Sunday, April 7, 2024

YOGA- 6

 


இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே !!!

 

 

 இந்த நாள்  மிகச்சிறப்பாக அமைந்தது என்பதை நாம் அனுபவிக்கக்கூடிய தளங்கள் தான் முதல் மூன்றும்.  உடல் இலகுவாக, சொன்ன வண்ணம் இயங்கிக்கொண்டும் , ஒருவித துள்ளலுடனும், பெரும்பாலான வேலைகளை ஒரு நடனம் போல இயல்பாக நிகழ்த்த முடிந்தால் , உடலில், அதாவது அன்னமய கோசத்தில்  இன்பத்தை அடைந்திருக்கிறீர்கள் என்றே பொருள். சுறுசுறுப்பும் உற்சாகமும் பாட்டும், சிறு விசிலும் , களைப்பின்றியும் இந்த நாள் முடிந்தால் , உங்கள் பிராணமய கோசத்தில் அதன் முழுமையை அனுபவித்து இருக்கிறீர்கள் என கொள்க. எவ்வித பதட்டமுமின்றி மனம் ஒரு ரம்யமான இசை போல ஒழுகிச்சென்று, மீண்டும் மீண்டும் உதட்டிலும் மனத்திலும் புன்னகையை நிறைத்து வைத்திருந்தால், உங்கள் மனோமய கோசம் அதன் முழுமையை அடைந்து ததும்பி நிற்கிறது என்றே உணர்க. இதற்கு நேர்மாறாக இந்த மூன்று கோசத்திலும் நிகழ்ந்தால் அந்த நாள் ஒரு ஒவ்வாத நாளாக நாம் அனுபவிக்கிறோம்.  ஆக , நமது வாழ்வின் பெரும்பகுதி முதல் மூன்று தளத்தின் முழுமையிலும் , போதாமையிலும் தான் அமைந்து இருக்கிறது. ஒரு ஹடயோகியானவன் , சாதகன்,  அடையக்கூடிய அடிப்படை பயன் என்பது இந்த முக்கோண தளத்தை இணைப்பது தான்.  ஒன்றுடன் ஒன்று இணையாமல் துண்டிக்கப்பட்டிருந்த இந்த முக்கோணத்தின் முனைகள் மிகச்சரியாக,  ஒரு பயிற்சி திட்டத்தின் மூலம், இணைக்கப்படட உடனேயே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் இந்த முக்கோண வடிவம் {  உடல், உயிராற்றல்  மனம் } முழுமையை வெளிப்படுத்துகிறது, அந்த சாதகன் சாமானியன் யாரை விடவும், அனைத்திலும் ஒரு படி மேலானவனாகிறான்.

 

எனினும் இந்த மூன்று தளங்களின் ஒருங்கிணைப்பு மட்டுமே ஒரு முழு வாழ்வை தந்துவிடாது என்பதால், யோகமரபும் , வேதாந்த மரபும் மேலும் சில தளங்களை சொல்கிறது, நான்காவது தளமான  விஞ்ஞான மாய கோசம் பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம், இந்த நான்கு கோசங்களும் ஒன்றில் ஒன்றென சரியாக அமைகையில், நாம் ஆனந்த மய கோசம் எனும்  தளத்தில் சென்று அமர்கிறோம்.

இந்த ஐந்தாவது தளத்தை பற்றி விளக்குவதில் இருக்கும் மாபெரும் சவாலே, எத்தனை சொற்களை போட்டு நிறைத்தாலும் இன்னும் சொல்வதற்கு மீதமிருக்கும் நிலை அது, ஆகவே அத்தனை  மகான்களும் தாங்கள் உணர்ந்த அல்லது அனுபவித்த இந்த நிலையை பற்றி, உவமையாக சிலவற்றை சொல்ல முயற்சி செய்கின்றனர்.

உதாரணமாக இரண்டு உவமைகள் இங்கே பேசப்படுவதுண்டு. ஒன்று  தேனின் சுவை - நான் எவ்வளவு தான் தேனின் சுவை பற்றி உங்களுடன் மணிக்கணக்காக உரையாடினாலும், இனிமை , இனிப்புச்சுவை, தித்திப்பு, என்கிற வார்த்தைகளை உபயோகித்தாலும்,  இனிப்பு பற்றி அறிந்திருக்காக ஒருவருக்கு சொல்லி புரிய வைக்கவே முடியாது , ஆனால்  எந்த மொழியும் தெரியாத ஒருவருக்குக்கூட  ஒரு சொட்டு தேனை கொடுத்தால் அவர் அதை அனுபவமாக மாற்றிக்கொள்ள முடியும். இது தான் ஆனந்த மய கோசம் பற்றி சொல்ல முடியக்கூடிய முதல் உவமானம்.

அடுத்ததாக இறைநிலை அல்லது இரண்டற்ற இறையுடன் கலந்தநிலை   என்பதை குறிப்பிட  'உப்புப்பதுமை கடலில் கரையும்' உவமானம்.

உபநிடதங்கள் நம் இருப்பை அன்னமயம், பிராண மயம் , மனோமயம் , விஞ்ஞான மயம்  ஆனந்த மயம் என படிப்படியாக ஏறுவரிசையில் சுட்டுகிறது.  இதில் ' மயம் ' என்பது மயட் '' என்கிற வேர்ச்சொல்லின் திரிபு. இதற்கு ''ஒன்றாலேயே ஆனது'' அல்லது ''ஒன்று மற்றொன்றாக மாறுவது, நிரப்பப்படுவது''. என பொருள்  ஆக, ஆனந்த மயமான நிலையை அடைவதேயே, அதாவது ஆனந்தமே உருவான பிரம்மத்தை அல்லது முழுமுதல் நிலையை அடைவதையே குறிக்கோளாக கொண்டுள்ளது நமது மரபு. யோகமரபு பிரம்மத்தை அடைவதை குறித்து எதுவும் பேசுவதில்லை, அது முற்றிலும் சமாதிநிலை அல்லது கைவல்ய நிலை குறித்து மட்டுமே பேசுகிறது.

 

 

ஆக  ஒரு பயிற்சி என்பது படிப்படியாக ஒருவரை இந்த ஐந்து கோசங்களிலும், ஒரு மாபெரும் மாற்றத்தை, ஏற்படுத்தி, சிறிது சிறிதாகவேனும் நம்மை மேம்பட்ட நிலையை நோக்கி அழைத்துசெல்ல முடிந்தால் அப்படியான ஒரு பயிற்சி திட்டத்தை நாம் வாழ்நாள் முழுவதும் கைகொள்ளலாம்.

அதில் யோகப்பயிற்சிகள் மிக சாதகமாக இருப்பதால், நமக்கான ஒரு குறிப்பிட்ட திட்டத்தை  தேர்ந்து எடுக்கலாம். பயிலலாம், அதன் பயன்களை அடையலாம்.

எனினும் சரியான யோகக்கல்வி என்பதை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றி நம் அனைவருக்குமே, தயக்கமும் ,குழப்பமும் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு நோய்க்கான மருந்தை தேர்ந்தெடுப்பதில் , நம் குழந்தையின் மேல்படிப்புக்கான கல்லூரியை தேர்ந்தெடுப்பதில் , எப்படி நாம் அடிப்படையான சில அளவீடுகளை வைத்திருக்கிறோமோ, அதே போலத்தான் ஒரு நல்ல யோகக்கல்வியை அல்லது பயிற்சியை தேர்ந்தெடுப்பதிலும் சில அளவீடுகள் இருக்கிறது.


Featured Post

Maleysia yoga retreat

 Malaysia yoga retreat https://www.jeyamohan.in/199529/