சன்னதத்தில் பங்கெடுத்தல்
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் ''வீடடங்கு '' காலத்து கதைகள் பற்றி .
இலக்கியம் கொடுக்கக்கூடிய ஆகச்சிறந்த கொடை என்பது , நம் ஒரு வாழ்க்கைக்குள் ஆயிரம் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விடுவது தான் . அதிலும் யோசித்து கதை எழுதுபவர்களை தாண்டி , தன்னை மீறி நிகழும் கதைகளை படைப்பவர்களுக்கு, ஒரு வரி , ஒரு மெல்லிய உணர்வு போதுமானதாக இருக்கிறது , அதில் அவர்கள் பேரிலக்கியம் என்று சொல்லத்தக்க அனைத்தையும் படைத்து விடுகிறார்கள் . ஆகவே அவர்கள் ''மாஸ்டர்கள் '' என அங்கே நிலைத்து நின்று விடுகிறார்கள் . அந்த நிரையில் வைக்கத்தக்க ஆளுமை எனில் இன்று தமிழில் எழுத்தாளர் ஜெயமோகன் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருப்பதில்லை . அல்லது அவரை { படிக்காமல் } மறுப்பதன் மூலமாகவும் அவர்கள் ஜெமோவை ' மாஸ்டர் '' நிரையில் கொண்டு நிறுத்துகிறார்கள் .
ஒருவர் இன்று ஜெயமோகன் படைப்புகளை படிக்க தொடங்கினால் கூட முழுவதுமாக, படித்து முடிக்க இன்னும் பத்து வருடங்களுக்கு தேவையான அனைத்தும் கொட்டிக்கிடக்கிறது . அதே வேளையில் இதுபோன்ற ஊரடங்கு , வீடடங்கு காலகட்டத்தில், நம்மை நோக்கி கொட்டிக்கொண்டிருக்கும் , ஆயிரக்கணக்கான எதிர்மறையான , சலிப்பூட்டக்கூடிய , உளச்சோர்வை அளிக்கக்கூடிய , செய்திகளில் இருந்து மீள, சற்றேனும் விலகி இருக்க , வாசிப்பு ஒரு நல்ல மருந்து , அதிலும் இந்த ''புனைவுக்களியாட்டு '' 69 கதைகளும், அதன் அடுத்தகட்ட '' கதைத்திருவிழா -" தொகுப்பும், தமிழில் ஒரு சாதனை.
இந்தப்பதிவு முதல் 90 கதைகளை முன்னிறுத்தி, தொகுத்துக்கொள்ள ஒரு முயற்சி .
முதலில் கதைகளின் தலைப்புகள் பற்றி ,
பெரும்பாலும் சிறுகதைகளின் '' தலைப்பு'' என்பது அந்த கதையின் ஏதேனும் ஒரு தருணம் அல்லது கதைமாந்தர் தலைப்பை கதையினுடாக வந்து சொல்லிவிட்டு செல்வது, நமக்கு பழகிய சிறுகதை வடிவம்..
இந்த கதைகளில் பெரும்பாலானவற்றை ஜெமோ அதை ஒரு "ஆப்த வாக்கியம்" எனும் முறையில் அமைத்திருக்கிறார். பொதுவாக மறைநூல்களில், நீண்ட உரையாடலுக்குப்பின் அல்லது நடுவில் இந்த 'ஆப்த வாக்கியம் '' அமைந்திருக்கும். மொத்த உரையாடலையும் விதை வடிவில் சுருக்கி வைத்துக்கொள்ள ஒரு சொல் அல்லது சொற்ச்சொடர்.
உதாரணமாக சுக்ரர் எனும் கதையில் வரும் கடைசி வரிகள். கிரிமினல்களை பிடிப்பதில் நீண்ட அனுபவம் கொண்ட பணிநிறைவு ஆனபின்னும் , தன்னிடம் இருக்கும் தனித்திறமையை, காவல் துறைக்கு உதவுவது . என்று வாழ்ந்துவரும் அரிகிருஷ்ணன். உரையாடல் .
“ஐயா கடைசியா ஒரு கேள்வி” என்றேன். “உங்க நினைப்பு முழுக்க கிரிமினலும் கிரைமுமா இருந்திட்டிருக்கு… நீங்க பெருமாளுக்கு முழுமனசு குடுக்கவேண்டியவரு… இப்டி ஆயிட்டோமேன்னு நினைக்கிறதில்லியா?”
“தம்பி, இது பெருமாளில்லைன்னு யாரு சொன்னது?” என்றார். என் தோளில் தட்டிவிட்டு சிரித்தபடி ஸ்டீபனின் தோளைப் பற்றிக்கொண்டு நடந்துசென்றார்.''-
அன்னம் எனும் கதையில் வரும் ''அதனாலென்ன ' ஒரு ஆப்த வாக்கியம்
சூழ்திரு கதையில் வரும் ''“லச்சுமியும் சரஸ்வதியும் ஒண்ணுல்லா” என்றார் நாணுக்குட்டன் நாயர்'' என்கிற வரிகள் ஒரு ஆப்த வாக்கியம்.
இப்படி வாக்கியங்களால் சென்று தொடக்கூடிய கதைகள் கிட்டத்தட்ட பதினைந்து இருபது கதைகள்.
அடுத்ததாக கதையின் தலைப்பு கதையின் போக்கோடு உடன்வந்து, ஒருமுறை சொல்லப்பட்டு மீண்டும் கதைக்குள் சென்றுவிடுவது . உதாரணமாக ''கைமுக்கு'' போன்ற கதைகள். இதில் ''கைமுக்குதல்'' எனும் நிகழ்வு கேரளாவில் ஒரு சாட்சிய முறை. ஆனால் கதை நடப்பதோ ஒரு பெருநகரில்.
ஒளச்சேப்பச்சன் {சார் இந்த பேரை தட்டச்சுவதற்குள், கதையின் அத்தனை உள்ளீடுகளும் புரிந்துவிடும் போல} எனும் உளவுத்துறை அல்லது போலீஸ் அதிகாரி தன் நண்பர்களுக்கு சொல்லும் துப்பறியும் கதையில், மேற்சொன்ன நிகழ்வு பற்றி ஒரு பத்தியில் சொல்லிவிட்டு, கதைக்குள் சென்றுவிடுவார். இந்த வகைமைக்குள் வரும் கதைகளாக , " பெயர் நூறான் " ஆபகந்தி'' குருவி ' போன்ற கதைகளை சொல்லலாம்.
மீதம் இருக்கும் தலைப்புக்கள் மாய -யதார்த்த கதைகளுக்கு போடப்படும் தலைப்புக்கள் போன்று ஒலிக்கும், 'மணிபல்லவம்' 'எழுகதிர்', 'காக்காய் பொன்'. போன்றவை .
இப்படியாக தலைப்புகளை வைத்து ஒவ்வொரு படைப்பையும் நீண்டநாள் நினைவில் கொள்ளவும் , கதையின் மையத்தை சென்று தொடவும். வாசகருக்கு ஒரு நல்வாய்ப்பை வழங்கி இருக்கிறார் .
அடுத்ததாக,
கதைகள் நிகழும் களம்,காலம் மனிதர்கள் .
என் தாயார் திருநெல்வேலி {நாங்குநேரி } தந்தை மதுரை {சின்னமனூர் } ஆக வளர்ந்தது என்று சொன்னால் வருடத்தில் பாதி நாட்கள் இங்கும் அங்கும் என கடந்தது . நண்பர் ஜாஜா {ராஜகோபாலன்} இவர் குடிச்ச ஒரு டம்ளர் தண்ணீல பாதி தான் தாமிரபரணி தண்ணீர்' என்று தான் அவருடைய மற்ற நண்பர்களுடன் என்னை அறிமுகம் செய்து வைப்பார்.
எனினும் பெரும்பாலான கதை நிகழும் களம், பேசும் வட்டாரமொழி எனக்கு மிகவும் அணுக்கமானது . அல்லது என்னுடைய பிரார்த்தனைகளில், உபயோகிப்பதும் இந்த கதை மாந்தர்கள் பேசும் மொழியைத்தான் போலும்.
ஆகவே மொத்த கதைகளையும் முடித்தபின்னர் தோன்றியது . இங்கே வீடு முழுவதும் நிரம்பி இருப்பவர்கள் , அல்லது புழங்கிக்கொண்டு இருப்பவர்கள் , டீக்கனாரும் ,பெருவட்டரும் , கரடி நாயரும் தான் என. ஒருவேளை இந்த 'லாக் டவுன் -5,6, என தொடர்வதுபோல கதைத்திருவிழா 2, 3, என தொடருமெனில் , என் மனைவி, ' தங்கையா நாடாருக்கும் ,டீக்கனாருக்கும் ,கரடி நாயருக்கும் , சாயை எடுக்கட்டா? என கேட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. . அவ்வளவு இயல்பாக ஒரு ஊரே நம் அகத்துக்குள் புகுந்து விடுகிறது. அனந்தன் ,லாசர் ,சின்னக்குட்டி என ஒரு குழந்தை உலகமும் , விசாலம்மை ,சந்திரி ,ஸ்ரீதேவி , 'எல்லா ஆன்ஸெல்' அம்மிணி தங்கச்சி' மலையரசி பார்வதி பாய் - என மாபெரும் பெண்களின் உலகமும். அலுவலக உலகம், மாய உலகம் ,விலங்குகளின் உலகம் என சுழலுக்குள் இறங்கி சென்று கொண்டே இருக்கலாம் .
உணர்ச்சி கொந்தளிப்பான கதைகள் என சமஸ்தான கதைகளை சொல்லலாம் , போழ்வு , இணைவு ,மலையரசி ,வண்ணம், கழுமாடன், ஆயிரம் ஊற்றுக்கள் ,போன்றவை. அவை நிகழும் காலம் அதன் உள் அரசியல், உக்கிரமான சாய்வுநிலைகள் நமக்கு இன்று எந்த வகையிலும் சம்பந்தமற்றவை எனினும், சம்பவங்கள் உணர்ச்சிகரமானவை என்பதால் நம்மை இருத்தி உட்காரவைப்பவை .
விலங்குகளை அதன் குழந்தைமையை, அல்லது அவற்றில் உள்ளுணர்வு எழும் தருணங்களை மையமாக கொண்ட கதைகள் என ஆணையில்லா'' - முத்தகங்கள்'' ''லூப்'' -''பூனை'' -''துளி'' போன்ற கதைகளையும் , பொதுவாக யானையும் ,நாகமும் அதிகமாக எழுதப்பட்டுவிட்ட ஜெயமோகன் கதைகளில் , சிங்கம் { சிந்தே} ,குரங்கு{சாவி } , சிறுத்தை{மாயப்பொன் } , உலாவும் கதைகள் இந்த தொகுதியில் சற்று புதிது .
இந்த தொகுதியில் இருக்கும் அலுவலக கதைகள், பொதுவான அலுவலக கதைகளிலில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை , இவை அலுவலக அரசியல் , அல்லது மெல்லுணர்வு காதல் போன்ற ' அங்கீகரிக்கப்பட்ட அலுவலக'' கதைகளிலில் இருந்து சற்று மாறி , அன்றாட நிகழ்வுகள் ,அவற்றில் தற்செயலாக அமைந்துவிடும் உன்னதமான தருணங்கள் என்கிற வகையை சேர்ந்தவை. உதாரணமாக ''வானில் அலைகின்ற குரல்கள் '' வான் நெசவு'' வான்கீழ் போன்ற கதைகள்
இறுதியாக, சாமானிய மனிதரில், லௌகீக வாழ்வில் சற்று பிந்தி விட்டவர்களில் , ஒரு மெல்லிய கிறுக்குத்தனம் உள்ளவர்களில் , தெய்வம் எழும் தருணங்கள் , அல்லது அவர்கள் அடையும் உன்னதங்களை தொடும் கதைகள் .
ஏதேன் கதையின் சாம் ஜெபத்துரை, லூப் கதையில் வரும் ஞானம் எழுகதிரில் வரும் ஸ்ரீகண்டன் , பத்து லட்சம் காலடிகளில் வரும் ''சாஹிப் '' முது நாவல் கதையின் ' சூஃபி'' ராஜன் கதையில் வரும் பூதத்தான் , கணக்கு கதையில் வரும் காளியன் என ஒரு நீண்ட வரிசை உண்டு அதில் முத்தாய்ப்பாய் ஒரு சூழல் தெய்வத்தருணம் ஆகுமெனில் அது. ஏகம் கதையில் வரும் அந்த 'இசை' சூழல் தான்.
இந்த கதைகள் போக , கரு மற்றும் தங்கப்புத்தகம் என்கிற இரண்டு குறுநாவல்கள் ஒரு தத்துவார்த்த , மாய ,ஆங்கில படங்களுக்கு நிகரான காட்சி அமைப்புகள் கொண்டவை. மிகஉறுதியான மரபு பின்னணி இன்றி இவ்வகை கதைகளை எழுத ஒருபடைப்பாளி துணிய முடியாது . அதே வேளையில் , இவ்வகை கதைகள், மேலும் கற்பனையை தூண்டி குழந்தை கதைகளாக ஆகும் தன்மை கொண்டவை . என் நான்கு வயது மகனுக்கு ''ஷம்பாலாவுக்கு செல்வதும் புத்தகத்தை எடுப்பதும் அங்கிருந்து மணிபல்லவம் வந்து கடலில் மூழ்கி அட்ஷய பாத்திரத்தை எடுத்து வந்து பாரத பிரதமரிடம் { அதிலேதான் எவ்வளவு நூடுல்ஸ் கேட்டாலும் வருமே} கொடுத்து 'சர்ப்ரைஸ் கிஃப்டாக அவர் கொடுக்கும் மெடலும் இன்று கனவுகளில் தினம் எழுபவை. சுவாமி முக்தாவுக்கு ஒரு பாட் போல இவனுக்கு சோட்டா பீமனும் , பால கணேசனும் கூட்டுக்காரன்கள். இன்னும் திபெத்தில் தான் சுத்திக்கிட்டு இருக்கானுக.
இந்த அனைத்து கதைகள் பற்றியும் ஏராளமான விமர்சனங்கள் , வாசிப்பு அனுபவங்கள், கடிதங்கள் என நூற்றுக்கணக்கில் வெளிவந்துவிட்டன , இன்னும் வரும் . நான் எழுதுவது எனக்குள் தொகுத்துக்கொள்ளவே என்பதால் ஒவ்வொரு கதை பற்றிய தனித்தனி விமர்சனங்களை எழுதவில்லை. அந்த அத்தனை கடிதங்கள் வழியாக கதைகள் தங்களை திறந்து கொள்கின்றன . அல்லது 'வெளிச்சப்பாடு' நடக்க காத்திருக்கின்றன . உதாரணமாக ஜெயமோகனின் நீரும் நெருப்பும் கதை 2013ல் எழுதப்பட்டது. அதன் சரியான வாசிப்பு சாத்தியத்தை அடைய ஏழு ஆண்டுகள் ஆனது , வாசக நண்பர் பாஸ்கர் அந்த சாத்தியத்தை நிகழ்த்தினார் .https://www.jeyamohan.in/129466/ இந்த பதிலில் ஜெ சொல்வதுபோல அனைத்து கதையும் இன்றே விடையளித்துவிட வேண்டும் என்பதில்லை . சித்தத்தில் உறைந்து என்றேனும் வெளிப்பாடு நிகழலாம் . தொடர் வாசிப்பு அனைத்துமே ஏற்கனவே பயின்றதை சரியான வகையில் அனுமவமாக மாற்றிக்கொள்ள மட்டுமே . நான் இந்த கதைகளின் மூலம் சாத்தியப்படுத்த நினைப்பதும் அதுவே . ஒவ்வொரு கதையும் எனக்கு எந்த வகையில் பொருள் படுகிறது , இதில் நான் யார் ? எனக்கானது என்ன? என பொருத்தி பார்க்க மட்டுமே. தொடர்ந்து வாசிக்கிறேன் .இந்த நூற்றாண்டின் சிந்தனையாளர்களில் ஒருவரான யுவால் நோவா ஹராரி, 'தியானம் ' செய்தல் பற்றி கூறுகையில் ''மனதையும் ,மூளையையும் ' இரண்டுபுறமும் திறந்து திறந்து சென்று கொண்டே இருப்போம், அது அபாரமான வல்லமையை தரக்கூடியது . ஆகவே . அறிவுச்செயல்பாடுகளுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் உள்ளுணர்வு செயல்பாடுகளுக்கும் தருவது, நம்மை முழுமையை நோக்கி கொண்டு செல்லும் ''-
சோட்டாணிக்கரை போன்ற உணர்ச்சி கொந்தளிப்பும் , சடங்குகளும் நிகழும் இடங்களில் ஒன்றை காணலாம் , நம் அருகில் வரிசையில் நின்று கொண்டிருக்கும் , சற்று கண் ஜாடை காட்டிக்கொண்டு, வெட்கி திரும்பி மீண்டும் ஓரக்கண்ணால் பார்த்தபடி, வரிசையில் நகர்ந்து செல்லும் , யாரோ ஒரு பெண் பூசை தொடங்கிய சிறிது நேரத்தில் வீறிட்டு கத்தி கதறி , சுழன்று , தலைவிரி கோலமென கிடப்பாள் , அடுத்த சில நிமிடங்களில் 20-30 பேர் இருக்கும் கூட்டத்தில் 10-12 பேருக்கு சன்னதம் வந்திருக்கும் .துடித்தாடிக்கொண்டு இருப்பர் .
இந்த கதைகளில் நிகழ்வது அதுதான் , இது ஒரு அறிவு செயல்பாடு அதே வேளையில் , ஒவ்வொரு கதையும் ஒரு வரியில் துள்ளித்தெறித்து ,சுழன்று, சன்னதம் போல ஒரு தருணத்தை அடைகிறது . நாம் செய்யக்கூடியது ஒன்றே இந்த சன்னதத்தில் பங்கு கொள்ளுதல் மட்டுமே.