிறது. உதாரணமாக நீங்கள் இந்த கட்டுரையை படிக்க அரைமணி நேரம் ஆகுமெனில், படிக்கத்தொடங்கிய போது இருந்த உடலல்ல கட்டுரை முடியும்போது இருக்கும் நிலை . உங்களுடைய காலோ , முதுகுப்பகுதியோ, கழுத்தோ, இறுக்கமாகி இருக்கும் அல்லது கணமாகவோ , உளைச்சலுடனோ இருப்பதை உணரமுடியும்.

நம் ரயில் பயணங்களில் கவனித்திருக்கலாம் மனிதர்கள் தொடர்ந்து தங்களை அசைத்துக்கொண்டே இருப்பதையும், அரைமணி நேரத்தில் அசூயையாக உணர்வதையும், கூன் போட்டு உட்கார்ந்த ஒருவர் நிமிர்ந்து சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டு மீண்டும் கூன் போட்டு அமர்ந்து மொபைலை பார்த்துக்கொண்டிருப்பதையும் பார்க்க நேரிடுகிறது. இந்த உடல்கள்  என்ன சொல்கின்றன ?

நான் சமநிலையில் இல்லை. என்னை சீர் செய் - என்பது தான் அதன் குரல்.

 

இது நமது  முதல் தளமான அன்னமய கோஷத்தில், நிகழ்கிறது.

 

நீங்கள் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும், அல்லது நாள் முழுவதும் செயலேதும் செய்யாமல் ஓய்வில் இருந்தாலும் , இந்த உடல் தொடர்ந்து  ஒரு குறிப்பிட்ட மாற்றத்திற்கு உட்படுகிறது. உலகின் மிக மிருதுவான, குதிரையின் மென்முடியால் நெய்யப்பட்ட  ஆடம்பரமான,   மெத்தையின் பெயர் ''விவிடஸ் '' என்பதாகும், இதன் விலை கிட்டத்தட்ட 12லட்சம் ரூபாய்கள். ஒருவேளை நாம் இதில் படுத்து நாள் முழுவதும் ஓய்வெடுத்தால் கூட நமது அன்னமய கோசம், எனும் நம்  உடல்  ஒரு சமநிலையின்மையை அடையும். 

 

ஆக இந்த உடல் அடையக்கூடிய சமநிலையின்மையை நீக்க வெறும் ஒய்வு என்பது போதாது அதையும் தாண்டி வேறு ஒன்று தேவையாகிறது.

 

யோகமரபை பொறுத்தவரை இந்த சமநிலையின்மையை நீங்குவதையே முதல் குறிக்கோளாக கொண்டு, சில பயிற்சிகளை ஏற்படுத்தி வைத்துள்ளனர், சில என்பது ஆரம்பகால நூல்களில் 84 என்று இருந்தது.  இன்று 1500க்கும் மேற்பட்ட பயிற்சிகளாக உருமாறியுள்ளது.

இந்த இடத்தில நமக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். இத்தனை பயிற்சிகளை நான் எப்போது கற்று தேர்வது ?என .

ஆகவே நாம் பதஞ்சலி முனிவரின் சொல்லை கேட்கலாம்.

பதஞ்சலியின் யோக சூத்திரத்தின் படி. 'சுகம் , ஸ்திரம் , ஆசனம்'

அதாவது எந்த நிலையை நீங்கள் இருக்கும் போது  சுகமாகவும் , ஸ்திரமாகவும் உணர்கிறீர்களோ அதற்கு பெயர் ஆசனம்.

இதில் ஒரு நுட்பமும் இருக்கிறது உதாரணமாக உங்களால் இரண்டுமணிநேரம் நாற்பது நிமிடங்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் அமரவோ, நிற்கவோ முடிந்தால் உங்களை ஒரு யோகி என நீங்கள் சொல்லிக்கொள்ளலாம்.

 

 

பதஞ்சலியின் சொல்லை இத்துடன் இணைத்துத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

அதே நேரத்தில் நவீன அறிவியல் ,உடலியங்கியல், போன்ற துறைகளின் கருத்துக்களையும் நாம் முக்கியமாக கருதவேண்டியுள்ளது.  ஒரு ஆரோக்கியமான உடல் என்பதற்கு நவீன அறிவியல் பல்வேறு அளவீடுகளை வைத்துள்ளனர். அவற்றை அடைவதன் மூலமாகவும் நாம் ஒரு யோகியின் உடலை அடைந்து விடலாம். அவற்றில் முதன்மையானது 

வளைந்து நெளியும் தன்மை  {FLEXIBILITY}  திடம் { STRENTH }  சமநிலை {SENSE OF BALANCE }

சுறுசுறுப்பு { AGILITY }  சீரான உடற்கட்டுமானம் { STRECTURAL ALIGNMENT}

இப்படி பல்வேறு அளவீடுகள் இருந்தாலும் மேலே சொல்லப்பட்டவை தான் அடிப்படை அந்த அடிப்படையை அடைய , உற்ற துணையாக உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருவி தான்  ஹடயோகம் என்பது.

ஒரு ஹடயோகியின் உடல் என்பது உன்னதமான ஒன்று அது தன்னை உயர்நிலை ஆற்றலில் வைத்துக்கொள்வதுடன், சுற்றியிருக்கும் ஓவ்வொரு உயிரையும், ஆற்றல் மையமாக தூண்டக்கூடியது.

நீங்கள் சரியான பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்யத்தொடங்கிய சிறிது காலத்தில் , அதாவது  3 மாதங்கள் முதல் ஒரு வருடத்தில், உங்கள் உடலின் விஷத்தன்மையை, சமநிலையின்மையை, சோர்வை, சலிப்பை , கடந்து விடுவீர்கள்.  

இது ஹடயோகியாக நீங்கள் மாறுவதற்கான முதல் தகுதி.

சரி இதை எங்கிருந்து துவங்குவது ?

நாம் சதாசர்வ காலமும் உடலே பிரதானம் என திளைத்துக்கொண்டு  அல்லது  நினைத்துக்கொண்டு இருப்பதால் ,  அதற்கான பயிற்சிகளை  உடலிலிருந்தே தொடங்கலாம். அப்படி உடலை மையமாக வைத்து இயக்கக்கூடிய பயிற்சியாலேயே யோகமரபு ஆசனங்கள் என்று வகைமை படுத்துகிறது.

ஒருவர் வெறும் 12 ஆசனங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த உடலின் அனைத்து சாத்தியங்களையும் அடைந்துவிடமுடியும்.

எனினும் அவற்றை தேர்ந்தெடுப்பதில் தான் சவாலே இருக்கிறது. 1500க்கும் மேற்பட்ட பயிற்சிகள் இருந்தாலும் ,  உங்கள் உடலுக்கான பயிற்சி எது என்பதை ஒரு  நல்லாசிரியரின் துணையுடன் தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

Featured Post

Maleysia yoga retreat

 Malaysia yoga retreat https://www.jeyamohan.in/199529/